»
S
I
D
E
B
A
R
«
Every little things that you do Baby I am amazed by you
Nov 13th, 2006 by பத்மா அர்விந்த்

பதினைந்து வருடங்களுக்கு முன்னால் இதே போல் ஒரு நவம்பர் 13 ஹூப்ளிக்கு புகைவண்டியில் சென்றது நினைவுக்கு வருகிறது. முன்பின் தெரியாத ஒரு இருபது பேரோடு அர்விந்தோடு நான் மட்டும். கூட்டத்துடன் இருந்தாலும் தனிமையாய் இருக்க முடியும் என்பதை நிரூபிப்பதாய், எனக்கு மிகவும் பிடித்தமான புகை வண்டி பயணத்தை கூட ரசிக்க விடாமல் ஒரு பயணம். வேலை அதிகமாய் இருந்ததாலும் நான் படும் தர்மசங்கடம் எல்லாரும் ஏன் படவேண்டுமென்ற என்ணத்திலும் என் சகோதரர்களோ பெற்றோர்களோ வர வேண்டாமென்று சொல்லிவிட்டு போன ஒரு பயணம்.

உனக்கு என்ன சம்பளம் என்று எதிர்பாரமல் வந்த கேள்வியால் திகைத்து போன நான் எப்போதும் போல ஒருவர் ஊதியத்தை கேட்பது அநாகரிகம் என்று பதில் சொன்னபின்தான் அவருடைய முகத்தில் படர்ந்த அதிர்ச்சியை கவனித்தேன்.இந்த கேள்வியை யாரும் என்னை கேட்டதில்லை. நானும் யாருடையதையும் கேட்டு பழக்கம் இல்லை என்பதால் இப்படிக்கூட நேரடியாக கேட்பதும் அது குடும்பத்தில் ஒருவர் கேட்டால் சரியானதே என்றும் பலர் நினைப்பதும் எனக்கு புரிந்தது.

உண்மையிலேயே என் சகோதரர்கள் பணிக்கு செல்ல ஆரம்பித்த காலத்தில் என் பெற்றோர் கேட்டும் பார்த்ததில்லை. என்ன வேலை, என்ன பிராஜக்ட் என்றெல்லாம் பேசுவோமே தவிர ஊதியத்தைக் குறித்து இல்லை.
ஏன் அர்விந்த், சம்பளம் என்ன கேட்காமலேயே கல்யாணத்துக்கு ஒத்துகிட்டா என்றபோதும் என் பதிலை அவர் எதிர்பார்க்காதது தெரிந்தது.
கேலியாக உடனே அர்விந்த்திடம் என்னடா உன் மேலே இத்தனை நம்பிக்கையா என்றாவரிடம், இல்லை என் மீதான நம்பிக்கை என்ற என் பதில் அவருக்கு இன்னும் ஆச்சரியமாக இருந்திருக்க வேண்டும்.

இப்படித்தான் 15 வருடங்கள் முன்னால் இதே நாளில் என் திருமண வாழ்க்கை ஆரம்பித்தது. இன்னமும் என் கணவரின் தந்தைக்கும் எனக்கும் உள்ள உறவு சுகமானதில்லை என்றாலும் சுமையாக இல்லை. நான் செய்கின்ற செய்துவருகின்ற வேலைகளில் எல்லாம் மதிப்பும் மகிழ்ச்சியும் இருந்தாலும் இன்னும் சற்றே பழங்கால சம்பிரதாயங்களில் நம்பிக்கை கொள்ள கூடாதா என்ற ஆதங்கம் எட்டிப் பார்க்கும்.என்னுடைய பழக்கத்தையும் நம்பிக்கையும் மாற்றுவதே அதுவும் விரும்பும் மாற்றங்களை ஏற்படுத்துவதே கடினமாக இருக்கும் போது 70 வருட நம்பிக்கையை மாற்றுவதும் அந்த நம்பிக்கை தவறானது என்றும் சொல்வதும் சரியாக முடியாது. அவரவர் நம்பிக்கை அவரவருக்கு. ஓவ்வொருவரும் இன்னொருவருடைய அந்தரங்க இடைவெளியை (personal space) மீறாமல் இருந்துவிட்டாலே போதுமானது.

கவிதாவின் சமீபத்திய பதிவினை ஒத்தே படித்த வேலைக்கு போகும் பெண்கள் பற்றிய அர்விந்தின் தந்தையின் கருத்தும் என்பதில் எனக்கெதுவும் வருத்தும் இல்லை. ஆனாலும் சில சட்ட வழக்குகள், சிலரின் மருத்துவமனை அவசரங்கள், குழந்தைகளின் மேற்படிக்கான என் ஆலோசனைகள் என்று கண்டதில் அந்த கணிப்பு நிறையவே மாறி இருக்கிறது. படிப்பினாலும் பறந்துபட்ட அறிவினாலும் நன்மைகளும் உண்டு என்பதை அனுபவ ரீதியாக புரிந்துகொண்டவர் மட்டும் அல்லாமல் இப்போது என்னை ஊக்குவிப்பவராகவும் மாறி இருக்கிறார்.

ஒரு நாள் ஆய்வகத்தில் இருந்த போது எனக்கு பூக்கள் வந்திருப்பதாக நான் தங்கி இருந்த ஆய்வக மாணவர் விடுதியில் இருந்து தொலைபேசி வந்தது.என்னை தெரிந்தவர்கள் யாரும் எனக்கு பூக்கள் அனுப்புவதில்லை என்பதால் ஒருவித எதிர்பார்ப்புடன் சென்றபோது, அழகான சிவப்பு ரோஜாக்களும் வெள்ளை மலர்களுடன் கூடிய பூங்கொத்து ஒரு வேலைப்பாடு நிறைந்த குடுவையில் காத்திருந்தது உன்னை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்ற மடலோடு. மலர்களை அறைத்தோழிகளிடம் தந்து நினைவுகளை நான் தக்க வைத்துக்கொண்டேன்.அன்று தொடங்கிய தேடல் இன்னமும் வளர்கிறது. அவ்வப்போது புதுப்புது பரிமாணங்கள் என புரிந்து கொண்டே போகும் உறவில் இப்போது ஆனந்தமும், எந்த முடிவெடுக்க வேண்டுமானாலும் தயக்கம் பட தேவையில்லாத ஒரு நட்பும் மட்டுமே வளர்ந்து கொண்டிருக்கிறது.ஹிந்தியும் கன்னடமும் தமிழும் என சொல்லிகொடுப்பதாகட்டும், நடனம் பாட்டு என்று முயற்சிப்பதாலாகட்டும் உற்சாகம் நிரம்புகிறது. இந்த நினைவுகள் சுகமானதுதான் என் நண்பனைப்போல.

ஒரு தன்னிலை விளக்கம்
Oct 16th, 2006 by பத்மா அர்விந்த்

ஒரு தன்னிலை விளக்கம்:
பொதுவாக எனக்கு தன்னிலை விளக்கங்களில் நம்பிக்கை இருந்ததில்லை. ஏனென்றால் நாம் உண்மையாக ஒருவரின் மேல நல்பிக்கை வைக்கும் போது அவர் என்ன செய்தாலும் அதன் அடிப்படை காரணங்கள் சரியாகத்தான் இருக்கும் என்ற ஒரு அனுமானம் இருக்கும். இல்லை ஒருவர் மீது நம்பிக்கை வைக்க போவதில்லை என்று தீர்மானித்தபின் அவர் என்ன சொன்னாலும் அதன் மேல் கேள்விகள் பிறந்து கொண்டே இருக்கும். ஆனாலும் ஒரு கூட்டு வலைப்பதிவில் (சக்தி) என் மீது வைக்கப்பட்ட கேள்விகளுக்கு விடை அளிப்பதே சிறந்ததே என்பதால் இந்த பதிவு.

அடைப்புக்குள் உள்ளவை எலிவால்ராஜாவின் பின்னூட்டம்:

{பத்மா உங்கள் கட்டுரைகள இப்பொழ்துதான் படிக்க ஆரம்ப… பத்மா உங்கள்
கட்டுரைகள இப்பொழ்துதான் படிக்க ஆரம்பிதுயிருக்கேன்…
எப்பொழுதும் நான் யாருக்கும் பின்னூட்டம் இடுவதுயில்லை…மிக
பிடித்திருந்தால் அல்லது கருத்து மிகவும் உண்மைக்கு
புறம்பாகயிருந்தால்…. அதிலும் நான் பெண்கள் கட்டுரைக்கு அவ்வள்வாக
பின்னுட்டம் இடுவது மிக அரிது.. இது வரை மூன்று பெண்களுக்குமட்டும்
பின்னூட்டம் இட்டுயிருக்கிரேன் அதில் ஒன்று உங்களுடயது…
உங்கள் எழுத்துபிடித்துயிருந்தது…

உங்கள் கட்டுரையை படித்துவிட்டு சென்றுவிடுவேன்….
பிறகு ஒருமுறை உங்கள் பழைய கட்டுரையகளை
படித்துபார்க்கவேண்டிவந்தது…(ஏன் வந்தேன் என்பது கடைசியில்)

உங்கள் கட்டுரைகளில் பொதுவாக ஒரு தன்மையிருக்கிரது.. எப்படி சொல்வது என
தெரியவில்லை…

நீங்கள் குறைகளைமட்டுமே பார்கீர்களா… இல்லை ஆண்கள் மீதி உள்ள
வெறுப்பினால் அவை வெளிவருகிறாதா…அல்லது மற்றவர்கள் உங்கள் மீது இரக்கம்
படவேண்டும் அல்லது மற்றவர்கள் உங்களை பார்த்து நல்ல கருத்து.. நல்லா
சொன்னீங்க.. அப்படி மற்றவர்கள் சொல்லும் போது ஏற்படும் அந்த
மயகத்திர்காகவா?
ஒன்றும் புரியவில்லை… ஏன புரியவில்லை உங்கள் கட்டுரையில் நிறைய பொய்கள்
இருப்பதாக் தெரிகிறது…. ஏன் இந்த பொய் மேற்சொன்ன காரணத்திற்காகவா?
அதுவும் தெரிய்வில்லை… ஆனால் ஒன்றுமட்டும் புரிகிறது…
உங்களுக்கு குறைகள்மட்டுமே பளீச் என தெரிகிறது.. அந்த குறைகளில்
எப்படியும் ஆண்களை நுழைத்துவிடுகிரீர்கள்(நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ)

உலகத்தில் சரியானது, தவறானது என்று எதுவும் இல்லை. விஷயங்கள் அவை
சொல்லப்படும் விதத்தில் சரியாகவோ, தவறாகவோ இருக்கலாம் என்பது எனது
கருத்து…

உஙகள் கட்டுரையில்(சிலதில்) உங்கள் மீது ஒர் இரக்கம் உருவாகவேண்டும் என
பொய் சொல்லிகீர்ர்களோ என எனக்கு படுகிறது…}

பொதுவாக என் பதிவுகளில் ஆண்களை குற்றம் சொல்வதாகவோ; ஒரே மாதிரி அலுப்பைத்தருவதாகவோ; குற்றங்களை மட்டும் பார்க்காதீர்கள் நிறையை பார்க்க கற்றுக்கொள்ளுங்கள் என்று அறிவுரை சொல்வதாகவோ மறுமொழிகள் வந்திருக்கின்றன. நான் ஆரம்பத்தில் சொன்னபடி என் பதிவின் நோக்கம் நிஜங்களின் அவலங்களை சொல்வதாகவே இருக்கும். இதற்காக எனக்கு நிறைகள் கண்ணுக்கு தெரியாது என்று நீங்கள் புரிந்து கொண்டால் அது உங்களின் தவறே.

நான் பணி செயும் இடத்தில் நான் சந்திப்பவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களே. இவர்களின் பிரச்சினைகள் பலர் அறியாதது.நியுஜெர்சியில் வறுமைக்கோட்டின் கீழ் இருக்கும் இவர்கள் பலருக்கு தொலைபேசி கூட கிடையாது. இவர்களின் வாழ்வில் நடந்தது, நடப்பது என் பதிவில் இவர்கள் அனுமதியுடன் எழுதுகிறேன். இவர்கள் அனுமதியும் மொழியாக்கத்தின் படிவமும் என் கோப்புகளில் உண்டு. நிஜங்களை எழுதும்போது அவை என் மீது இரக்கமும் அனுதாபமும் பெற எழுதுவதாக நீங்கள் சொல்வது நீங்கள் எந்த அளவிற்கு என் பதிவுகளை புரிந்து கொண்டீர்கள் என்று காட்டுகிறது.

முகம் தெரியாத 800 சொச்சம் பதிவாளர்களின் பாராட்டு மயக்கம் தருமானால் நிறைய வாசகர்களின் கவனத்தை கவரும் வண்ணம் செய்திகளை எழுதிக்கொண்டிருக்கலாம்.

{ஒரு கட்டுரக்யில்… ஜிப்மர் படிக்கும் போது உங்களை வேசி என சகமாணவர்கள்
கூறினார்கள் என சொல்லியிருக்கீரீர்கள் இந்தெ கட்டுறையை படித்தபோது உங்கள்
மீது யிருந்த மதிப்பு தாழ்ந்து போனது… ஆமாம்… இதில் நீங்கள் பொய்
சொல்லியிருக்கீர்கள்…(கவிதைக்கு பொய் அழகு எனகூறுவார்கள்… உங்கள்
கட்டுரைக்கு கூடவா அழகு)

பிர்லா உதவிதொகை வாங்கும் போது மற்ற உதவிதொகை வாங்க கூடாது நீங்கள்
எப்படி இரண்டு உதவிதொகை வாங்கீனீர்கள் பிர்லாபடிவத்திலே கையெழுத்து
இடும்போதே இது தெரிதுயிருக்கும்… அப்படி யிருக்கும்போது… இரண்டு
உதவிதொகை வாங்கியிருகீர்ர்கள் நீங்களே இதுமாதரி ஏமாற்றி இருக்கும்போது…
அடுத்து.. பிர்லா தொகை… மாதம் 450ரூபாய்கிடைக்கும் அதைவிட நீங்கள் மற்ற
உதவிதொகையும் வாங்கிரிகீர்கள்..}

பிர்லா உதவித்தொகை பெறும்போது எந்த கடனுதவியும் (national loan scholarship) பெறக்கூடாது என்ற சொன்னதாக நினைவில் இல்லை. கடனுதவி ஆசிரிய பணி செய்ய முடியாமல் போனால் திருப்பிதர வேண்டிய ஒன்று.இதன் விவரங்களும் வழங்கிய சான்றிதழும் என் பிர்லா படிவத்துடன் அனுப்பப்படே உதவி தொகை பெறப்பட்டது(இதுவும் தகுதி மற்றும் பொருளாதார அடிப்படையில் தரப்படும்) அதுவே 400 ரூபாய்க்கு மேல் இருக்கும் பொது வேறு என்ன தேவை இருக்க முடியும் என்பதாக ஒரு சந்தேகம் இருக்கிறது உங்களுக்கு. என் தேவைகளை நான் நிர்மானித்துக்கொள்கிறேனே. மறுபடியும் உங்களின் குற்றச்சாட்டு, என்னைவிட என் தேவைகள் எவ்வளவு இருக்க முடியும் என்று நீங்கள் தீர்மானிக்கும் சுதந்திரம் தெரிகிறது.

{அடுத்து ஜிப்மரில் நீங்கள் என்ன படித்தீர்கள் என தெரியவில்லை (M.sc, or
B.sc MLT) ஏன் என்றால் M.scயில் மொத்தமே 6 பேர்களே… உங்களை யாராவது
உங்கள் சக மாணவன் சொல்லியிருந்தால் அதை உங்கள் துறை தலைவரிடம்
சொலியிருகலாம்… B.sc MLTயாக யிருந்தால் உங்கள் அமைப்பாளரிடம்
சொல்லியிருக்கலாம்… மிக கடுமையான தண்டனை கிடைத்துயிருக்கும் நீங்கள்
நிச்சயமாக உஙல் சக மானவரை பற்றி சொல்லியிருக்க மாட்டீர்கள். எந்த ஒரு
பெண்னையும் ஒருவர் எடுத்தவுடன் வேசி என கூறமுடியாது. unless otherwise
வேசிபோல தெரிந்தால் …. (this makes me curious to see you)

ஒரு கால் உங்கள் தோற்றம் அப்படி பட்டதோ…)

நான் ஜிப்மரில் படிக்கும் போது ஏற்பட்ட கசப்பான அனுபங்களை கூறித்து ஏன் குற்றம் சுமத்தவில்லை என்று கேட்டிருக்கிறீகள். நான் குற்றம் சுமத்தினேனா இல்லையா என்றே சொல்லாதபோது இந்த ஆணித்தரமான அனுமானம் ஏன் என்று கேட்கப்போவதில்லை. அந்த குறிப்பிட்ட பதிவு சொல்லவந்த கருத்தே வேறு. அது என் சுயபுராண பதிவு இல்லை.பாலியல் தொல்லைகள் பலருக்கும் தெரிந்து நடப்பதில்லை. பலமுறை பாலியல் துன்புறுத்தல் செய்பவர்கள் மர்றவர்களிடம் மிகவும் நல்ல பிள்ளையாக நடப்பதும் உண்டு. ஜிப்மரில் படித்த ஒரு காரணத்தாலேயே அங்கே படித்த படிக்கும் பல பெண்களின் நிலை, அனுபவம் பற்றி உங்களால் ஆணித்தரமாக சொல்ல முடிவது ஆச்சரியமே. உங்கள் வகுப்பில் உடன் படிப்பவராக இருந்தாலும்கூட உங்களுக்கு தெரிந்திருக்க அவசியம் இல்லை.

{அது போக ரொமன் ரோலன்மாலையில் வேலை
செய்ததாக கூறியிருகீர்கள்.. ரோமன் ரோலன் அது போல ஒரு வேலைபற்றி எனக்கு
தெரியாது ஆனால்… அங்கு வேலை கிடப்பது பாண்டிச்சேரி மக்களுக்கு
மட்டுமே… ஆனால்… உங்களது ஒரு கட்டுரையில் உங்கள் ஊர் கும்பகோணம் என
படித்ததாக இருக்கிறாது… (உண்மையை சொல்கிறேன் என்னால் உங்களை
நம்பமுடியவில்லை, நான் உங்களை நம்புவதலோ நம்பாமல் விடுவத்லோ ஒன்ற்
ஆகிவிடாது)}

இப்படி ஒரு வேலை இருப்பதாக தெரியவில்லை என்ரு சொல்லும் நீங்கள் உடனே அங்கே வேலை பாண்டிச்சேரியில் இருப்பவர்களுக்கு மட்டுமே என்றும் சொல்கிறீர்கள். ஜிபம்ரில் இருந்தால் அது பாண்டிச்சேரியில் இருப்பதாக பொருளில்லையா/ பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்திருக்க வேண்டியதும் அவசியமா? மேலும் நான் அங்கே எந்த வேலை செய்தேன் என்பதை கூட குறிப்பிடவில்லை, இத்தனை அனுமானங்களும் அவசர முடிவும் ஏன்?

{ஏன என்றால், ஜிப்மரில் சகமாணவன் வேசி.. மற்ற மாணவிகள் உங்களை
அவமானபடித்தியிருப்பது…300ரூபாயிக்கு படுக்கைக்கு அழைத்தது, எய்ம்ஸில்
வாத்தின் பாலியல் தொல்லை… தோழியின் கணவன் அசிங்கமான படம் வைத்தது…
உங்களை பார்த்தால் காமம்தான் வருகிறது என கூறியது… இதயெல்லம்
படிக்குபோது சாரி எனக்கு உங்கள் தோற்றம் அப்படி பட்டதோ என நினக்க
தோன்றுகிறது…}

இப்படித்தான் குற்றம் சொல்லும் பெண்மீது இத்தனை வருடம் கழித்தும் என்னை யார் என்றும் எப்படிப்பட்டவர் என்றூம் தெரியாமலே குற்றம் இழைத்தவர் யாரென்று தெரியாத போதே என்மீது அவதூறுகளை அள்ளிவீச முடிகிறது. இதற்கு பயந்து பல பெண்கள் மவுனமாக இருக்கிறார்கள். ஜிப்மர் போன்ற தன்னிச்சை நிறுவனங்களில் உங்களின் வெற்றி தோல்வி துறை தலைவரால் நிரணயிக்க முடியும். அதேபோல ஆராய்ச்சி செய்யும் எந்த நிறுவனத்திலும் காலம் தாழ்த்த முடியும்.இதற்கு பயந்து உணர்வுகளன் தாக்கத்தில் ஈடுகொடுக்க முடியாத பெண்கள் நிறைய.

அதேபோல AIIMS இல 40 நாட்கள் தங்கியே அந்த நிறுவனம் பற்றி முழுமையாக அறிந்திருப்பது ஆச்சரியமே.என் மீது மோகித்திருந்த கமல் சர்மா என் துறை பெண் ஒருத்தியை, என் தோழியை திருமணம் செய்ய இருந்ததால் , அவனுடைய துறைத்தலைவரும் தோழியும் தலையிட்டு நிலைமையை சகஜமாக்க விரும்பியதால் குற்றம் சுமத்தவில்லை. என்றாலும் திருமணம் முடிந்து ரஞ்சிதா கருவுற்ற நிலையில் ஆபத்தான இடத்திற்கு அவளை அழைத்து சென்று வேகமாக பைக் ஓட்டிச் சென்று தனியான இடத்தில் அவளை கொல்ல முயன்றுவயிற்றீல் இருந்த 8மாதக் குழந்தை இறந்து போய், ரஞ்சிதா அ வன் மீது வழக்கு தொடர முற்பட்டு சில அரசியல் தலவர்களால் அது கைவிடப்பட்டு போனதெல்லாம் நீண்ட தொடர் நிகழ்வுகள். மன நல மருத்துவரால் sex addict என்று சொல்ல பட்டு அதற்கான சிகிச்சை மேற்கொண்டதும் உண்மை. கமலை விவாகரத்து செய்ய முடியாமல் ரஞ்சிதா மேலாராய்ச்சி சாக்கிட்டு இங்கே வந்ததும் பின் அவனை விவாகரத்து செய்ததும் பிறகு இன்னொருவரை மணந்து இப்போது நிம்மதியாக இருப்பதும் உண்மை. இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவும் உதவி பேராசிரியராகவும் இருக்கிறார். இப்போது ரஞ்சிதாவின் தோற்றத்திலும் உங்களுக்கு சந்தேகம் வந்திருக்குமே. இருவது வருடங்களுக்கு முன்னால் இத்தனை சட்டதிட்டங்களும் பெண்களுக்கு ஆதரவாக இல்லை.

இத்தனைக்கும் கடைசியாக: நான் உங்களைப்போல என் கல்லூரியில் படித்த ஒருவர் என்றால் ஆர்வத்துடன் என்னைப்பற்றிய உண்மை விவரங்களை கூறி அவரைப்பற்றி தெரிந்து கொள்ள முயற்சித்திருப்பேன். ஆனால் உண்மையான பெயரையும் சொல்லாமல் நீங்கள் குற்றசாட்டுக்களை அள்ளிவீசுவது ஆச்சரியமே.

என் பதிவுகளில் இருப்பது பொய்யென்று நீங்கள் கருதினால் எனக்கு வருத்தம் இல்லை.

இந்த விளக்கங்கள் உங்களுக்காக இல்லை, மற்ற வாசகர்களுக்கு விளக்கம் சொல்ல எனக்கு ஒரு தார்மீக பொறுப்பு இருப்பதாக நான் கருதுவதால் மட்டுமே.

என்னை சந்திக்க உங்களுக்கு ஆர்வம் இருப்பதாக கேலி பேசி இருக்கிறீர்கள். I choose my friends, and my battles too. இந்த விவகாரத்தில் இதற்கு மேல் பதிலளிக்க விரும்பவில்லை, இது தொடர்பான எதிலுமே. என் பதிவுகள் சொல்லும் நிஜத்தில் விருப்பம் இல்லாதவர்கள் படிக்காமல் போனாலும் எனக்கு இழப்பொன்றும்ம் இல்லை. எழுத்து எனக்கு தொழிலும் இல்லை, பொழுது போக்கும் இல்லை. இது எனக்கு ஒரு ஊடகம், மற்றவருக்கு சில கருத்துக்களை பரிமாற வசதி உள்ள ஒரு ஊடகம். அவ்வளவே.

பல்வலியால் படும் பாடு
Apr 3rd, 2006 by பத்மா அர்விந்த்

என் வீட்டில் எல்லோருக்கும் பற்கள் கரும்பை கடித்து தின்கின்ற ரகம் இல்லை. ஈறுகளின் அறுவை சிகிச்சை செய்து, இப்போது நலத்துடன் இருந்தாலும் பேகல் போன்றவை உண்ணவே யோசிக்கும் ரகம். என் மகன் 3 வயதிலேயே பால்பற்களை கூட பிடுங்கி பற்கள் இல்லாமல் திரவ உணவில் 7 வயதுவரை வளர்ந்தவன். அதிலும் முகம் வீங்கி, கேவர்னஸ் சைனஸ் வழியாக கிருமிகள் பரவியிருக்குமோ என்ற ஐயத்தில் அவசர சிகிச்சை பிரிவில் இரவை கழிக்க நேரிட்டது. பற்களை இழந்துவிட்டால் உண்ண முடியாமல், சக்தி இல்லாமல் எந்த வேலையும் செய்யவும் முடியாமல் திணறிப்போகிறது. ஈறுகளில் நோய் வருமேயானால், அது சைனஸ் மூலமாக மூளைக்கும் பரவ வாய்ப்பு உண்டு. இதனால் தன்னுடைய மாக்ஸிலரி சைனஸ் பாதிக்கப்பட்டு நல்ல சுரத்தில் என் மகன் பல நாட்கள் அவதிப்பட்டான்.

இப்போது அதே நிலையில் அர்விந்த். ஈறுகளில் வீக்கம் கண்டு அது புரையோடி முகம் முழுதும் வீங்கி, கடந்த வாரம் உண்ணவும் முடியாமல் பேசவும் முடியாமல், அதையும்விட வேலைகளை செய்யவும் முடியாமல் ஒரே அவஸ்தை. இத்தனைக்கும் சானிகேட்டர் பிரஷும், பார்த்து வாங்கிய பற்பசையும், இரண்டு வேளையும் பல் துலக்குவதும் உண்டு.ஒருமுறை மிக மோசமான விபத்துக்கு பிறகு பற்கள், தாடை எலும்பு அறுவை சிகிச்சையால் சரிசெய்தும் அடிக்கடி வரும் தாகுதல்தான் என்றாலும் எல்லோரும் கஷ்டப்பட்டது கடந்த வாரம் இன்னும் அதிக பிரச்சினையாகிவிட்டது.

இங்கே 4 வயதிலேயே முதம் முறை பல்மருத்துவரிடம் அழைத்து போய் வருவது வழக்கமாக இருக்கிறது.(well baby visit)மிக முக்கியமாக பதின்ம வயதில் பல் வரிசையை ஒழுங்குபடுத்த இன்னபிற சுத்தம் செய்ய என்று ஒரு வரிசைக்கிரமத்தில் நடந்தே ஆகவேண்டி இருக்கிறது. இல்லை என்றால் பள்ளி நர்ஸிடமிருந்து தொலைபேசிகள் வருவதும் உண்டு. இங்கே பள்ளியிலும் வருடம் இரண்டுமுரை பற்களை பரிசோதிக்கிறார்கள். பல் துலக்கும் முறை சொல்லி தருவது, ஒரு இலவச ப்ரஷ், பற்பசை, நைலான் நூல்( floss) எல்லாம் தருவார்கள்.
இப்போது கோக் போன்ற பானங்களை குடிப்பவர்கள் அதில் உள்ள பாஸ்பாரிக் அமிலத்தின் விளைவால் பல் எனாமல் மெல்ல அழிவதனால் இன்னும் பிரச்சினைக்கு உள்ளாகிறார்கள்.
ஆரோக்கியம் இல்லாத பற்களும் ஈறுகளும் இதய நோய் வரக்கூட காரணமாகலாம். நுண்ணிய பாக்டீரியாக்கள் பல்லின் இடையில் தங்கும் சர்க்கரை, உணவு துகளில் இருந்து பெருகி, இரத்தம் மூலம் இதயத்தை அடந்து அங்கே நோய் உண்டாக்கும். இதுபோல ஈறுகளில் ஏதேனும் பாக்டீரியாக்கள் இருந்து ஜிஞ்ஜிவைடிஸ் என்ற நோய் வந்தால், அது சைனஸ் குழாய் வழியே மூளையில் உள்ள கேவர்னஸ் சைனஸை தாக்கி மூளை காய்ச்சலை வரவழைக்க கூடும். முகம் வீங்கி, மருத்துவமனைக்கு வருவோர் உண்டு.

இலட்சணக்கான மக்கள் பல்வலியால் (சாதாரணது முதல் ஈறுகளில் புற்றுநோய்வரை) துன்பப்படுவதை கண்டால் வருத்தமாக இருக்கிறது. மனிதனுக்கு வரும் உபாதைகளில் பல்வலிதான் முற்றிலும் தவிர்க்க கூடியது.

20% சதவிதம் 2-4 வயதுக்குள்ளான குழந்தைகள் பல்லில் ஓட்டைவந்து அவதிப்படுகின்றனர். இதற்கு அவர்களுக்கு தரப்படும் மிட்டாய்களில் உள்ள சர்க்கரையே காரணம் ஆகும். 60% 15 வயதுக்குள் உள்ள குழந்தைகள் பல்வலியால் மிகவும் துன்பப்படுகிறார்கள். இதில் ஏழை வீட்டில் உள்ள குழந்தைகள் இந்த ஓட்டைகள் சீர் செய்யப்படாமல் மேலும் துன்பத்திற்கு உள்ளாகிறார்கள். அமெரிக்காவில் பெரும்பாலான மக்கள் பல் மருத்துவ காப்பீடு பெறுவதில்லை. இந்த வலியால் பள்ளிக்கு சரியாக செல்ல முடியாத நிலை, முகத்தின் அழகான தோற்றம் குறைவு, சொல்லின் பேச்சின் சீரான தன்மை குறைவு, வாயில் வீசும் துர்நாற்றம் இவை ஒரு குழந்தையின் தன்னம்பிக்கையை குறைக்க வல்லன.

அமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்டோர் 95% பேர் பல்வலியால் துன்பப்படுகின்றனர். இதில் பலர் பற்களை இழந்து பொய்பற்கள் கொண்டு இன்னும் திண்டாடுகின்றனர். இன்னும் பலர் ஈறுகளில் வரும் உபாதை இன்ன பிறவற்றால் துன்பப்படுகின்றனர். பற்களை இழப்பது ஒரு அழகுணர்ச்சி பிரச்சினை மட்டும் இல்லை. சரியாக உச்சரிக்க இயலாமை, சில வகை உணவுகளை கடித்து உண்ண முடியாமை போன்று பொதுவான உடல் நலத்திற்கு கூட பாதிப்பு வரக்கூடும்.

இதையும் தவிர்த்து வாய், தொண்டை இவற்றில் வரும் புற்றுநோயால் வருடத்திற்கு 28,000 பேர் துன்பப்படுகின்றனர். இதில் வருடாவருடம் 7200 பேர் இறக்கின்றனர். வாயில் வரும் புற்றுநோய் இந்தியர்களை பெருமளவில் பாதிக்கிறது. பாக்கு வெற்றிலை அதிகம் உண்பதால், அதன் சாற்றை துப்பாமல் சிலர் உட்கொள்வதால், அதிக நேரம் பான் பராக், பாக்கு போன்றவற்றை வாயில் அதக்கி கொள்வதால் இந்த புற்று நோய் ஏற்படுவதாக அண்மையில் நியுஜெர்ஸியில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் சில அறிவியலாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.மேலும் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், அதிக மது (ஒரு நாளைக்கு 4, 12 அவுன்ஸ் பியருக்கு மேல்)அருந்துபவர்களுக்கு புற்றுநோய் வர வாய்ப்பு உண்டு.

அமெரிக்காவில் கடந்த வருடம் கிட்டதட்ட 78 பில்லியன் டாலர்கள் வரை பல் மருத்துவர்களுக்கு செலவு செய்துள்ளனர், 500 மிலியன் தடவை பல்மருத்துவர்களை மக்கள் சந்தித்திருக்கின்றனர். ஆயினும் பெருவாரியான மக்கள் பற்களை சுத்தம் செய்து கொள்ள செல்வதில்லை. பல் துலக்கும் போதும் பற்களின் இடையே சிக்கி யுள்ள உணவு துகள்களை (floss) சரிவர அகற்றுவதில்லை.

அமெரிக்காவில் கிட்டதட்ட 100 மிலியன் மக்களுக்கு சரியான ப்ளுரைடு உள்ள தண்ணீர் கிடடப்பதில்லை(www.cdc.gov).

இதை தவிர்க்க என்ன செய்யலாம்? பாஸ்பாரிக் அமிலம் உள்ள கோக் போன்ற பானங்களை குழந்தைகளுக்கு தராமல் இருக்கலாம். மேலும் பழஜூஸ் குடித்தாலோ சாக்லேட் போன்றவை தின்றாலோ உடனே பற்களை சுத்தம் செய்வது, அல்லது நீர் விட்டு கொப்பளிப்பது போன்றவற்றை செய்ய பழக்கலாம்.

ஒரு நாளைக்கு இரண்டு வேளை பற்களை சுத்தம் செய்ய பழக்கலாம். செயற்கை பற்களை வெண்மையாக்கும் பெயிண்ட், gum போன்றவற்றை சுவைப்பதை நிறுத்தலாம். இது பற்களின் எனாமலுக்கு ஆபத்தானது.

அமெரிக்காவில் மாநில மத்திய அரசு நிறுவங்களுடன் சேர்ந்து ப்ளூரைடின் அளவை சரிபார்த்து தண்ணீர் வழங்கவும், இதற்காக ஒரு இணையதளம் நிறுவி, மாநிலை அரசு தண்ணீரில் உள்ள ப்ளூரைடின் அளாவை சரிபார்ப்பதை கட்டாயப்படுத்தியும் இருக்கிறார்கள்.

மாநில தண்னீர் தன்மையை சரிபார்க்கும் பொறியியல் வல்லுனர்கள், அதிகாரிகளுக்கு ப்ளூரைடின் தன்மை பரிசோதிக்க பயிற்சி தருகிறார்கள்.

நியுஜெர்ஸி 2010 திட்டப்படி ஒரு sealant பற்களில் போட்டு குழந்தைகளின் பற்களை பேண அரசு திட்டம் தீட்டி உள்ளது. எல்லா குழந்தைகளுக்கும் இந்த sealant போடப்படும். இது சர்க்கரை மூலம் எனாமல் கரைவதையும், பாக்டீரியா சேர்வதை தவிர்க்கவும் பயன் படும்.

மேலும் மாநில அரசு இதற்காக மான்யம் ஒதுக்கி மக்களுக்கு பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க மக்களுக்கு எடுத்து சொல்ல பல உடல்நல துறை வல்லுனர்களை பயன் படுத்துகிறது.

காப்பீடுகள் வருடம் இரண்டு முறை இலவசமாக பற்களை சுத்தம் செய்து கொள்வதை தூண்டுகிறது. அதற்காக 100% செலவையும் திருப்பி தருகிறது.
பள்ளிகளில் உள்ள செவிலிகள் இதற்காக வருடம் இரண்டு முறை பற்களின் ஆரோக்கியம் பற்றி சொல்லித்தருவதோடு, பற்களை பரிசோதிக்கவும் செய்கிறார்கள்.
ரட்கர்ஸ் பல்கலை கழகம், மாநில அரசுடன் சேர்ந்து பற்களின் ஆரோக்கியம், மற்றும் பால் அருந்துவது, பற்களை துலக்குவது, கால்சியம் சேர்த்து கொள்வதன் அவசியம் பற்றி பள்ளிகளில் பாடம் எடுக்கிறார்கள்.

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions