»
S
I
D
E
B
A
R
«
KalHoNaHo
Oct 21st, 2008 by பத்மா அர்விந்த்

தினம் தினம் போரில் இறக்கும் வீரர்கள், அநியாயமாக இறக்கும் குழந்தைகள், பெண்கள் ஆண்கள் என்பது இப்போதெல்லாம் சர்வசாதாரணமாகி விட்டது என்றாலும் நமக்கு தெரிந்த ஒருவரின் பெயரோடினைத்து வரும் போது புரிந்து கொள்ள முடியாத அதிர்ச்சியும் சோகமும் சேர்ந்துகொள்கிறது. அதிலும் இந்த ஒரு வருடமாக நான் பார்த்த மரணங்கள் அனேகம், அதிலும் நண்பர்கள், அவரின் மனைவி அல்லது கணவன், மகனாலேயே சுட்டுக்கொல்லப்பட்ட நண்பர் என்று அனேகர். ஒருவருக்கு மூளை புற்றுநோய் என்றால் இன்னொருவருக்கு நுரையீரல், பிறிதொருவருக்கு கணையம். மரணத்தின் விளைவை புரிந்தும் புரியாமலுமாக இருக்கும் குழந்தைகள் என்பதை பார்க்கும் போது அதுவும் தொடர்ச்சியாக நிறைய இறுதிச்சடங்குகளில் கலந்து கொள்ளும் போது நமக்கே அந்த மன அழுத்தம் தொற்றிக்கொள்கிறது. நாளும் பார்க்கிற கேட்கிற மரணங்களால் மறத்துப்போன மனசுதான் என்றாலும் கூட தெரிந்தவர்கள் என்னும்போது தடுமாறித்தான் போகிறது.

ரேடியோக்கதிர் சிகிச்சை அளிக்கும் இடத்தில் நிறைய பேர் தங்கள் துணையுடன் காத்திருக்கிறார்கள். யாரும் யாருடனும் பேசுவதும் இல்லை. ஆனால் ஒவ்வொருவராக வர வர அறிமுகம் ஆனதன் அடையாளமாக ஒரு புன்னகை. நிசப்தம், கவலை அப்பிய முகங்கள். உரையாடல் இல்லாமலேயே ஒரு நட்பு தொடங்குகிறது. குறிப்பிட்ட குழுவில் உள்ளவர்கள் அதே சீராக தொடர்ந்து சிகிச்சைக்கு செல்ல, யாரேனும் வராவிட்டால் புரிந்துகொள்கிறார்கள் அவர் இறந்து போய் இருக்கக்கூடும் அல்லது உடல் நிலை மோசமாகி இருக்க கூடும். புறத்தோற்றம் மாறிவிட்ட போதும் கூட, அலட்சியமாக கவனிக்காத தொனி இருப்பினும் அந்த physical status பாதுகாக்கவே இத்தனை அவஸ்தைகளும் என்பது ஒரு நகைமுரணாக தோன்றுகிறது.

மரணம் என்பதுகூட ஒரு concept என்ற எண்ணம் எனக்கு உண்டு. ஒருவரின் நினைவுகள் இருக்கும் வரை அவருடைய தாக்கம் இருக்கும் வரை அழிவில்லை என்பதும் கூட புரிந்ததுதான். ஆனாலும் ஒரு காலத்தில் இந்த வெப்பமான தொடுகையும், கவலையை, அன்பை, அக்கறையை காட்டும் குரலை கேட்கக்கூட முடியாமல் போகக் கூடுமோ என்ற எண்னம் சில நேரங்களில் ஒருவித சலனத்தை தருகிறது. மரனத்தின் நாழிகை முன்பே தெரிந்தால் மனிதன் இறைவனை மதிப்பானா என்ற வரிகள் கேட்டிருக்கிறேன். இறைவைனை மதிப்பதற்கிருக்கட்டும், துல்லியமாக இல்லாவிட்டாலும் தோராயாமாக தெரிந்தாலே அலைக்கழிக்கிற மனதை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்?

ஆனந்த் திரைப்படத்தில் ராஜேஷ்கன்னா அமிதாபிபிற்கு அறிமுகமாகும் காட்சியில் ஒரு வசனம் வரும். நான் இறப்பது இன்னும் ஆறு மாதத்திற்குள் அதேபோல நீங்கள் இன்னும் ஒரு 60 வருடத்தில் இறப்பீர்கள், ஏன் இத்தனை வருத்தம் என்று. மனம் விசித்திரமானது. நம்மைப்பற்றியே நாம் புரிந்துகொள்ள இன்னும் நிறைய ஆச்சரியங்கள் இருக்கின்றன.

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions