»
S
I
D
E
B
A
R
«
Menopause
Oct 17th, 2009 by பத்மா அர்விந்த்

மாதவிலக்கு முற்றிலும் நிற்கும் நிலையே menopause ஆகும். இதில் pre, peri and menopause என்று மூன்று நிலைகள் உண்டு. அவரவர் குடும்ப மரபணு பொறுத்து சிலருக்கு மூன்று நிலைகளும் உடனுக்குடனேயே அல்லது இரண்டு வருடங்கள் போல நீடித்தோ இருக்கலாம்.

கருப்பை சுருங்க ஆரம்பித்து, முட்டைகள் வருவது நிற்கும் போது, ஹார்மோனகளில் மாறுதல் ஏற்படும். அதுவரை ஈஸ்ட்ரோஜென் பிரொஜெஸ்டிரோன் போன்ற ஹார்மோனள் இந்த மாத சுழற்சியை கொண்டுவரும். இந்த இரண்டு ஹார்மோன்களும் சுரக்க காரணமாக பிட்யூட்டரி சுரப்பி என்ற மூளையின் பகுதி FSH (Follicle stimuluating Hormone)சுரக்கும். இதுவும் LH ன்ற ஹார்மோனும் கருப்பையை தூண்டும், முட்டை உருவாக வழி செய்யும். மாதவிடாயின் போது, இரத்தத்தில் ஈச்ட்ரோஜன்/ஈஸ்ட்ரடையால் அதிகரிக்க, FSH சுரப்பை கட்டுப்படுத்து. ஆனால் பிரிமெனோபாஸ் போது இரத்தத்தில் ஈஸ்ட்ரடையால் அளவு குறயும். அது FSH சுரப்பதை தடை செய்யாமல், அது எப்போது அதிக அளவிலேயே இருக்கும். பெரி மெனோபாஸ் போது (35 வயது முதல் ஆரம்பிக்கலாம்) மாதவிலக்கு மூன்று மாதங்களுக்கொருமுறை என்று நாளாகி ஆரம்பித்து நிறைய உதிரப்போக்கு இருக்கும்.

ப்ரி மெனோபாஸ் போது தலை முடி உதிருதல், அடிக்கடி கோபம் அல்லது அழுகை போன்ற உணர்வுகள், வரட்சியான சருமம்,அதிக உடல் சூடு போல ஒரு உணர்வு வரும். கொலஸ்டிராலில் இருந்து ஈச்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் உருவாக NADPH என்ற ஒரு என்சைம் உதவும். மாதவிலக்கு நிற்கும் நிலையில் இந்த என்சைம் ஈஸ்ட்ரோஜன் தயாரிப்புக்கு பதிலாக கொலஸ்டிராலின் உப பொருட்களை தரும். ஆகவே மாதவிலக்கு நிற்கும் பெண்களின் கொலஸ்டிரால் கூட வாய்ப்பு இருக்கிறது. இதுவும் ஹாட் பிளாஷஸ் வர ஒரு காரணம். இதனாலேயே பெண்கள் செரிக்கும் திறன் குறையவும், உடல் எடை அதிகரிக்கவும் காரணமாகிறது. மேலும் உணர்வு பூர்வமாக சில பிரச்சினைகள் வரும் போது, உண்பது சிலருக்கு ஒரு மகிழ்ச்சியை தரும் (soul food, comforting food) ஏற்கெனவே குறைந்த செரிமானம் இருப்பதால் இது உடல் எடையை இன்னும் அதிகரிக்கும். இந்த ஹார்மோன் பிரச்சினையை புரிந்து கொள்ளாமல், நடுத்தர பெண்கள் உடல் எடை அதிகரிப்பதை பொதுவாக கேலி செய்யும் போக்கை காணலாம். இதனை சரிக்கட்ட கூடுதல் உடல்பயிற்சி, உணவில் இன்னும் அதிக கட்டுப்பாடு தேவையாய் இருக்கும்.

ஹைப்போதலாமஸ், பிட்யூட்டரி் இதில் ஈடுபட்டிருப்பதால் ஸ்ட்ரெஸ் இந்த உடல் வெப்பத்தை அதிகரிக்கும் நிலை (உண்ர்வு) ஏற்படுகிறது. இதை குறைக்க என்ன செய்யலாம்?

ஸ்ட்ரெஸ் அதிகமாகாமல் பார்த்து கொள்ள வேண்டும். இரவு உறங்கும் முன் இளஞ்சூடாக பால் அருந்தி பிரகு மனதுக்கு பிடித்த வேலைகளில் ஈடுபடுதல் நலம்.

2. உணவு பொருட்களில் எண்ணெய் நெய் குறைக்க வேண்டும். வறுத்த உணவு, எண்ணெயில் பொரித்த உணவினை தவிர்த்தல் நலம்

3. கால்சியம் இயல்பாகவே சூட்டை தரும். ஆகையால் செயற்கையாக இதை எடுத்துக் கொள்ளாமல், பால் தயிர் போன்றவை சேர்த்துக்கொள்ளவும்.

4. பாலி பீனால், ஃப்ளேவனாய்ட் இருக்கும் பழங்கள் திராட்சை, பைன் ஆப்பிள் சேர்த்துக்கொள்ளலாம். அவை ஈஸ்ட்ரோஜனின் தன்மைகளை கொண்டிருப்பதால் பலனளிக்கும்.

5.கொழுப்பு தவிர்த்து அவரைக்காய், மொச்சை, ராஜ்மா அல்லது பொட்டுக்கடலை, கொத்துக்கடலை சேர்த்து சமைக்கலாம். இவற்றில் ஃப்ளேவனாய்ட் அதிகம். இதில்தான் சோய் புரதமும் வருகிறது. ஆனால் சீன பெண்களுக்கு மெனோபாஸ் பிரச்சினை நிறைய வர அவர்கள் அதிகம் பன்றிக்கரி உணபதும் காரணமாகலாம் என்று சொல்லப்படுகிறது.

6. அதிக நார்ச்சத்து உள்ள பொருட்கள் குறிப்பாக வாழைத்தண்டு, பீன்ஸ் போன்றவை சேர்த்து கொள்வதும் பலன் தரும்.

7. சப்பாத்தி செய்யும் போது முழுகோதுமை மாவு,அல்லது ராகி போன்றவை அதிகம் சேர்த்து கொள்வதும் பலன் தரும்.

8. நிறைய பேரீச்சை பழங்கள், கீரை சேர்த்துக் கொள்ளவும். இது உடலின் இரத்த இரும்பு சத்தை அதிகரித்து, மெனொபாச் நிலையில் அதிக உணர்ச்சி மாறுதல் மற்றும் இரவு வியர்ப்பது, அல்லது உள் காய்ச்சலை தடுக்கும்.

இனி வருடம் ஒருமுறை மறக்காமல் பாப் டெஸ்ட், மற்றும் மாமாகிராம் செய்து கொள்ளவும். அதே போல போன் டென்சிட்டி பரிசோதனை செய்து கொண்டு அதற்கேற்றார் போல கால்சியம் சேர்த்துக்கொள்வது முக்கியம். குடும்பத்தில் புற்று நோய் சரித்திரம் இல்லாவிட்டாலும் மாறு பட்ட உணவு முறை, மற்றும் சுற்றுப்புறம் போன்றவை நம் புற்று நோய் வாய்ப்பை அதிகரித்திருக்கிறது.

நம் ஊரில் பெண்கள் ஏதேனும் உடல் உபாதை இல்லை என்றால் மருத்துவரிடம் செல்வதே இல்லை. ஆனால் மாதவிலக்கு நின்றபின் வருடம் ஒருமுறை கட்டாயம் மருத்துவரிடம் செல்வது அவசியம்.

signs and Symptoms of Menopause

social Normமும் மகளிர் தினமும்
Mar 8th, 2009 by பத்மா அர்விந்த்

வழக்கம் போலவே என் இன்பாக்ஸ் மகளிர்தினத்தை நினைவுறுத்தும் வண்ணம் அழைப்புக்களால் நிரம்பி இருந்தன. காலை உணவு, அல்லது சின்ன கூட்டம். ஒன்றில் கொண்டாடத்தான் வேண்டுமா மற்ற நாடுகளில் எத்தனை பெண்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள், ஒரு மணிக்கு பத்தில் நான்கு பெண் ஏதேனும் ஒரு பாலியல் சித்திரவதைக்கு ஆளாகிறாள், இந்தியாவில் 19% திருமனமான 19இல் இருந்து 25 வயதுகுட்பட்ட பெண்களும் கம்போடியாவில் 35% மணமான பெண்களும் கணவனால் ஒருமுறையேனும் அடிக்கப்பட்டிருக்கிறாள், இன்னும் இந்தியாவில் விதவைகள் கொடுமைப்படுத்தப்படுகின்றார்கள், இங்கே முதியோர் இல்லங்களில் பெண்கள் பாலியல் கொடுமைக்கும் ஆளாகிறார்கள், இந்த நிலையில் வேண்டுமா மகளிர் தினம் யோசியுங்கள் என்ற கடிதம்.

பாஸ்நியா முதல் இன்றைய இராக், ஈழம் வரை போர்க்காலங்களில் பெண்கள் படும் அவதிகள் அதிகம். ஆண்கள் பலர் கொல்லப்படுவதால், குழந்தைகளின் பசிதீர்க்க, முதியோருக்கு உணவு வழங்க, குடும்பத்தை சற்றேனும் குறைவில்லாமல் நடத்த பெண்கள் பணிக்கு செல்கிறார்கள். முதல்முறையாக பணிக்கு செல்வதால் குறைந்த அளவு ஊதியம் கிடைக்கும் பணிகளில் இவர்கள் படும் பாலியல் தொல்லைகள் ஏராளம். போர் என்றாலே ஒரு நாட்டின் உடமைகளை கைக்கொள்வதோடு, பெண்களை பாலியியல் கொடுமைக்கு ஆளாக்குவது ஆண்கள் நிறைந்த இராணுவத்தில் ஒருவகை கொண்டாட்டமாகி இருக்கிறது. இதற்கு உளவியல் ரீதியாக பல காரணம் இருப்பினும் ஒரு வீட்டின் பெண் ஒருவகையில் இன்னும் ஒரு உடமையாகவே கருதப்படுவதால் அவளை சிதைப்பது என்பது அந்த வீட்டின் ஆணை உச்சகட்ட அவமானத்திற்கு ஆளாக்குவது முக்கிய காரணம், இரண்டாவதாக இவ்வாறான வன்புணர்வில் கருத்தரிக்கும் பெண்கள் மூலம் தங்கள் இனத்தை அங்கே வளர்க்கவும் நினைப்பது இன்னொரு காரணம். பெரும்பாலான போர்க்கால வன்புணர்வுகள் கருவில் முடிந்தால் அவர்களுக்கு அதை கலைப்பது மிகவும் முடியாத காரியம். அவ்வாறாக பிறந்த குழந்தைகள் அந்த வன்புணர்வு அனுபவத்தை நினைவுறுத்திக் கொண்டே இருப்பதால் சமூகத்தாலும் வெறுக்கப்படும் நிலைக்கு ஆளாவதால், போர் முடிந்த பின்னும் இன்னொரு தலைமுறைக்கு அவமானப்படுத்தப்படுகிறார்கள். இப்படியாக பல்லாயிரம் பெண்கள் அவதிப்படும் போது நிலையற்ற வாழ்க்கையில் அவரும் அவர்தம் குடும்பமும் சுழலும் போது இந்தக் கொண்டாட்டங்கள் அவசியம்தானா?

தினசரி வாழ்க்கையில் பெரும்பாலான வீடுகளில் தங்கள் மனைவியின் உடல்நல முடிவுகளைக்கூட ஆண்களே எடுக்கின்றனர். தெற்காசிய நாடுகளில் 61% ஆண்கள் முடிவின் படிதான் குடும்பத்தாரின் உடல்நல சிகிச்சைகள் கூட தெரிவு செய்யப்படுகின்றன. அதே போல அன்றாடம் நடக்கும் செலவினங்கள் தெற்காசிய நாட்டில் 34 இல் இருந்து 40% வரை ஆண்கள் முடிவெடுப்பின் படி நடக்கிறது.

இதே போல பெண்கள் கருவின் துவக்கம் முதல் கடைசி காலம் வரை ஏன் மயானத்திலும் கூட ஆண்களின் முடிவே அதிகாரம் பெற்றதாக இருக்கிறது.
ஆரம்ப நிலை படிப்பு முதல் பொது literacy வரை 100% ஆண்களுக்கு 65% பெண்களே படிக்கிறார்கள். பெண்களின் கல்வி அறிவு ஒரு குடும்பத்தின் உடல் நலம் மற்றும் அறிவுத்திறனுக்கு ஆதாரம் என்ற போதிலும் பெண்குழந்தைகளின் படிப்பு ஆண் குழந்தைகளை விட அதிகம் ஆதரவு பெறுவதில்லை. இவ்வாறாக ஓவ்வொரு துறையிலும், வேலைக்கு போகும் பெண்கள் பெறும் சற்றே visibility குறைந்த பிராஜக்ட், பொதுவாக குழந்தை வீடு என்று பெண்கள் கவனம் செலுத்த தேவை இருப்பதால் அவர்களால் நீண்ட நேரம் பணியாற்ற முடியாது என்று அனுமானித்து வேறு திட்டங்கள் கொடுப்பது, வீட்டின் அன்றாட வேலைகளில் கூட இது பெண்களே செய்ய வேண்டியது என்று அவர்கள் செய்யும் intangible பணிகளின் முக்கியத்துவத்தை கவனிக்காமல் விடுவது போல நிறைய எழுதிக்கொண்டே இருக்கலாம்.

நேற்றைய முந்தினம் நடந்த ஒரு அரசியல் தலைவர்கள் நிறைந்த கூட்டத்தில் சிறையில் பெண்கள் எப்படி கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்ற ஒரு விளக்கப்படத்தையும் பார்க்க நேரிட்டது. சிறையில் அதிலும் ஆப்பிரிக்க அமெரிக்க பெண்ணாகவோ ஹிஸ்பானிய பெண்ணாகவோ இருந்தால் இன்னும் எத்தனை மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பதையும் பார்க்க நேர்ந்தது. அவர்களுக்காக போராடும் ஒரு குழு நடத்திய உரை மூலமாக மனமே கனத்துப் போனது. இதில் இன்னும் வேதனையான செய்தி என்னவென்றால், குடியுரிமை இல்லாமல் வரும் மக்கள் இமிக்ரேஷனால் பிடிக்கப்படும் போது, அதில் பெண்கள், குழந்தைகள் சிறையில் (பொதுவான குற்றவாளிகளுக்கான) கிரிமினல் குற்றவாளிகள் போல நடத்தப்படுவதும் ஆண்கள் இமிக்ரேஷன் சிறையில் அடைக்கப்படுவதும்தான். கிரிமினல் சிறையில் நிகழ்த்தப்படும் அராஜகங்கள் நிர்பந்திக்கபட்டு ஒரு கிரிமினல் குற்றவாளியைப்போல பெண்கள் நடத்தப்படுவது ஏன் என்று இன்னொரு குழு அட்டைகளை பிடித்திருந்தார்கள். ஒரே செய்கைக்கு ஆணுக்கொரு நீதியாகவும் பெண்ணுக்கொரு நீதியாகவும் இருப்பது இங்கேதான். குடியுரிமை பெறாமல் வேலை செய்யும் பெண்கள் அடையும் கொடுமைகளும் அதிகம்.

ஓரின சேர்க்கையாளர்களில் பெண்கள் நடத்தப்படும் விதம், மருத்துவர்கள் அவர்களை நடத்தும் விதம் குறித்தும் கூட நிறைய எழுதி மனம் அமைதி இழக்கலாம். ஆனாலும் இந்த பதிவு அதற்காக இல்லை.

14% ஆனாலும் கூட பல நாடுகளில் பெண்கள் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள், அவர்களால் முடிவுகள் எடுக்க மாற்ற முடியும், 65% ஆனாலும் கூட படிக்க செல்லும் பெண்கள் சதவிகிதம் அதிகமாகிக்கொண்டு இருக்கிறது. 19 % பெண்கள் வன்முறைக்கு ஆளானாலும் 81% பெண்கள் தங்களைக்காத்துக்கொள்ளும் கலையை அறிந்திருக்கிறார்கள். 35% ஆனாலும் கூட உலகெங்கும் ஆண்கள் பாலியியல் சமன்பாட்டை மதிக்க துவங்கி இருக்கிறார்கள். ஆக கூடி கோப்பை நிறைய ஆரம்பித்திருக்கிறது. அது முற்றிலும் நிறைய என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க துவங்க வேண்டும்.

இதுதான் சோசியல் நார்ம் தியரி சொல்லித் தரும் பாடம். பாதிக்கோப்பை நிறைந்த நிலையில் மீதியை நிரப்ப ஒன்று சேருங்கள் என்பதன் தத்துவம். இப்போதுதான் நிறைய துவங்கி இருக்கும் கோப்பையில் நச்சை சேர்ப்பது போல பொறுப்பற்ற தன்மையில் நடப்பதும் பேசுவதும் கூடாது என்பதையும் தங்களை காப்பாற்ற வந்திருக்கும் சட்டங்களை மதித்து அதையும் கவனமாக கையாள்வதையும் பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

பாலியியல் சமன்பாடு என்னும் கனவு நிறைவேற இன்னும் பல தூரம் செல்ல வேண்டும் என்றாலும், பாதையே இல்லாமல் இருந்து முட்காடாக இருந்த நிலத்தில் இப்போது பாதை ஒன்று புலப்படுவதே கூட நல்ல மாற்றம்தான். நடைப்பயணத்தில் இன்னும் நிறைய பேர் சேர்ந்து கொள்ள முடியும், சேர்ந்து கொள்வார்கள் என்னும் நம்பிக்கை பூத்திருக்கிறது.

ஒரு சிறுமியின் சுதந்திரத்தை தேடிய கதையை இங்கே கேளுங்கள்.

பாலியியல் சமன்பாட்டின் முக்கியத்துவத்தைச் சொல்லும் புகைப்படங்களின் தொகுப்பு இங்கே

Un and UNESCO reports linked wherever needed. You can download them.

கருவுறுதலில் பெண்களின் முடிவெடுக்கும் உரிமை
Mar 8th, 2006 by பத்மா அர்விந்த்

விவாகரத்து வழக்கொன்றில் நான் மொழிபெயர்ப்பாளராக ஒரு பெண்ணுடன் போய் இருந்தேன். அந்த பெண்ணிற்கு இரண்டு குழந்தைகள். கணவனுடன் நல்ல உறவு இல்லை, கொடுமைக்காரனாக அடக்குமுறை கொண்டவனாக இருந்தவன் என்று தெரிந்தும் ஏன் இரண்டு பிள்ளை பெற்றுக்கொண்டாய் என்று கேட்கும் உறவினர், அன்னை, சகோதரி கூட்டம். இந்த நாளில் எத்தனை கர்ப்பத்தடை வழிகள் உண்டு ஆனாலும் இத்தனை முட்டாளாக ஒரு பெண்ணா என்று பேசும் நண்பர் கூட்டம் என்று அத்தனையும் உண்டு.

13 குழந்தைகள் கொண்ட பென்ணை கேலி பேசுவதும், அதேபோல குழந்தை இல்லாத பெண்ணை குறை கூறுவதும், மங்களகரமான நிகழ்வுகளில் இருந்து விலக்கி வைப்பதும் எத்தனை குரூர செயல். இன்னமும் கருவைத்தாங்கும் பெண்களுக்கு நம் நாட்டில் முழு உரிமை இல்லை என்பதை யாரேனும் உணர்வார்களா?

திருமணம் ஆனபின், கணாவனுடன் உறவு கொள்வதற்கு திருமணத்தில் பேசிய தொகை முழுதும் வராதவரை இல்லை என்று சொல்லி தடை சொல்பவரிலிருந்து, இன்று விசேஷ நாள் (விரத நாள்) என்று சொல்லி தடை விதித்து, மனைவி கண வனுடன் கூட செல்லும் நாளில் அவரின் மாத சுழற்சியில் கருத்தரிக்க வாய்ப்பு அதிகம் இல்லாமல் போவதால் குழந்தை பிறக்கவில்லை என்று மருத்துவர்கள் சொன்ன போதும், பிடிவாதமாக இருந்து கடைசியில் மலடி என்ற பெயரோடு வாழ்ந்தவர்கள் உண்டு. என் சகோதரியின் உறவினர் ஒருவர் கணவனின் அன்னையின் காவலில் இருந்தே 35 வயதாகிவிட்டது. துரதிர்ஷ்டவசமாக அன்னையும், கணவனும் ஒருவர் பின் ஒருவராக இறந்துவிட, இப்போது தனியாய் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

இன்னொருபக்கம் கவனக்குறைவால் கருத்தரித்து, குடும்ப நிதி நிலைமை அதற்கு இடம் தராததால் ஊசி கொண்டும், செயற்கையாக தகுந்த திறமை இல்லாதவரிடம் சென்று கருக்கலைப்பு செய்து கொள்ள வற்பூறுத்தி, மாட்டேன் என்று மனைவி அழுது கெஞ்சினால் நான் வேண்டுமா இந்த பிள்ளை வேண்டுமா என்று முடிவு செய்து கொள் என்று பயமுறுத்தி பணியவைப்பது இன்னொரு ரகம்.

இன்னும் சில குடும்பங்களில் கணவன் நிறைய முடிக்க வேண்டிய கடமை இருந்தால், அக்கா தங்கை திருமணம், வீட்டு கடன் என்று முடியும் வரை பிள்ளை பெற்று கொள்ள பெண்னுக்கு உரிமை இல்லை. தவ றி கருத்தரித்துவிட்டால், நமக்கென்ன வயசா ஆயிடுத்து, இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும் என்று முடிவெடுப்பதும் கணவனே. இதே மனைவியின் உடல் நலம் கருக்கலைப்புகளால் அல்லது தடை மாத்திரைகளால் கெட்டுவிடும் என்ற அக்கறை கூட இல்லாமல் சுயநலத்துடன் நடந்து கொள்பவர்களை என்ன சொல்ல?

கருத்தரித்தபின் முதல் குழந்தை ஆணாக வேண்டும். பெண்ணாக பிறந்துவிட்டால், அந்த பெண் அடையும் துன்பங்கள் இன்னமும் நிறைய இடங்களில் மாறவில்லை. ஆண் குழந்தை பிறக்கும் வரை அடுத்தடுத்து உருவாகும் கருக்கள் அவள் உடல் நலனை அடியோடு கெடுத்துவிடும். இந்த பழக்கம் இங்கே யூதர்களிடமும் இருக்கிறது.

சில பெண்கள் விரும்பாமலே கணவன் உறவு கொள்வது சாதாரணம். அதிலும் வாய்வழி உறவு கொள்வதை அருவெறுப்பாக நினைக்கும் பெண்களுக்கு, அதனால் நோய்வாய்ப்பட நேருமோ என்ற அச்சம் உள்ளவர்களிடம் அதுபற்றிய கல்வி தராமல் கட்டாயப்படுத்தும் போது மன உளைச்சலுக்கு ஆளாவதும் அதிகம்.

நிறைய பெண்களிடம் தங்கள் உரிமைகளை பற்றிய குறைந்த பட்ச அறிவு கூட இல்லை. பெண் கணவனின் உடைமை என்றே பலரும் நினைக்கிறார்கள். உடல் வலி, மன உளைச்சல் இதை பொருட்படுத்தாமல் கடமை போல பயத்தினால் உடன் படுகிற பெண்கள் அதிகம். நாம் வேண்டாம் என்று சொன்னால் வேறெங்காவது கவனம் போய் கணவனை இழந்துவிடுமோ என்ற பயம் பெண்களை உடன் பட வைக்கிறது.
கட்டாயப்படுத்தி உறவு கொண்டு, தற்காப்பும் இல்லாமல் கடைசியில் அந்த பெண் கர்ப்பமானால் எள்ளி நகையாடுவது எப்போது மாறும்? இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் தற்போது ஒரு குழந்தை, இந்த நிலை மாறிவிட்டது என்று சொல்பவர்கள் தமிழக, மெட்ரோபாலிட்டன் நகரங்களை தாண்டி வெளியே வாருங்கள். கிராமப்புறங்கள், குறிப்பாக மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், பஞ்சாப், மற்றும் பீஹார் போன்ற இடங்களுக்கு , கிராமங்களுக்கு சென்று பார்த்தால் இதன் கொடுமை தெரியும். இங்கே நியுஜெர்ஸியிலேயே அப்படி வரிசையாக குழந்தை பெற்று கொண்டு திண்டாடும் வறுமை கோட்டிற்கு கீழே வாழும் பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

தயங்கி தயங்கி அவமானமும் வெட்கமும் மேலிட, அவர் ரொம்ப கட்டாயப்படுத்திதான் நடந்தது. எல்லாரும் என்ன தப்பு சொல்றாங்க: என்று கண்ணீருடன் சொல்லும் பெண்ணிடம் பேசினால் தெரியும் நாம் மனைவியின் உணர்வுகளுக்கு எத்தனை உரிமை தருகிறோம் என்று. ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே என்று பாடிவிட்டு பாவிமகளுக்கு எந்த நாளும் கர்ப்ப வேஷமா என்றும் கேலிபேசுவதும் அதே இனம்தானே.

கருக்கலைப்பை பற்றியும் அதில் இருக்கிற உரிமைகளையும் அதில் மதங்கள் தலையிடுவதையும் பற்றி பேசவில்லை. அதற்கெல்லாமல் ஆதார உறவினிலேயே இருக்கும் அடக்குமுறை பற்றி மட்டுமே இங்கே கூறி இருக்கிறேன்.

இந்த நிலையில் இந்தியாவில் பல இடங்களில் பெண்கள் தினம் கொண்டாடப்படலாம். அவர்கள் விழாக்கொண்டாட்டம் இடையே விழிப்புணர்வு சற்றேனும் ஏற்படுத்துவார்களானால் அதுவே பெண்களுக்கு உதவியாக இருக்கும்.

தொடர்புடைய சுட்டி: பெண்களின் நெருக்கமான பகைவன்

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions