பெண்பால் என்பதும் பெண்மை என்பதும் வெவ்வேறானது. சமுதாயத்தில் பெண்மை என்பது ஒரு சில கடமைகளை குறிக்கிறது.பெண் என்றால் சில கட்டாயங்களும் அழகின் அளவுகளும் வரையறுக்கப்பட்டன. பெண்களின் மார்பகங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டவே என்றாலும் இனப்பெருக்கத்தின் ஒரு உப அங்கமாக இருப்பதால் பெரும்பாலும் விமரிசினத்திற்கும், விவரிப்புக்களுக்கும் ஆளாகிவிட்டது.
கருத்தன எந்தைதன் கண்ணன வண்ண கனக வெற்பிற்
பெருத்தன பாலழும் பிள்ளைக்கு நல்கின பேரருள்கூர்
திருத்தனபாரமும் என்று துதிக்கும் பாடலாகட்டும், பாலிருக்கும் கிண்ணம் மேலிருக்கும் வண்ணம் என்று சொல்லும் திரைபட பாடலாகட்டும், வாடுவது மின்னார் மருங்குல் (முலைகளின் பாரம் தாங்காமல்) என்று சொல்லும் இலக்கியமாகட்டும் மார்பங்கள் வர்ணிக்க படுவது அதிகம்.
அறிவியல் ரீதியாக பல தவறானகருத்துக்கள் படித்தவரிடையேகூட பரவுகிறது.சமீபத்தில் மதனின் கேள்வி பதில் பகுதியில் கருவிலேயே குழந்தையின் இன்ப்பெருக்க உறுப்பௌகள் வளரத்தொடங்கிய உடனேயே மார்பக வளர்ச்சி ஆண்களுக்கு முடிந்துவிடுவதாக படித்தேன். இது சரியல்ல.
ஆண்களின் மார்பகங்கள் ஈச்ட்ரொஜன், ப்ரொஜெச்டிரொன் போன்ற பெண் தன்மை ஹார்மோன்கள் இல்லாமையால் அவளர்வது இல்லை. சில சமயம் பதின்ம வயதில் டெஸ்டோஸ்டீரோன் சுரக்கும் காலம், சிறுவர்களுக்கு மார்பகங்கள் சற்றே வளர்ந்து பின் தனிந்து விடுவதை காணலாம்.இப்போது முன்னைவிட அதிகமான ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வருவதும் அறுவை சிகிச்சை செய்து கொள்வதும்கூட மருத்துவ உலகில் காணலாம்.
பெண்களுக்கு இது இனப்பெருக்கம், பால் ஊட்டும் பயன் ஆகியவற்றைவிட ஒரு அழகின் அம்சமாக பலராலும் பார்க்க படுகிறது.சமூகத்தில் பெரிய மார்பகங்கள் ஒரு கட்டாயமாக பார்க்கப்பட்டு அதன் மூலம் பென்கள் பலவித இன்னல்களுக்கும் ஆளாகிறார்கள்.
எப்போது வாய்ப்பு கிடைக்கும் தொட்டு துன்புறுத்தலாம் என்று காத்திருக்கும் சில நடுத்தரவயது ஆண்கள்,கேலி செய்து பேசி அந்த சில நிமிடங்களே ஆனாலும் மோதி சுகம் காணும் சில கீழ்த்தரமான ஆண்கள், பிளவைகாட்டும் விதம் உடை உடுத்த வைத்து படம் எடுத்து தள்ளும் நிருபர்கள் என மார்பங்களால் கிறுகிறுத்து போனவர்கள் ஏராளம். மாதாமதம் அதே மார்பகங்கள் வலிக்கும்போதும் இந்த கலை உலக , மாடலுலக பெண்களுக்கு விடுப்பு கிடப்பதில்லை. கிடைத்தால் வாய்ப்பு போய்விடுமோ என்று அல்லலுறும் கட்டாயம். பலருக்கு என் சிறிய மார்பகங்கள் இருப்பின் பால் அதிகமாக சுரக்காது போன்ற தவறான கருத்துக்கள் ஒரு புறம். பிறந்தநாளுக்கு கார் வேண்டுமா என்றால் இல்லை மார்பக அறுவை சிகிச்சை செய்து கொள்கிறேன் என்று அல்லலுக்கு உள்ளாகும் பெண்கள், மார்பகங்களை பெரிதாக்க வழி சொல்கிறேன் என்று காசு பார்க்கும் சில அழகுத்துறை அறுவை சிகிச்சையாளர்கள், மற்றும் செயற்கை மார்பகங்களை செய்கிறேன் என்று இலாபம் சம்பாதிக்கும் நிறுவனங்கள், இந்த பசையை தடவிக்கொள், இந்த மருந்தை சாப்பிடு என்று பொருளீட்டும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் இவை யாவும் வெள்ளை மாளிகையில் தங்கி தங்களுக்கு பாதகமாக எந்த கொள்கையும் வரவிடாமல் தடுக்கும் பண முதலைகளும், ஊ டகங்கள் மூலம் அதிக பணம் செலவழித்து பெண்ணின் அழகை நிர்ணயிக்கும் இந்த கூட்டம் மறுபுறம்.
சாதரணப் பெண்களுக்கு இந்த நிலை என்றால், மார்பக புற்றுநோய் வந்து ஒரு மார்பகத்தை இழந்த பெண்ணை சமூகம் பார்க்கும் பார்வை கொடியது. கை, கால் இல்லாதவர்களிடம் காட்டும் அக்கறை இல்லை என்றால் கூட பரவாயில்லை. இந்த பெண்களை செயற்கை முறை மார்பகங்களை பொறுத்திக்கொள்ள சொல்லி ஒவ்வொருமுறையும் கருத்து தரும் மருத்துவர், நண்பர்கள் என இவர்களின் மன உளைச்சலுக்கு அளவில்லை. அட்ரே லார்ட்ஸ் என்ற பெண் உளவியல் நிபுணர், கறுப்பின பெண்களுக்கு ஆதரவாய் போரிடுபவர் தன்னுடைய மார்பகத்தில் புற்று நோய் வந்து அதை நீக்கி கொண்டபோது, அவர் செயற்கை மார்பகத்தை வைத்து கொள்ள வில்லை என்று பல இடங்களில் அனுமதி மறுக்க பட்டதை எழுதியிருந்தார். மார்பக நிழற்படம் எடுக்கும் இடத்தில் சட்டையின்றி பல நேரம் காத்திருந்த பெண், ஒரு கட்டத்தில் சினத்துடன் அப்படியே பார்வையாளர் இருக்கும் இட்த்திற்கு வந்து சப்தம் போட்டிருக்கிறர். பலரும் (மருத்துவமனை ஊழியர்கள்) என்னை காக்க வைத்து உற்று நோக்கும் மார்பங்களை நீங்களும் பாருங்கள் என்று சொன்ன அந்த பெண் காவலர் கொண்டு நீக்க பட்டதும், மருத்துவமனிக்கு டீசண்டான நோயளிகள் வருவது இது போன்றவர்களால் பாதிக்க படலாம் என்றும் சொல்லி அந்த பெண் மீது குற்றம் சாட்டபட்டது.
டாலி பர்டன் தன்னுடைய செயற்கை மார்பங்களை வைத்து கொண்டு சிலிகான் பரவி புற்று நோயால் அவதிப்பட்ட போது அவருடைய ஆதரவாளர்கள் அவருடைய செயற்கை மார்பகங்கள் நீக்கினால் அவருடைய கலை வாழ்வு தோல்வி அடந்துவிடும் என்று சொன்னதாகவும் வருந்தியதை படித்திருக்கிறேன்.
இவை யாவும் இப்போது ஏன் எழுதுகிறேன் என்றால் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு பெண், 60 வயதிருக்கும். ஒரு உடல் நல கூட்டத்தின் போது கோவிலுக்கு வந்தவருக்கு சோதனை செய்ய கட்டி இருப்பது போல இருந்ததால், நிழற்படம் எடுத்துக்கொள்ள அனுப்பி இருந்தோம். கட்டி உறுதி படவே அவருடைய கணவரைஅணுகி கட்டியை நீக்க வேண்டிய அவசியத்தை சொன்னோம். மார்பகங்களை நீக்குவதன் மூலம் தன் மனைவி பெண்மையை இழந்து விடுவதாக பலர் நம்புவதாலும், பெண்கள் தங்கள் கணவன் தன்னை விட்டு விடுவான் என்ற பயத்தினாலும் கட்டி என்று சொன்னாலும் நம்ப தயராயில்லை. புற்று நோய்க்கும் பின் மார்பகங்களை நீக்க நேர்ந்தால் இவர்கள் படும் மன உளைச்சல் அதிகம். குழந்தை பிறந்த பிறகு பால் சுரக்கும் போதும், அது சீராக வெளிவருவதன் முன் பெண்கள் படும் வேதனையும் வலியும் அளவிட முடியாது.இப்போதாவது செயற்கை சாதங்களும் மருத்துவ மனை செவிலிகளின் ஒத்துழைப்பும் உதவியும், அனுசரணையாக இருக்கும் கண வ மார்களும் உண்டு. மூன்று பிள்ளைகளை பெற்று பாலூட்டி வளர்த்தவளுக்கு கட்டி என்றும் அதை நீக்க வேண்டும் இல்லை எனில் புற்று நோயாய் மாறிவிடும் என்றும் சொல்லியும் மறுத்து விட்ட கணவன், அன்னையின் வலியை வேதனையை பொருட்படுத்தாத பிள்ளைகள் என்று அவர் மிகவும் உதாசீனப்பட்டு போனார். தனக்கு அதிகம் உடலுக்கு வந்து விட்டால் யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று எண்ணி தன் அமெரிக்க அடுத்த வீட்டுகார பெண்ணிடம் சொல்லி அழுதிருக்கிறார்.நோய்வாய்ப்பட்ட பெண்னின் கணவர் 9 மணிக்கு அலுவலகம் சென்றுவிடுவார் என்பதால், அவர் சென்றபின், அந்த பெண்ணை அழைத்துவர எங்கள் மருத்துவரிடம் நேரம் ஒதுக்கி வாங்கி அமெரிக்க பெண் அவரை அழைத்து வந்தார். 2 மணி நேரம் ஒய்வுக்கு பின் மீண்டும் எதுவும் நடக்காதது போல பெண் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். அன்றே வழக்கம் போல இரவு உணவும் படைத்திருக்கலாம்.
இதுவே ஓரின சேர்க்கையில் விருப்பம் உள்ள பெண்களாய் இருப்பின் சில மருத்துவர்கள் சாதரண கட்டிக்கே கூட உங்களுக்கு மார்பகங்கள் எதற்கு என்று சொல்லி அவற்றை நீக்கிவிடுவதாகவும் பல புகார்கள் உண்டு. இவர்களுக்கு ஆதரவாக இப்போது ஹிலரி கிளிண்ட்டன் முதல் பலர் போரிட ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்
Comments madeபொடிச்சி wrote:
–இவை யாவும் வெள்ளை மாளிகையில் தங்கி தங்களுக்கு பாதகமாக எந்த கொள்கையும் வரவிடாமல் தடுக்கும் பண முதலைகளும், ஊ டகங்கள் மூலம் அதிக பணம் செலவழித்து பெண்ணின் அழகை நிர்ணயிக்கும் இந்த கூட்டம் மறுபுறம்–
–இதுவே ஓரின சேர்க்கையில் விருப்பம் உள்ள பெண்களாய் இருப்பின் சில மருத்துவர்கள் சாதரண கட்டிக்கே கூட உங்களுக்கு மார்பகங்கள் எதற்கு என்று சொல்லி அவற்றை நீக்கிவிடுவதாகவும் பல புகார்கள் உண்டு–
நன்றி பத்மா. நல்ல பதிவு. எப்பவும் தண்டனை தரத் தயாராய் இருக்கும் சமூகம். பெண்ணை தன்னுடைய தோற்றம் பற்றிய மிதமான கவலைகளில் நிறுத்தி மேலே செல்லவிடாமல் தமது நலன்களை பூர்த்தி செய்தபடி இருக்கிறார்கள்.
reply to this comment
07/06 20:48:32
குழலி wrote:
என்ன பின்னூட்டம் இடுவது என எனக்குத்தெரியவில்லை, ஆனாலும் பெண்களின் பிரச்சினையின் இன்னொரு பரிமாணம் புரிகின்றது
reply to this comment
07/06 21:10:55
துளசி கோபால் wrote:
அன்புள்ள பத்மா,
மார்பகங்கள் அழகே கிடையாது. பெரும்பாலும் அவஸ்தைதான்!
reply to this comment
07/06 21:32:42
அல்வாசிட்டி.வி wrote:
பத்மா, நல்ல பதிவு. முதலில் இந்த கருத்தை வெளிக் கொண்டுவந்ததற்கு வாழ்த்துக்கள்.
பிறந்த உடன் பசி போக்க தாயின் மார்பங்களை தேடுபவர்கள் வளர்ந்த பின் பார்வை மாறி சுகத்துக்காக பிறர் மார்புக்காக அலையும் அவல நிலை. உயிர் ஜனிப்புக்கு எதிர்பாலிடம் தோன்றும் கவர்ச்சிக்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் சில உறுப்புகள் இருக்கிறது என்ற அறிவியல் சொல்லலாம். இந்த பார்வை மாற்றத்துக்கு ஹார்மோன் என்று அறிவியல் பூர்வமாக சொல்லப்பட்டாலும் இனப்பெருக்கத்துக்கு மட்டுமே எதிர்பாலிடம் தோன்ற வேண்டிய அந்த இனகவர்ச்சியை வக்கிர புத்தியாக மாற்றி யாரை பார்த்தாலும் அதே வக்கிர புத்தியோடு பார்க்க வைப்பதில் மீடியாக்களும், புத்தகங்களும் தவறுவதில்லை.
என் அத்தை மார்பக புற்றுநோய் வந்து சிறிது சிறிதாக ரத்தம் வடிந்து, கட்டி பரவி,அழுகிய நாற்றத்தில் வாழ்ந்து இறந்துப் போனதை கண்கூடாக பார்த்து பாதிக்கப்பட்டவன். வக்கிர பார்வை தோன்றும் போது அந்த பாதிப்பு என்னை பயமுறுத்தி மீண்டும் மீண்டும் வக்கிரபார்வையிலிருந்து மீளச்செய்கிறது.
மீடியாக்கள் ஏற்படுத்திய பாதிப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல என்பதை வலியுறுத்த எழுதிய என் http://halwacity.blogspot.com/2005/06/blog-post_111816007671502502.html… இந்த பதிவு அறைகுறையாக எழுதி ஏறக்குறைய குமுதத்துக்கு விளம்பரம் மாதிரி ஆகிப்போனது.
reply to this comment
07/06 21:38:20
தங்கமணி wrote:
நல்ல பதிவு பத்மா. இது பற்றி பதிவு செய்யப்பட்டவைகள் ஆண்களின் நோக்கிலேயே என்பதாலேயே கோவில் சிற்பங்கள் தொடங்கி கவிதைகள் வரை வெறும் கவன ஈர்ப்பு பிரதேசங்களாகவே இருக்கின்றன. முலைகள் என்ற கவிதையும், பெண்மொழியும் தமிழர்களை அதிர்ச்சி அடையச்செய்ததுடன், தங்களது நம்பிக்கைகள் கலைகின்றது என்ற பயத்தில் ஓலமிடவும், கண்டனம் செய்யவும் தூண்டுகின்ற நிலையில் நமது பார்வை இறுகிப்போய் இருக்கிறது.
reply to this comment
07/06 21:44:39
நாராயணன் wrote:
நல்ல பதிவு பத்மா. செயற்கை மார்பகங்கள் வைத்துக் கொள்ளுதல் ஒரு தலைமுறையின் அடையாளமாக மாறிப் போனது அமெரிக்க வாழ்வின் அலங்கோலம். சில மாதங்களுக்கு முன் “டெமகரசி நொவு” இதழில் செயற்கை மார்பகங்களுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களும், அது சமூக கலாச்சார வெளியில் உண்டாக்கும் மாறுதல்கள் பற்றிய ஒரு கட்டுரையினைப் படித்தேன். நீங்கள் சொன்ன கறுப்பின இனவாதம் இன்னமும் முழுதுமாக போகவில்லை என்பதை அக்கட்டுரையும் உணர்த்தியது.
வொண்டர் பிரா என்கிற நிறுவனம் இன்னமும் அதிகமாக பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு காரணம் ஊடகங்கள் மார்பகங்களை கையாளும் முறைதான். விஜய்யின் பதிவில் நயன்தாரா பற்றி எழுதிய சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை. குமுதம் வக்கிரபுத்தி படைத்தது என்பது உலகறிந்தது. இதனை படம்போட்டு காட்டி மேலும், கிளர்ச்சியுற வைத்தல் தேவையில்லாதது. ஆனால், இந்திய, உலக சினிமாக்களில் எல்லா நடிகைகளும் மார்பு, தொடை, இடை என்கிற அளவில்தான் கணிக்கப் படுகிறார்கள்.
[contd..]
reply to this comment
07/06 23:28:10
நாராயணன் wrote:
ஆதிக்குடிகள், மலைவாழ் மக்கள் இதனை மிகச்சரியாக கையாளுகிறார்கள் என்று தோன்றுகிறது. அங்கே மார்பகங்கள் ஒரு கிளர்ச்சியூற்றும் அங்கமேயில்லை. அவரவர்கள் அவரவர் வேலைகளை சர்வசாதாரணமாக பார்க்கிறார்கள். சில சமயங்களில் பெரிதாக எதையும் தெரிந்து கொள்ளாமலிருப்பது கூட சந்தோஷம் என்று தோன்றுகிறது. Ignorance is bliss.
ஊடகங்களும், ஆண் சார்பியல் பார்வைகளும், அழகுப் பொருள் நிறுவனங்களும் தான் மார்பகங்களை கிளர்ச்சியாக முன்னிறுத்துக்கின்றன. அவை மக்களின் மனதில் ஏற்படுத்தும் தாக்கங்கள் அதிகம். இந்தியப் பெண்கள், உலக அழகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டதின் பின்பும் கூட, இத்தகைய நிறுவனங்களின் பங்கிருக்கிறது என்பதை சொல்லாமல் இருக்கமுடியாது. இன்றைக்கு தெருவுக்கு தெரு பியுட்டி பார்லர்களும், மார்பக சீர் நிலையங்களும் இருப்பதன் காரணம் ஊடகங்கள் ஏற்படுத்திய கவர்ச்சி. ஆகவே மிக எளிதில் இக்கவர்ச்சியினை மாற்ற இயலாது, அதுவும் தமிழ் சினிமா இருக்கும்வரை.
[contd....]
reply to this comment
07/06 23:28:41
நாராயணன் wrote:
கொஞ்சம் off topic, //முலைகள் என்ற கவிதையும், பெண்மொழியும் தமிழர்களை அதிர்ச்சி அடையச்செய்ததுடன்,//குட்டி ரேவதி, தீராநதியில் ஆண் இலக்கியவாதிகளை குற்றம் சொன்ன சுகிர்த ராணி, சல்மா இவர்களைப் பற்றி அடுத்த தீராநதியில் மாலதி மைத்ரி எழுதியது முக்கியமானது. தனியாக அதைப் பற்றி எழுதுகிறேன்.
[over and out]
reply to this comment
07/06 23:29:40
Kannan wrote:
பதிவுக்கு நன்றி
reply to this comment
07/06 23:30:21
அல்வாசிட்டி.வி wrote:
//விஜய்யின் பதிவில் நயன்தாரா பற்றி எழுதிய சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை. குமுதம் வக்கிரபுத்தி படைத்தது என்பது உலகறிந்தது. இதனை படம்போட்டு காட்டி மேலும், கிளர்ச்சியுற வைத்தல் தேவையில்லாதது. //
நானும் முதலில் படம் போட ரொம்ப யோசித்தேன். கொஞ்சம் ஆழ யோசித்ததில் படங்கள் கொச்சையாகப் பட்டதால் படங்களை எடுத்துவிட்டேன். அப்புறம் குமுதம் படித்து 3 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் திடீரென புத்தகவடிவில் படித்தவுடன் ஏற்பட்ட அதிர்ச்சி தான். இனிமேல் அந்த புத்தகம் அடிக்கடி படிக்க, எனக்கும் அந்த அதிர்ச்சி சிறிது காலத்தில் அடங்கி விட்டு “குமுதம் தானே… அவன் இப்படிதாம்பா” என்றாகி விடுவேன். )
reply to this comment
07/06 23:45:06
அல்வாசிட்டி.சம wrote:
நல்ல பதிவு பத்மா அவர்களே.
அந்த அந்த பாலரின் பார்வையிலேயே பிரச்சனையின் உண்மையான ஆழம் புரியும் என்பதை நீங்கள் மறுபடியும் காண்பித்துள்ளீர்கள்.
சென்னையில் வேலை பார்த்த காலங்களில் பள்ளி மற்றும் கல்லூரி பெண்கள் நிரம்பி வழியும் பேருந்துகளில் படும் அவஸ்தகளை பார்த்து நான் வெறுத்துபோயிருக்கிறேன்.
இந்த மாதிரி ஆண்கள் தாங்களாக திருந்தினால்தான் உண்டு.
reply to this comment
07/06 23:48:21
அல்வாசிட்டி.சம wrote:
மன்னிக்கவும் சொல்ல மறந்த கருத்து,
துளசியக்கா கருத்துடன் நான் ஒத்துப்போகவில்லை.
அழகு என்பது பார்ப்பவர்கள் மற்றும் அழகு இருப்பவர்களின் மனநிலையை பொறுத்தது. ஆனால் துளசியக்காவே மார்பகங்கள் அவஸ்தைதான் என்று கூறுவது வருத்தமளிக்கிறது.
மார்பகங்களின் பயன் 40 வயதுக்கு மேல் இல்லாமல் இருக்கலாம், ஆனால் குழந்தைபேரு காலத்தில் அது இல்லாமல்?
மனைவி குழந்தைக்கு பால் கொடுக்கும் போது அவள் முகத்தில் தெரியும் நிம்மதியை, அழகை, சந்தோசத்தை ரசித்தவர்கள் எத்தைபேரன எனக்கு தெரியாது. ஆனால் அந்த ஒரு காட்சிக்காகவாவது மார்பகங்கள் அழகுதான் என்பது என் கருத்து(நெறிய எழுதனும்னு நெனச்சேன் முடியலை).
reply to this comment
07/06 23:59:42
நல்லடியார் wrote:
//–இவை யாவும் வெள்ளை மாளிகையில் தங்கி தங்களுக்கு பாதகமாக எந்த கொள்கையும் வரவிடாமல் தடுக்கும் பண முதலைகளும், ஊடகங்கள் மூலம் அதிக பணம் செலவழித்து பெண்ணின் அழகை நிர்ணயிக்கும் இந்த கூட்டம்//
மிகச் சரியான வார்த்தைகள் பத்மா,
பெண்ணுரிமை பற்றிய எனது பதிவிலும் இதை இதை எழுதியுள்ளேன்.
ஆண்-பெண் இரு பாலரும் அழகான படைப்பாக இருந்த போதிலும், ஊடகங்களின் பார்வையில் பெண்மை மட்டுமே வியாபார மயமாக்கப்படுகின்றது. பெண்கள் அழகை வெளிக்காட்டினால்தான் அத்தகைய பண முதலைகளின் வயிறு நிரம்பும்.
reply to this comment
08/06 01:47:56
மூர்த்தி wrote:
பண்டைய காலம்தொட்டே மார்பகங்களைக் காட்சிப்பொருளாக்கி கலைப்பொருட்களாக்கி மகிழ்ந்து வந்திருக்கிறார்கள்!
ரம்பா, ஊர்வசி, மேனகைக்கும் மார்புக்கு சிறு கச்சை மட்டுமே கொடுத்து ஆடச்சொன்னதாக படித்திருக்கிறேன்.
கோயில்களிலும் சிற்பங்களிலும்கூட ஆண்களைவிட பெண்சிலைகளின் பாகங்களே தத்ரூபமாக செதுக்கி இருப்பார்கள். கேட்டால் கலை என்பார்கள். அக்காலத்தில் சிற்பியாக பெண்கள் எங்கே இருந்தனர்? ஏன் இக்காலத்திலும்கூட பெரும்பாலும் சிற்பிகள் ஆண்களே. எனவே அதனை ஆணுடைய ஆழ்மனத்தின் வெளிப்பாடு எனலாம்.
இந்த இல்லாதவங்களுக்கு வைக்றது, அலிகளுக்கு மார்பகங்களாக சிலிக்கானை வைப்பது, உறுப்பினை அறுத்துவிட்டு துளையிடுவது போன்ற அதிமுக்கியமான செயல்களை எல்லாம் தாய்லாந்தில்தான் செய்கிறார்கள். அது இதுக்கென்றே இருவான நாடு போலும்!
அப்புறம் வச்சிகிட்டே வஞ்சகம் செய்யும் தனங்களை அறுத்து நாய்க்குப் போடவேண்டும் என நானே ஒருமுறை சினந்து எழுதினேன். அதாவது பிள்ளைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க மறுக்கும் பெண்களைக் கடிந்து எழுதினேன்.
reply to this comment
08/06 02:36:12
jafar ali wrote:
அருமையான பதிவு! தொடருங்கள் பத்மா வர்களே!
reply to this comment
08/06 04:04:13
VM wrote:
பத்மா அவர்களே,
நல்ல பதிவு
reply to this comment
08/06 10:48:41
karupy wrote:
நன்றாக எழுதியிருக்கின்றீர்கள். பெண்கள் உடலமைப்பு இப்படியாகத்தான் இருந்தால் அழகாக இருக்கும் என்று மிகவும் பிரஸர் கொடுப்பதால் அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெண்கள் தங்களைத் தாமே தண்டித்துக் கொள்வது போல் உடலைக் கூறு போடுவதும் உண்ணாமல் இருப்பதும் மிகவும் வருந்தக் கூடிய விடையம்.
ஆண்கள் பெரிதாக அலட்டிக் கொள்வார்கள். ஆனால் தமக்கென்று வரும்போது அனேகமாக அழகிற்கும் உடலமைப்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்துத்தான் தமது துணையைத் தேடுகின்றார்கள் என்பது வருந்தத்தக்க விடையமே.
reply to this comment
08/06 11:08:15
Padma Arvind wrote:
கல்யாண சந்தையில் விலை போக பெண்கள் இதனை நம்பி தங்களைத்தானே துன்புறுத்தி கொள்கிறார்கள்.நன்றி பொடிச்சி
reply to this comment
08/06 15:56:18
Padma Arvind wrote:
குழலி
இதுபோல பிரச்சினைகள் புரிந்தாலே மாறுதல்கள் வரும். புரிந்து கொண்டமைக்கு நன்றி
reply to this comment
08/06 15:57:18
Padma Arvind wrote:
மார்பகங்கள் அழகும் இல்லை அவஸ்தையும் இல்லை. அதையும் மற்ற உறுப்புகள் போல எண்ணி செயல்பட்டால். அது இல்லாமல் போகத்தான் அவஸ்தையாக மாறுகிறது என்று நினைக்கிறேன் துளசி.
reply to this comment
08/06 15:58:47
Padma Arvind wrote:
விஜய்
உங்கள் பதிவை படித்தேன். மார்பக புற்று நோய் வரும் பெண்கள் படும் உடல் வலியைவிட உள்ள துயரமே மிக அதிகம். உங்கள் எண்ணத்தை படித்தபோதே புரிந்து கொண்டேன். நடிகைகள் மற்றும் விளம்பரங்களில் வரும் பெண்களின் மன உணர்வுகளும் வலிகளும் பற்றி படித்திருக்கிறேன்.நன்றி
reply to this comment
08/06 16:01:20
Padma Arvind wrote:
தங்கமணி
நம்பிக்கைகள் கலையவிடக்கூடாது என்பதும் அது இருக்கும் வரை தான் அதிகாரமும் ஆதிக்கமும் செலுத்தலாம் என்பது பெண்ணியம் முதல் மதங்கள் வரை பரவிக்கிடக்கிறது. ஒரு நாள் பெண்கள் விழித்துக்கொள்வார்கள். அதன் பின் புற அழகின் பரிணாமங்கள் மாறும். நன்றி
reply to this comment
08/06 16:04:24
Padma Arvind wrote:
நாராயணன்
நான் சொல்ல நினைத்த சில விஷயங்களை தெளிவு படுத்தி இருக்கிறீர்கள். ஊடகங்கள் நிறுவனக்களின் இலாபத்தை பெருக்க செயற்கை பொருட்களின் விற்பனையை அதிகரிக்க உதவுகின்றன. அவை தானே நிதி உதவிசெய்யும். “புற அழகின் பரினாமங்கள் மாறவேண்டும். அங்கே மார்பகங்கள் ஒரு கிளர்ச்சியூற்றும் அங்கமேயில்லை. அவரவர்கள் அவரவர் வேலைகளை சர்வசாதாரணமாக பார்க்கிறார்கள்” உண்மை
reply to this comment
08/06 16:08:10
Padma Arvind wrote:
கன்னன், ஜாவர் அலி, VM
நன்றிகள்.
reply to this comment
08/06 16:09:05
Balaganesan S wrote:
Great article. Thanks a bunch!
reply to this comment
08/06 16:25:40
padma wrote:
அல்வாசிட்டி சங்கர்,
ஆண்கள் திருந்த வேண்டும் என்பது கூட இரண்டாம் நிலைதான். பெண்களுக்கு இன்னும் எதிர்ப்பு சக்தியும், தன்னம்பிக்கையும் வரவேண்டும். பேருந்தில் தவறி நடப்பவனிடம் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். இது தன் தவறு என்று அமைதையாய் போவதால் தவறுகள் அதிகரிக்கின்றன. 40 வயதுக்கு மேல் ஹார்மோன்களுக்கு மற்ற பலன்கள் உண்டு.
பாலகணேசன்
நன்றிகள்
கறுப்பி
முன்பே கூறியபடி வேண்டியது எது என்று தெரியாமல் பெண்கள் பலவாறாக முயற்சி செய்கிறார்கள். பெரும்பாலான ஆண்களுக்கும் பெண்களுக்கும் தமக்கு என்ன வேண்டும் என்றே சரியாக புரியவில்லை. வாழ்வின் சந்தோஷங்கள் சின்ன சின்ன செய்திகளில் அடங்கிவிடுகிம்றன. இது பலமும் பலவீனமும் கூட. இன்னமும் வாழ்க்கை துணைவியை தேர்ந்தெடுக்க பெற்றோரின் விருப்பமும் தேவையாய் இருக்கிறது. நீங்கள்சொன்னது போல பார்க்க லட்சணமாக இருந்தால்தான் அடுத்தகட்டத்திற்கு போகலாம்
reply to this comment
08/06 19:14:06
மாக்கான் wrote:
பத்மா,
மார்பகங்கள் உடல் உறுப்புகள்தான். பின் எதற்கு அதில் பாதி தெரியுமாறு உடை உடுத்த வேண்டும்? அது தொங்கினால் என்ன, தொங்காவிட்டால் என்ன? எதற்கு அதனைத் தூக்கி நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்? நாங்கள் எப்போதாவது தூக்கி நிறுத்த முயற்சிகள் மேற்கொண்டதுண்டா? காம்பை மட்டும் விட்டுவிட்டு மீதியெல்லாம் வெளித்தெரிய உடை உடுத்துகிறீர்களே? நாங்கள் எல்லாம் அவ்வாறா உடுத்துகிறோம்? நாங்கள் குனியும்போதோ அல்லது நிமிரும்போதோ எங்களுடையது வெளிப்பிதுங்கி தெரிகிறதா? நிமிடத்துக்கு 300முறை புடவையையோ தாவணியையோ இழுத்து மூடுவது போன்ற பாசாங்குகள் செய்து எங்கள் கவனத்தை திசை திருப்புவதில்லையா? விபத்துகள் சாலையில் மட்டும் அல்ல சேலையிலும் கூடத்தான் என்ற புதுக்கவிதையை படித்தது உண்டா? முதலில் பெண்களிடம் இருந்துதான் விழிப்புணர்ச்சி தொடங்க வேண்டும். அதன்பின்னர் ஆண்கள் நாங்கள் தானாகத் திருந்துவோம்.
reply to this comment
08/06 21:33:59
நாராயணன் wrote:
//மார்பகங்கள் உடல் உறுப்புகள்தான். பின் எதற்கு அதில் பாதி தெரியுமாறு உடை உடுத்த வேண்டும்? அது தொங்கினால் என்ன, தொங்காவிட்டால் என்ன? எதற்கு அதனைத் தூக்கி நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்? நாங்கள் எப்போதாவது தூக்கி நிறுத்த முயற்சிகள் மேற்கொண்டதுண்டா? காம்பை மட்டும் விட்டுவிட்டு மீதியெல்லாம் வெளித்தெரிய உடை உடுத்துகிறீர்களே? நாங்கள் எல்லாம் அவ்வாறா உடுத்துகிறோம்? நாங்கள் குனியும்போதோ அல்லது நிமிரும்போதோ எங்களுடையது வெளிப்பிதுங்கி தெரிகிறதா? நிமிடத்துக்கு 300முறை புடவையையோ தாவணியையோ இழுத்து மூடுவது போன்ற பாசாங்குகள் செய்து எங்கள் கவனத்தை திசை திருப்புவதில்லையா?//
அட போங்கய்யா, உங்களுக்குக்காக எத்தனை தடவை விளக்கறது. பத்மா, கஷ்டப்பட்டு பொறுமையா, மார்பகங்களும் ஒரு அங்கம் அவ்வளவுதான் என்று எழுதினால், உங்களுக்குள் இருக்கும் ஆண்புத்தி விழித்துக் கொள்கிறது. நீங்கள் மார்பகங்களை கிளர்ச்சியங்கமாக பார்ப்பதானால்தானே பெண்கள் அதனை மறைக்க சிரமப்படுகிறார்கள். ஆக பிரச்சனை பெண்களிடத்திலில்லை. ஆண்களிடத்தில் இருக்கிறது.
நமக்கென்ன, மார்பாய் இருந்தால் என்ன, வந்த வழியான தொப்புளாய் இருந்தாலென்ன, அவையெல்லாம் ஆம்லெட் போடத்தானே. நாம திருந்துவோங்கற நம்பிக்கை எனக்கில்லை மாக்கான்.
reply to this comment
09/06 11:27:30
karthikramas wrote:
பத்மா இந்தப்பதிவு முக்கியமானது.
1. பழந்தமிழ் இலக்கியங்களில் எல்லா அங்கங்களும்தான் பாடப்பட்டிருக்கின்றன.
உதாரணமாய், “அங்கையற்கண்ணி” என்பதைச் சொல்லலாம். “பொற்பாதங்கள்” என்றும்
பொற்பதம் என்றும் பாடப்பட்டுள்ளன. நீங்கள் வெறுமனே , ‘முலைகளையும்’, ‘அல்குல்களையும்’ மட்டுமே எடுத்துக்கொண்டு இந்தக் காலத்து ஆணாதிக்கப் பார்வைக்கு ஏதுவாக சாட்சி சொல்வது எப்படி பொருந்தும் என்று தெரியவில்லை.
2. இன்றைய சினிமாப்பாடல்களை அணுகுவது போல், அன்றைய பழம் பாடல்களை அணுகுகிறீர்களோ என்று ஒரு எண்ணம் வருகிறது , அது சரியெனப்படவில்லை.
3. / மார்பகங்களை பெரிதாக்க வழி சொல்கிறேன் /
பல நேரங்களில் , இவை மார்பகங்கள் தொங்குவதை தடுக்கத்தான் செய்ய்ப்படுகின்றன.
இதில் ஒவ்வொருவரின் விருப்பு வெறுப்புகளில் வாறுபாடுகள் உல்ளது. அமெரிக்காவிலேயே
பார்பக அறுவைச்சிகிச்சைக்கு ஆதரவாக சிலரும் , எதிராக சிலரும் தேர்வி செய்கின்றனர். எனவே இது ஒருவருடைய தனிப்பட்ட விருப்பைச்சேர்ந்தது. பொதுவாக சரி என்றோ , தவறு என்று *நாம்* சொல்ல்முடியாது அல்லது பொதுக்கருத்துக்கு வரமுடியாது.
reply to this comment
10/06 14:18:47
சுந்தரவடிவேல் wrote:
இப்பதிவுக்கு நன்றி. அமெரிக்கக் கடற்கரைகளில் ஐந்தாறு வயதுப் பிஞ்சுக் குழந்தைகளுக்குக் கூட ‘ப்ரா’ மாட்டிவிடுவதைக் கண்டு புரையோடிப் போயிருக்கும் மார்புசார் வக்கிரத்தை நினைத்துக் கொண்டேன். பழங்குடியினர், ஆதிவாசிகளைப் பற்றிய நாராயணின் கருத்துதான் எனக்கும்.
reply to this comment
10/06 14:33:28
kajazvizi wrote:
நல்ல ஒரு விடயம் அலசியிருக்கிறீர்கள். குறிப்பிட்ட வயதை அடைந்தவர்களை மார்பக பரிசோதனைக்கு 5 நிமிடம் செலவிடுங்கள் என்று பல வைத்திய துறை சார்ந்த இடங்களில் பார்த்திருக்கிறேன். இதை அலட்டிக்காது விட்டால் பின்னர் கஸ்டம் தான். விழிப்புணர்வூட்டும் பதிவுக்கு நன்றிகள்.
reply to this comment
10/06 14:57:54
Padma Arvind wrote:
கார்த்திக்
நீங்கள் சொல்வதைப்போல பெண்களின் எல்லா அங்கங்களுமே பாடப்பட்டிருக்கின்றன. மூக்கை சரி செய்து கொள்ளா அறுவை சிகிச்சை செய்து கொள்வது கூட நடக்கிறது. சில cosmetic industries தங்களுடைய ஆதாயத்திற்காக ஊடகங்கள் மூலம் தவறான கருத்தை திணிப்பது என் வருத்தம்.
புற்று நோய் காரணமாக மார்பகங்களை இழந்த பெண், மார்பகம் இல்லாத காரணத்தால் சில இடங்களில் அனுமதி மறுக்க பட்டது சரியாகுமா?
மார்பகத்தை இழந்த பெண்ணை கணவன் விவாகரத்து செய்வதும் சரியாகுமா? ஆஸ்த்மா வந்த பெண்ணிற்கே தெரியாமல் விவாகரத்து செய்த கணவனை பற்றி அவள் விகடனில் எழுதி இருக்கிறார்கள். நீ ஒர்ரின சேர்க்கை செய்பவள் உனக்கேன் மார்பகம் என்று வேறு சிகிச்சைக்காக வரும் பெண்ணின் மார்பகத்தை எடுப்பது என்ன நியாயம்?
மார்பகங்கள் கண்கள் போல் என்றால், பேருந்தில் வந்து மேலே விழுவதும் தொட்டு கிள்ளுவதும் ஏனோ?
மார்பக நிழல் படமெடுக்க வந்தவரை உட்காரவைத்து விட்டு போவோரும் வருவோரும் வேடிக்கை பார்ப்பது எனோ
reply to this comment
10/06 17:34:18
Padma Arvind wrote:
சுந்தரவடிவேல்
நேர்று நானும் ஒரு சிறுமிக்கு பிரா அணிவித்து மெல்லிய சட்டை அணிவித்திருந்த காட்சியை கண்டு மனம் வருந்தினேன். நன்றி
கயல்விழி
நன்றிகள்
reply to this comment
10/06 17:37:46
Padma Arvind wrote:
நாராயணன்
மிக்க நன்றி. நீங்கள் சொல்வது மிக சரியான் ஒன்று.
reply to this comment
10/06 17:40:37
Padma Arvind wrote:
மாக்காண்
இதே போல் பிற்படுத்தப்பட்டோர் தானாக முன்னேறினால் மேல் சாதிக்க்காரர்கள் திருந்துவார்கள். லஞ்சம் கொடுப்பவர்கள் முதலில் நிறுத்தட்டும். அதன்பின் ஊழலை பற்றி பேசுவோம்.
reply to this comment
10/06 17:44:06
Raja wrote:
” வாழ்வின் சந்தோஷங்கள் சின்ன சின்ன செய்திகளில் அடங்கிவிடுகிம்றன. ”
What do you mean
reply to this comment