»
S
I
D
E
B
A
R
«
மார்பக புற்றுநோய்- Education, Early Detection
Oct 10th, 2007 by பத்மா அர்விந்த்

அக்டோபர் மாதம் உலக அளவில் மார்பக புற்று நோய் தடுப்பு மாதமாக பரிந்துரைக்க படுகிறது. முன்காலத்தில் ஆசிய பெண்களுக்கு அதிக அளவில் மார்பக புற்றுநோய் வந்ததில்லை என்றாலும் பழக்கங்கள், சுற்று புர சூழல் இவற்றின் மாற்றத்தால் இப்போது அதிகம் பரவலாக காணப்படுகிறது. நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மார்பக நிழல் படம் எடுத்துக் கொள்ள வேண்டுவது அவசியம். இது மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கும். இன்று நான் மார்பக நிழல் படத்தின் முக்கியத்தைப் பற்றி பேசப் போகிறேன். நீங்களோ, உங்கள் மருத்துவரோ அறியும் முன்னே மார்பகப் புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகளைக் கண்டறிய உதவுகிறது.

இரண்டு வருடத்திற்கு ஒரு முறை நிழல் படம் எடுத்துக்கொண்டு உங்களைக் காப்பற்றுவதோடு, உங்கள் சகோதரி, அன்னை, உறவினர் அனைவருக்கும் தெரியப்படுத்தி அவர்களையும் நோயிலிருந்து பாதுகாக்க உதவுங்கள். ஆண்களுக்கும் மார்பக புற்று நோய் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

உங்களுக்கு நிழல் படம் அவசியம் இல்லை என்று எண்ணாதீர்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மார்பக நிழல் படம் எடுத்துக் கொள்ள வேண்டுவது அவசியம். மார்பக நிழற்படம் எடுப்பதை குறித்து பல வேறு கருத்துக்கள் இருந்தாலும் அமெரிக்காவின் நோய்கள் தடுக்கும் நிறுவனம் இதை பின்பற்றுகிறது.

வயதாக, வயதாக இது அவசியம். இரண்டு வருடத்திற்கொருமுறை, நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மார்பக நிழல் படம் எடுத்துக் கொள்ள வேண்டுவதும், மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டுவதும் அவசியம். இதனால் மார்பகப் புற்றுநோய் மூலமாக வரும் இறப்பு விகிதம் குறையும். உணவு பழக்கங்கள், வாழும் சூழல் , காற்றில் உள்ள மாசு இவற்றினால் மார்பக புற்று நோய் வர வாய்ப்பு இருக்கிறது.

இங்கே மார்பக நிழல் படம் எடுக்கத் தயாராகச் சில குறிப்புகள் தருகிறேன்.

உங்களுக்கு மாதவிலக்கு இருக்குமானால், உங்களுடைய பரிசோதனையை சற்று தள்ளி செய்து கொள்ளுங்கள். ஏனெனில், அப்போது மார்பகங்கள் சற்றே கடினமாக இருக்கும். அதனால், வலி இருக்க கூடும்.
பரிசோதனை அன்று, அழகுப் பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள். எந்தவித வாசனைத் திரவியங்களையும் பயன் படுத்தாதீர்கள். இவை, நிழல் படத்தில் சந்தேகத்தை உண்டு பண்ணும். மிக எளிதாக ஆடை மாற்ற வசதியாக உடை அணிய வேண்டும்.
உங்களுடைய மருத்துவரின் முகவரியும், தொலைபேசியின் எண்ணும், முன்பு செய்துகொண்ட பரிசோதனை முடிவுகளும் கொண்டு வருவது அவசியம்.
மார்பக நிழல் படம் எடுக்க சில நிமிடங்களே ஆகும். இது மிக எளிது.
நீங்கள் ஒரு கதிர் வீச்சு கருவியின் முன் நிறுத்தப்படுவீர்கள். உங்கள் மார்பகம் ஒரு தட்டில் வைக்கப்படும். அதன் மேல் இன்னும் ஒரு தட்டு வைத்து மார்பகத்தை சற்றே அழுத்துவார்கள்.
ஒரு சில மணித்துளிகளுக்கு உங்கள் மார்பகம் தட்டையாக இருக்க வேண்டுவது அவசியம். ஏனெனில் அப்போதுதான் கட்டிகளையும், மற்ற மாற்றங்களையும் அறிய முடியும்.
நிழல் படம் எடுக்கும் நபர் உங்கள் மார்பகங்களை இரண்டு படங்கள் எடுப்பார். ஒன்று பக்கவாட்டிலும், மற்றொன்று மேல்வாட்டிலும். நிழல் படங்கள் ஒரு மருத்துவரிடம் கொடுக்கப்படும். அவர் உங்கள் படங்களில் ஏதேனும் குறைகள் இருக்கின்றனவா என்று பரிசோதிதுவிட்டு உங்களைத் தொடர்பு கொள்வார். நீங்கள் ஒரு வாரத்திற்குள் அழைக்கப் படவில்லையெனில், மருத்துவரைத் தொடர்பு கொள்ளவேண்டும்.
மார்பக நிழல் படங்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று நோய்களைக் கண்டறியவும், மற்றொன்று வடிகட்டுவதற்கும் பயன்படுகிறது. நாம் முதலில் நோய் இருக்கிறதா என்பதைக் கண்டறிய உதவும் நிழல் படம் எடுப்பதைப் பற்றி அறிவோம்.

இவ்வகையான நிழல்படம் எடுக்க, மார்பக புற்று நோய்க்கான அறிகுறிகள் இருந்தால் மட்டுமே பரிந்துரை செய்யப்படுகிறாள். இது மார்பகத்தின் அளவிலோ, தோலின் நிறத்திலோ, தடிமன் சற்றே அதிகறித்தாலோ, மார்பகக் காம்புகளில் இருந்து திரவம் வடிந்தாலோ நோய்க்கான அறிகுறிகளாகக் கொள்ளப்படும்.

இவ்வாறான அறிகுறிகள் இருந்தால், அவசியும் மருத்துவரை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவில் அணுக வேண்டும். இந்த அறிகுறிகள் சிலசமயம் புற்று நோயில் முடிவதில்லை. ஆனாலும் பரிசோதித்து அறியவேண்டியது முக்கியம்.

இன்று நாம் இந்த வகை அறிகுறிகள் இல்லாத, வடிகட்டுதலுக்கான நிழல் படம் பற்றிப் பேசுவோம்.

மார்பக நிழல் படம் எடுக்க ஆகும் செலவு:

வடிகட்டுவதற்காக நிழல் படம் எடுக்க $150 ஆகும்.
இவை தனியார் இன்சுரன்சு அல்லது மெடிக்கர் மூலம் கட்டப்படும்.
சில இனவழி சங்கங்கள், நிகழ்ச்சிகள் இவை இலவசமாக செய்து தருவார்கள்.
உங்கள் மருத்துவரை அணுகுங்கள்:

எப்போது நீங்கள் மார்பக நிழல் படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும், எவ்வளவு மாதத்திற்கு ஒரு முறை எடுத்துக்காள்ள வேண்டும் என்பதயும் மருத்துவரிடம் கேட்கவும். பிறகு ஒரு அட்டவனை செய்து கொள்ளவும், அதனை வாழ்நாள் முழுவதும் பயன் படுத்தவும்.

இன்று எல்லா பரிசோதனை நிலையங்களும் உணவு மற்றும் மருந்துகள் அனுமதிக்குழுவிடம் இருந்து அணுமதி பெறவேண்டும். இதனால் அவற்றின் தரம், கருவிகளின் நிலை, அங்கு வேலை செய்யும் மனிதர்களின் செயல் திறன், அவர்கள் வைத்து இருக்கும் படிவங்கள் ஆகியவற்றிற்கு உத்திரவாதம் தர இயலும்.

அமெரிக்காவில் உள்ளவர்கள் 1-800-4-CANCER அழைத்து உங்கள் வீட்டுக்கருகே இருக்கும் பரிசோதனை நிலையம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

காத்திருக்காமல் இன்றே மருத்துவர்களை அணுகுங்கள். ஆண்கள் தங்கள் மனிவி, சகோதரி மற்றும் அன்னையருக்கும் சொல்லுங்கள்.

மார்பக புற்று நோய் தடுக்கவல்ல காய்கறி : ப்ராக்கோலி எனப்படும் பூவகை. இதில் உள்ள இண்டோல் 3 கார்பினால் என்பது மார்பக புற்றுநோய்க்கு காரணமான ஜீன் அதிக அளவில் வீரியம் இல்லாததாக மாற்றுகிறது. எனவே வாரம் ஒருமுறை பிராக்கோலி சேர்த்து கொள்ளுங்கள். பிராக்கோலியில் நீர் அதிக உள்ளதால் இது எடை குறையவும் பயனாகிறது.இக்கட்டுரை முன்பே தமிழோவியத்திற்காக எழுதியது. மேலும் விரிவான ஆங்கில கட்டுரைக்கு இங்கே சுட்டுங்கள்.

தண்ணீர்
May 31st, 2007 by பத்மா அர்விந்த்

அமெரிக்காவில் வசந்தம்/கோடை தொடங்கிவிட்டதால் எங்கும் சிறுவர்கள் விளையாட்டும், உடற்பயிற்சிக்காக ஓடுபவர்கள், நடப்பவர்கள் என்று வாழ்க்கை சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்துவிட்டது.பூத்துக்குலுங்கும் செடிகளும் மரங்களும் கூவி பாடும் பறவைகளுமாய் வாழ்க்கையின் இனிமைக்காலம் இது. பசுமையான புல்வெளியும் பூக்கள் நிறைந்து வாசனையுடன் கூடிய தோட்டமும் வீட்டிற்கும் ஒரு அழகைத்தந்திருக்கிறது. உடல் இயக்கங்கள் அதிகரிக்க நீர் பருகும் தேவை அதிகமாகிவிட்டது.

ஒரு மனிதனின் உடல் எடையில் 2 இல் மூன்று பங்கு தண்ணீர் இருக்கிறது. கொழுப்பு இருக்கும் இடங்களில் தண்ணீர் குறைவாக இருக்கும். எனவே பெண்கள் 52% நீரும் ஆண்கள் 60 சதவிகிதம் நீரும் கொண்டிருக்கிறார்கள். அதேபோல வயதானவர்கள், அதிக உடல் எடை உள்ளவர்கள் தண்ணீர் அலவும் குறைவாக இருக்கும். ஒரு 150 பவுண்டு எடை உள்ள மனிதன் கிட்டதட்ட 10 காலன் தண்ணீர் இருக்கிறது. அதில் 7 காலன் செல்களில் இருக்கிறது, இன்னும் இரண்டு காலன் திசுக்களிலும் ஒரு காலன் இரத்தத்திலும் இருக்கிறது. தண்ணீர் உடலில் ஒவ்வொரு பாகமும் சரிவர இயங்க காரணம் எனவே தேவையான அ ளவு இருக்கும் வரை உடலினுள் ஓடிக்கொண்டே இருக்கிறது.

தண்ணீர் இழக்கும் அளவு அருந்த வேண்டியது அவசியம். இல்லை எனில் தண்ணீர் இழப்பு (dehydaration) ஏற்பட்டு உடல் உபாதைகளுக்கு காரணமாகிறது. சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதற்கும் உடலின் நச்சுப்பொருட்கள் வெளியேறாமலும் தடுக்கிறது. ஒரு நாளைக்கு 8 கோப்பை தண்ணீர் அருந்துவது மிக அவசியம். அதிக அளவில் அருந்துவதால் எந்த பிரச்சினையும் இல்லை. சிறுநீரகங்கள் அவற்றை சிறுநீராக்கி வெளியேற்றிவிடும். எனவே அதிக தண்ணீர் குடிப்பதை பழகிக்கொள்ள வேண்டும்.

உடலுக்கு தண்ணீர் அருந்துவதாலும் சில உணவுப்பொருட்களை செரிக்கும் போது உப பொருளாக உற்பத்தியாவதாலும் கிடைக்கிறது. அதிக உடல் பயிற்சியின் போதும் வெளியே வெப்ப நிலை அதிகம் இருக்கும் போது தண்ணீர் வியர்வையாய் உப்புடன் சேர்ந்து வெளியேறுகிறது. வியர்வை ஆவியாகி வெளியேறும்போது உடலின் வெப்பத்தை உபயோகிப்பதால் உடல் குளிர்ச்சி அடைகிறது. அதே சமயம் குளிர் அதிகம் இருக்கும் போது சிறுநீராக அதிக அளவில் வெளியேறுகிறது. அதிக அளவில் வாந்தி எடுத்ததலும் வயிற்று போக்கு ஏற்பட்டாலும் தண்ணீர் வெளியேறுவதால் உடனே நிறைய நீர் குடிக்க வேண்டியது அவசியமாகிறது.

சோடியம் பொட்டாசியம் போன்ற சில மிக முக்கியமான தனிமங்கள் நீருடன் சேர்ந்து வெளியேறுவதால் இவை உடலின் அமில காரத்தன்மை மற்றும் நீரின் அளவை சரியாக வைத்திருக்க அதிக நீர் அருந்துவது அவசியமாகும். உடலும் இந்த மின்ணுக்களின் அளவை சரியாக்கி கொள்ள மிகவும் உழைக்கிறது. உதாரணமாக அதிக சோடியம் மின்னணு உடலில் சேர்ந்துவிட்டால், உடனே தாகம் எடுத்து நாம் நீர் அருந்தி அதை சரிப்படுத்துவோம். உடனே மூளை சிறுநீரகத்திற்கு ஒரு செய்தி அனுப்பி, சிறுநீர் வெளியேறுவது குறைந்து சோடியம் அளவு சரியாகிவிடும். சோடியம் அளவு குறைவாக இருந்தால், சிறுநீர் அதிகமாக வெளியேறி இரத்ததில் நீரின் அளவைக் குறைந்து, சோடியம் அளவை சரிப்படுத்துகிறது. தாகம் எடுப்பது உடலின் நீர் அளவு குறைந்திருப்பதைக்காட்டுகிறது. அதேபோல பிட்யூட்டரி என்ற உறுப்பும், சிறுநீரகமும் தண்ணீர் மின்னணுக்கள் அளவை சரியாக அவைத்திருப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.

தண்ணீர் சமன்பாடு
உடலில் தண்ணீர் அளவு குறையும் போது மூளை வாசோப்பெரெஸின் என்ற ஹார்மோனை சுரக்கிறது. இது சிறுநீரகங்கள் அதிக சிறுநீர் வெளியேற்றுவதை தடுக்கிறது. உடலில் தண்ணீர் குறையும் போது திசுக்களில் உள்ள தண்ணீர் செல் சவ்வுகளில் இருந்து வெளியேறி இரத்தத்தில் கலக்கிறது. தண்ணீர் அளவு அதிகமாகும் போது இரத்ததில் இருந்து திசுக்களுக்கு உள்ளே சென்று தண்ணீர் அளவை கட்டுப்படுத்துகிறது.

சில சமயம் அல்டோஸ்டீரோன் என்ற ஹார்மோன் சரிவர சுரக்காமல் போகும் போது தண்ணீர் வெளியேறி மனிதன் இறக்கும் நிலை கூட வரலாம். இதற்கு நீரிழிவு இன்ஸிபெடஸ் என்ற பெயர்.

மிக சிறிய கைக்குழந்தைகள், அதிலும் பிரசவ காலத்திற்கு முன்னே பிறந்தவர்கள், வயதானவர்கள் நீர் சரிசம நிலையில் வைத்திருக்க முடியாமல் சங்கடப்படுவார்கள். அதே சமயம் மருத்துவமனையில் இரத்த சிறைகள் மூலமாக நீர் செலுத்தினால் அதிக நீர் சேர்ந்து பிரச்சினை வரும். எனவே வீட்டிலேயே கொஞ்சம் கொஞ்சமாக நீர் அருந்துவது அவசியமாகும்.

வயதானவர்கள் தண்ணீர் இழக்கும் போது குழப்பம், தெளிவின்மை போன்றவற்றிற்கு ஆளாவதால் தனியாக கோடை காலங்களில் வெளியே செல்லும் போது கவனம் தேவை. தாகம் எடுப்பதை உணரக்கூட முடியாமல் வயதாக வயதாக திண்டாட நேரிடும். எனவே அவர்களை பார்த்துக்கொள்பவர்கள் பார்த்து நீர் தருவது அவசியமாகும். தாகம் எடுப்பதை உணர முடியாமல் தண்ணீர் அளவு குறைந்து போய் இவர்கள் கஷ்டப்படலாம். அப்போது சிறுநீர் வெளியேறுவது குறைந்துவிடும் எனவே சிறுநீரக கற்கள் உண்டாகும் சாத்தியம் அதிகமாகிறது. வியர்ப்பது குறைந்து சோடியம், யூரியா போன்றவை உடலிலேயே தங்கிவிடும். இன்னும் அதிக நீர் இழப்பு இருந்தால் திசுக்கள் சுருங்கி சரிவர வேலை செய்யாது. மூளை இதயம் சிறுநீரகங்கள் சரிவர வேலை செய்ய இயலாது. எல்லா உறுப்புகளும் ஒருவித அதிர்ச்சிக்கு உட்பட்டு இறக்க நேரிடும். அதிக கோடை காலம், உடற்பயிற்சி போன்ற சமயங்களில் தண்ணீர் அருந்துவது மிக முக்கியம். தண்ணீர் அருந்தி உடலை மென்மையாக வைத்திருப்பது எளிதானது. அதேபோல நீரின் அளாவு அதிகமாகும் போதும் சோடியம் பொட்டாஸியம் போன்ற மின்னணுக்கள் அளவு குறைந்து இரத்தம் நீர்த்து போய் பிரச்சினைகள் வருகின்றன. திசுக்கள் நீர் அதிகம் கொண்டு சரிவர வேலை செய்வதில்லை. இந்த பிரச்சினைகள் சிறுநீரக குறைபாட்டால் ஏற்படலாம்.

அதிக மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை இருப்பவர்கள் அதேபோல நீர் அருந்துவதும் முக்கியம். மருந்துகளில் தேவை இல்லாத வேதிப்பொருட்களை கல்லீரல் நீரில் கரைத்தே வெளியேற்றுகிறது.

நீர் அருந்தும் போது அதை காப்பி, தேநீர், கோக், பெப்ஸி போன்ற குளிர்/சூடான பானங்களால் நிரப்ப நினைத்தால் அது தவறானது. தேநீர் காப்பி போன்ற பானங்கள் சிறுநீர் வெளியேற உதவுவதால், தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதில்லை. மென்பானங்களோ அதில் உள்ள பாஸ்பாரிக் அமிலத்தால் எலும்புகள், பற்களை கரைக்கிறது. அதில் உள்ள சர்க்கரை உடலின் எடையை கூட்டுவதோடு இன்னும் சில நோய்களை தரவல்லது. தண்ணீருக்கு நிகர் எதுவும் இல்லை !!
ஒரு நாளைக்கு தேவையான நீரை எப்படி அருதுவது என்பதற்கு மருத்துவர்கள் ஒரு எளிய வழி சொல்கிறார்கள். காலை உணவுக்கு முன் ஒரு கோப்பை, காலை உணவு உண்ட 2 மணி கழித்து ஒரு கோப்பை, மதிய உணவிற்கு அரை மணி முன் ஒரு கோப்பை, மதிய உணவு உண்ட 2 மணி கழித்து ஒரு கோப்பை, இரவு உணவிற்கு அரை மணி முன் ஒரு கோப்பையும் இரவு உணவு உண்ட ஒரு மணி கழித்து ஒரு கோப்பை என்றும் பழகிக்கொள்ளலாம். அதிக நீர் அருந்துவது தோலை வறட்சியாக்காமல் இருக்கவும் உதவும்.

குழந்தைகள் முன்னிலையில் புகைபிடிப்பதை நிறுத்துவது எப்படி
Sep 19th, 2006 by பத்மா அர்விந்த்

ஒருவர் புகை பிடிக்கும் போது அதிலிருந்தும், புகைப்பவரின் சுவாச காற்றிலும் இருந்த்து வெளிப்படும் புகை second hand smoke என்று அழைக்க படுகிறது. இதன் விளைவால் வருடத்திற்கு 150,000 குழந்தைகள் முற்றிய நுரையீரல் நோயால் பாதிக்கப் படுவதோடு ஆண்டொன்றுக்கு 3000 குழந்தைகள் இறக்கிறார்கள். உலகளவில் இது இன்னமும் அதிர்ச்சியூட்டும் எண்களைத்தரலாம்.

புகைபிடிப்பவரின் அருகில் இருப்போருக்கு கண் எரிச்சலும், இருமலும் ஏற்படுகிறது. இவர்களியும் மருத்துவ உலகு passive smokers என்றே அழைக்கிறது.

சிகரெட் புகையில் 4000 விதமான புற்று நோய், மற்றும் வெகு துன்பம் தரக் கூடிய உடல் நலனுக்கு பாதகம் விளைவிக்கை கூடிய வேதி பொருட்கள் கலந்திருக்கின்றன.

அடிக்கடி காது வலி, ஆஸ்த்மா எனப்படும் மூச்சிழுப்பு, பொதுவான அலர்ஜி, இருமல், நுரையீரல் சம்பந்தமான நோய்கள் ஏற்படுகிறது.

கருவுற்ற பெண்மணியின் அருகில் புகை பிடிப்பதால், வருடத்திற்கு அமெரிக்காவில் 18,600 குழந்தைகள் குறைபாட்டுடன் பிறக்கின்றன. 300000 குழந்தைகளுக்கு இருமலும், bronchitis உம் வருகின்றது. 1.6 மில்லியன் குழந்தைகள் காதில் கிருமிகள் வளர்வதால், காது வலியும் சீழும் ஏற்படிகிறது. வெளியே பால்கனியில் புகை பிடித்தாலும், கார் கராஜில் பிடித்தாலும் உள்ளே வந்த 5 மணித்துளிகளில் புகைப்பவரின் சுவாசத்திலிருந்து இந்த வேதி பொருட்கள் வெளிப்படுகிண்றன. என்னுடைய மகன் சென்று வந்த காப்பகத்தில் ஒரு பெண் வெளியே சென்று புகைத்து விட்டு வரும் பழக்கம் உடையவர். அவர் வந்து முத்தமிடுகின்ற நாட்களில் என் மகனின் கன்னங்களில் சிவந்திருக்கும். இதை கவனித்து வந்து காப்பகத்தில் புகார் கொடுத்து பிறகு புகைத்த பின் அவர் குழந்தைகளுடன் இருப்பதை நிறுத்தினார்கள். இப்போதெல்லாம் இங்கு குழந்தைகள் காப்பகத்தில் புகைப்பது குற்றம். சட்டப்படி அது தடை செய்யப்பட்டு விட்டது. இதை விட காரில் நெடுந்தூரம் பயணிப்பவர்கள் புகைக்கும் போது பின் இருக்கையில் உள்ள குழந்தை அந்த காற்றை சுவாசிக்க நேருகிறது.

இதை எப்படி குறைப்பது என்பதை சென்ற HBM 6 நிலைகளில் கவனிப்போம்.

1. மனதில் தோன்றும் எண்ணம் : புகை பிடிப்பது தவிர எத்தனையோ பழக்கங்கள் இருந்தாலும் இது ஒரு stigma ஆகிவிட்டது. எந்த நோய் வந்தாலும் இதுவே கரணம் என்று சொல்வது ஊடகங்களுக்கும் பழகிப்போய்விட்டது. நான் வீட்டிற்கு வெளியேதான் புகை படிக்கிறேன். குழந்தைக்கு உடம்பிற்கு வந்ததற்கு வேறுகாரணம் இருக்ககூடும் என புகைபிடிப்பவர் மனதில் சமாதானமாக எண்ணங்கள் தோன்றும்.

2. நோயின் தீவிரம் குறித்து எண்ணங்கள் : ஒருவேளை குழந்தையை காரில் அழைத்து செல்லும் போது புகைபிடிப்பது காரணமாக இருக்கலாம். நம்மால் குழந்தைக்கு காதுவலி வந்து ஏன் அவஸ்தைபடவேண்டும்? ஒரு வேளை அவர்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம். மருத்துவரிடம் பேச வேண்டும் என்பது போன்ற எண்ணங்கள் மனதில் ஹோன்றும். புகைபிடிப்பதன் மீது அதிக தீவிரம் இருந்தால் முந்தைய எண்ணம் வெற்றி பெற்று நிறுத்துவதற்கான முயற்சிகலை தடை செய்யும்.

3. நன்மைகள் : புகைப்பதை நிறுத்திவிட்டால் நமக்குமே உடலுக்கு நல்லது அதிகமாக களைப்பாகாமல் இருக்கும். இதனால் தினம் செலவாகும் $5ம் மிச்சம். குழந்தைக்காகவாவது புகைப்பதை நிறுத்திவிடவேண்டும்.
இதைப்போல நன்மைகளை எடுத்து சொல்வதும் மீண்டும் அந்த நன்மைகளை வலியுறுத்துவதும் நல்ல மாறுதலை ஏற்படுத்தும்.

4. செயல்படுத்த தோன்றும் தடங்கல்கள் : ஒரு சிகரெட்ட்டுக்காக வீட்டிற்கு வெளியே செல்ல வேண்டும். குளிர்காலத்தில் அத்தனை உடைகளையும் பொட்டுகொண்டு வெளியே போய் ஒரு சிகரெட் பிடிப்பது நடக்காத காரியம். வெளியூருக்கு போகும் போது போக்குவரத்து நெரிசலில் மாட்டிகொண்டு தவிக்கும் போது ஒரு சிகரெட் இருந்தால் பரவாயில்லை. இந்த குழந்தைக்காக எப்படி வெளியே புகை பிடிக்க முடியும். நாம் நிறுத்தினாலும் வெளியிடத்தில் மற்றவர்கள் புகைக்காமலா போய்விடுவார்கள். இந்த ஒரு சிகரெட்டால் என்ன வந்துவிடப்போகிறது போன்ற நினைப்புகளும் சமாதானங்களும் தோன்றும்.

5. செயல்படுத்த தூண்டுபவை : புகைபடிப்பதை முழுதுமாக நிறுத்தாவிட்டால் என்ன. குறைந்தபட்சம் குழந்தைக்காக காரில், வீட்டினுள் நிறுத்தினால் குழந்தை நலமாவது மிஞ்சும். பாவம் ஒவ்வொருமுறை காது வலியும், இருமலும் வரும் போது என்னமாய் கஷ்டப்படுகிறது. இனிமேல் அடைந்த இடத்துள் புகைபிடிக்க மாட்டேன் என்பன போன்ற எண்ணங்கள் ஏற்படுவதும் அவ்வாறு ஏற்படுமாறு நண்பர்களோ துணைவி துணைவரோ பேசுவதும் ஊக்குவிப்பதும் நலம் பயக்கும். இதுபோல செய்வது பிறகு நாளாவட்டத்தில் புகைப்பதையே முழுதுமாக நிறுத்த வழிவகுக்கும்.

6. இதை தடுக்க காரில், வீட்டில் புகைக்காதீர்கள். புகைப்பதை நிறுத்துவது மிகவும் நல்லது. முடியாதவர்கள் குறைந்த அளவில் குழந்தைகளின் நலனை கருத்தில் கொள்ளுவது சிறந்தது. புகைப்பவர் அருகில் குழந்தைகளை இருக்க விடாதீர்கள்.

குழந்தைகளின் உடல் நலன் அவர்களின் வளர்ச்சிக்கு அடிப்படை.
இக்கட்டுரை தமிழோவியத்தில் முன்னர் வெளியானது.

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions