»
S
I
D
E
B
A
R
«
பார்க்கத்தான் அழகு பனிமழை
Mar 2nd, 2009 by பத்மா அர்விந்த்

பனி அழகுதான் வீட்டின் உள்ளே இருந்துகொண்டு சன்னல் அருகேயிருந்து பார்த்து இரசிக்கும் போது, அந்த பனி நீர் அப்படியே இலையில்லா மரக்கிளைகளில் உறைந்து ஊசலாடும் போது பார்க்க அழகுதான். ஆனால் பனி படர்ந்த சாலையில் வாகனங்கள் செலுத்தும் போது சக்கரங்கள் அதில மாட்டி சுற்றுகிற போது, இல்லை உருகிய பனி இரவு உறைந்து அது தெரியாமல் நடக்க வழுக்கி விழும்போது ஃபிளோரிடா பக்கம் போய்விடலாமா என்றே தோன்றும்.

முதல் பனி வருடா வருடம் ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதும் அதே தொடர்கதையாகி போகும் போது எப்போது வசந்தம் வரும் என்று ஏங்குவதும் என் வாழ்க்கையில் ஒரு அங்கம். அதுவும் போன வாரம் ட்ரெண்டனில் குழுக்கூட்டத்திற்காக செல்லும் போது சூரிய ஒளியில் பனி பிரகாசிக்க முன்னால் சென்று கொண்டிருந்த ட்ரக்கின் நீட்ட வாகனங்களை எடுத்துசெல்ல நீண்டிருந்த ட்ராலியில் தெரியாமல் என் வாகனத்தை ஏற்ற இருந்ததில் இருந்து அந்த ஆசை இன்னும் அதிகமாகவே போய்விட்டது.

முழங்கால் வரை பனி பூட்ஸ், அலுவலகம் சென்ற பின் மாற்றி அணிய ஃபார்மல் ஷீ என்றெல்லாம் இன்னும் எனக்கு பழக்கம் இல்லை. எதற்கு வேண்டுமானாலும் போட்டுக்கொள்ள ஒரு கறுப்பு ஷூதான் அதுவே எல்லா ஆடைக்கும். மாலைவேளையில் கடைகள் நூலகங்கள் போனால் ஒரு ஸ்னீக்கர் என்றே பழகிப்போய், ஐசும் பனியுமா, எல்லாமுமாக இருக்கும் சாலையில் நடக்க விழாமல் செல்ல என்று இருக்கும் கவலைகளில், எலும்பே உறையும் வண்ணம் காற்று அடிக்க ஆரம்பித்தால் என்ன செய்ய?

வெப்பமான நாட்டில் வளர்ந்து பழக்கத்தால்,என்னதான் அடுக்கடுக்காக ஆடை அணிந்து கொள் என்று சொன்னாலும் அதெல்லாம் சரிப்படுவதில்லை. அதிலும் thermalwear எல்லாம் எனக்கு ஒத்துக்கொள்வதும் இல்லை. இதே தப்பான பழக்கம்தான் பிள்ளைக்கும். எப்போது வெப்பநிலைக்கு போனாலும் ஐயா கடவுளே எனக்கு இருப்பது tropical genes என்பதேன் உனக்கு புரியவில்லை என்று கவலைப்படும் பிள்ளையின் ஆர்த்ரைடிஸ் இன்னும் மோசமாய் தாக்க எப்போது வரும் வசந்தம் என்றே காத்திருக்கிறோம்.

சென்ற வாரம் இரவில் நீர் உறைந்து போய் இருக்க, தட்ப வெப்ப நிலை இணயத்தளத்தில் 40க்கும் மேலே என்று போட்டதை நம்பி எதையோ யோசித்துக்கொண்டு விரைவாக நடந்து மெயில் வைக்க சென்றால் இன்னும் விரைவாகவே போகலாம் என்று என் கால்கள் நினைத்து சறுக்கியதில் அடி. அந்த அடி ஆறும் முன்னே இன்று ஒரு அடிக்கு பனிமழை. ஆறு வருடங்கள் முன், காரின் மேலுள்ள பனியை நீக்கி சற்றே என்ஜினை ஆரம்பித்து கணவன் வைக்க சொகுசாக அலுவலகம் சென்று வந்தேன்.

இப்போது கராஜில் இருந்தே காரை எடுத்து செல்லும் வசதி, ஆனாலும் 6 கார் நிறுத்தலாம் போல பெரிய டிரைவ் வே என்று பார்த்து வாங்கியபோது புத்தியில் அதில் பனி விழுமே அதை நீக்க வேண்டுமே என்றெல்லாம் தோன்றவே இல்லை.
எப்போதும் நான் போகும் வரிசை நீங்கலாக மற்ற வரிசையில் வாகனங்கள் விரைவாக செல்வது போல, நாங்கள் வாங்கும் வீட்டுக்கு எதிர்வரிசை வீடுகள் டிரைவ்வே சூரிய ஒளியில் பனி ஐஸ் எல்லாம் உருகி அற்புதமாக இருக்க எங்கள் வீட்டில் மட்டும் ஒரு வாரம் தாண்டியும் இன்னும் பழைய ஐஸ் உருகுவேனா என்று அடம். அடுத்த முறை வீடு வாங்கும் போது அது கிழக்கு பார்த்தே இருக்க வேண்டும் என்று வழக்கம் போலவே உறுதி மொழியும் எடுத்தாகிவிட்டது.

சொகுசாக தலைவரும் பிள்ளையும் சுத்தம் செய்ய அனுபவித்த சுகத்திற்கு பரிகாரமாக, இப்போது எல்லாம் நானும் பிள்ளையுமாக பனிநீக்கம் செய்துகொண்டிருக்கிறோம்.ஷவலின் எடையை தூக்கவா, இல்லை கம்பளி ஆடைகளின் எடையை சுமக்கவா என்று யோசித்து ஒரே ஒரு குளிர்கால ஜாக்கெட்டுடன் சென்று குளிர குளிர பனிநீக்கம் செய்ய நிச்சயமாக முற்பிறவி ஒன்றில் தன்ணீரை வீணடித்திருக்க வேண்டும். செங்காந்தள் அன்ன விரல்களை சூடேற்றி இயற்கையாக மாற்றை ஒரு கோப்பை சூடான் தேநீர் பருகியை கையோடு இனியொரு பனிமழை வேண்டாம் இந்த வருடத்திற்கு என்று வேண்டிகொள்ளும் போதே நம் ஊரில் பாஸ்ட்டனைவிட குறைவுதான் நல்லவேளை நாம் நியுஜெர்ஸியில் இருக்கிறோம் என்று ஒரு குட்டி சந்தோஷம்.

இருப்பும் இல்லாமையும்
Nov 13th, 2008 by பத்மா அர்விந்த்

திருமணம் முடிந்து இன்றோடு பதினேழு வருடங்கள் கடந்துவிட்டது என்பதுகூட வருடக்கணக்கை கொண்டு மட்டுமே அறியமுடிகிறது. நம் கனவுகளின் நிறங்கள் கூட ஒன்றாக மாறி இருக்கிறது இந்த நீண்ட காலத்தில். சுவாசிக்கும் காற்றைப்போல எனக்கு நீ.
மூச்சுவிடுவதை உணர்கிறபோதே உடல்நலம் பாதிக்கப்பட்டது என்பது புரிவது போல, நீ இருக்கும் உணர்வு எனக்கு புரிகிறபோதே அதை இழந்துவிடுவேனோ என்ற ஒரு கவலை அடிக்கோடாக இருப்பது புரிகிறது. இத்தனை நாள் அதை நான் உணர்ந்ததே இல்லை. எப்போது வருவாய் எனக்குறித்து கவலை ஏதும் கொண்டதில்லை, ஆனால் நீ வந்துவிடுவாய் என்ற ஒரு உன்னதமான ஒரு தைரியம் இருந்தது.

வீடு வாங்குவதோ விடுமுறைக்கு போவதோ, வாகனம் வாங்குவதோ என் முடிவில் எனக்கிருந்த நம்பிக்கையைவிட உனக்கு இருந்தது அதிகம்.

இப்போதும் மருத்துவர்களை சந்திப்பது முதல், சிகிச்சை முறைகளை பரீசீலிப்பதுவரை நானே தீர்மானிக்கிறேன். என் மீது நானே நம்பிக்கை இழக்காமல் இருக்கவாவது எனக்கொரு துணைவனாக நீ இருக்க வேண்டும் இன்னும் ஒரு யுகம். சுகமான இந்த பயணத்தில் துணையாக தொடர்வதற்கு என் வந்தனங்கள். குணமாகி வா, வராவிட்டாலும் கூட பாதகம் இல்லை, உன் நினைவுகளே கூட போதுமெனக்கு, ஆனால் ஒருக்காலும் உடல்சக்தியும் உன் கம்பீரமும் இழந்து வாழும் வாழ்வுனக்கு வேண்டாம், அது எனக்கு மிகவும் துன்பத்தை தரும்.

திரைப்படங்கள் என் பார்வையில்
Oct 14th, 2008 by பத்மா அர்விந்த்

அதிகம் திரைப்படங்கள் பார்க்காத ஒருவரிடம் இருந்து என்ன சுவாரசியமான எண்ணங்கள் வரும் என்று தோன்றாதபொதும், பாலாவின் விருப்பத்திற்காக இந்த பதிவு. பொதுவாகவே எந்த திரைப்படம் பார்த்தாலும் அது எத்தனை சுவாரசியமானதாக இருந்தாலும், இரவு 8 மணிக்கு மேல் 9 வரை மட்டுமே பார்ப்போம். 9 மணி ஆனால் டிவிடியை நிறுத்திவிடுவோம். ஆக்ககூடி ஒரு படம் பார்த்து முடிக்க 4 நாட்கள் ஆகும். சில சமயம் வார நாட்களில் பார்க்க முடியாமல் போய், ஆரம்ப கதை மறந்து போனதால், பாதிக்கு மேல பார்க்காமலே, வேறு படத்திற்கு மாறுவதும் உண்டு. Free willy, disney படங்கள் பின் sandlot , coach carter போன்ற விளையாட்டோடு சம்பந்தம் உள்ள படங்கள் என்று எங்கள் படங்கள் பார்க்கும் அனுபவமும் என் மகனோட விருப்பமாகி போனது.

சமீபகாலங்களில் இது முற்றிலும் மாறி நகைச்சுவை படங்கள் என்று காதலிக்க நேரமில்லை, படோசன், சந்திரபாபு நாகேஷ் நகைச்சுவை தொகுப்புகள் வரிசையில் சற்றே விலகி பார்த்த படங்கள் ஆனந்தும் Bucket List உம்.

- அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
நாங்கள் சிறுவர்களாக இருந்த போது 4 ஆம் வகுப்பிற்கு பிறகு ஒவ்வொரு ஆண்டு இறுதித்தேர்வு முடிந்தபின், அப்பா எங்கள் அனைவரையும் திரைப்படம் ஒண்றிற்கு அழைத்துப் போவார். அது பெரும்பாலும் ஆதிபராசக்தி, வா ராஜா வா போன்ற படங்களாகத்தான் இருக்கும்..

ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?
ஞான ஒளி. பக்கத்துவீட்டில் வசிப்பவர்கள் வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து சீர்காழிக்கு சென்று படம் பார்க்க திட்டமிட்ட போது, என்னையும் அழைத்துச் செல்ல அப்பாவிடம் அனுமதி பெற்றிருந்தார்கள். என்ன காரணத்தோலோ எங்களுக்கு டிக்கெட் கிடைக்காமல் இறுதி காட்சி பார்க்க நேரிட்டது. கடைசி பேருந்தும் கிடைக்காமல் வீட்டிற்கு நடந்துவர, காலெல்லாம் வலி, பாதித்தூக்கம், அப்பாவின் கோபம் எதிர்பார்த்து பயம் கலந்த கலவையாய் வீட்டிற்கு வந்தேன். அடுத்த ஒருவாரம் எனக்கு மட்டும் இல்லாமல் பக்கத்துவீட்டு அக்காவிற்கும் நல்ல சஹஸ்ரநாமம். பெண்களாக தனியே நடந்து வருவது எத்தனை ஆபத்தானது என்பதே அப்பாவின் கோபத்திற்கு அடிப்படை காரணமாக இருந்தது.

என்ன உணர்ந்தீர்கள்?
படத்தை யார் பார்த்தார்கள்? பயம் மட்டுமே இருக்க பாதியில் தூங்கிவிட்டேன். மிக சத்தமான பாட்டு (தேவனே என்னை பாருங்கள்) மட்டும் நினைவில் இருக்கிறது. நடைமுறை பழக்கத்துக்கும் படத்துக்குமான முரண் மனதில் பட்டது அப்போதுதான்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
தமிழ்: தளபதி திருமணத்திற்காக இந்தியா போனபோது பார்த்தது.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
சென்ற வாரம் வீட்டில் இருந்த இறுக்கமான சூழலை குறைக்க பார்த்த படம் பலே பாண்டியா. முதலில் கவனம் குறைவாக பார்த்த போதும், போக போக மனதை இலேசாக்கிய அதிக தூக்கல் இல்லாத காமெடி.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
நூல்வேலி, தண்ணீர் தண்ணீர்ம் வீடு போன்ற படங்கள் சிந்திக்கவும் சகோதரர்களுடன் நிறைய கடித பரிமாற்றலுக்கும் காரணமாக இருந்திருக்கின்றன.
சட்டப்படி குற்றமான ஒரு செயல், (18 வயதிற்குள்ளான பெண் அல்லது ஆண் விருப்பப்பட்டாலும் புணர்வென்பது இங்கே குற்றம்) திரைப்படம் முழுதும் அவரவர் நியாயமாக பேசப்பட்ட திரைப்படம், அப்போது நிறையவே யோசிக்க வைத்தது. எப்படி பல குடும்பங்களில் இது போன்ற பாலியல் பலாத்காரங்கள் வெளிவராமல் போகின்றன எனவும் சிந்திக்க வைத்தது.
அடிப்படைத்தேவையான தண்ணீருக்கு கூட கஷ்டப்படும் நிலைஇல் உள்ள மக்களைப்பற்றிய நினைவு இன்றும் நான் தண்ணீரை வீணாக்கும் போது தோன்றி என்னை திருத்தக்கூடிய வண்ணம் மிகவும் பாதித்த ஒரு திரைப்படம் தண்ணீர் தண்ணீர்.

மத்தியதர மக்களுக்கு எட்டாக்கனியாக உள்ள வீடொன்றை கட்டும் போது படும் சிரமங்கள், இயல்பான நடிப்பு போன்றவை திரைப்படம் என்பதை மறந்து இயல்பான நடைமுறைக்கு இட்டு சென்ற திரைப்படம் வீடு.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா – அரசியல் சம்பவம்?
நேற்று இன்று நாளை திரைப்படம் வெளியான அன்று கும்பகோணத்தில் நடந்த வன்முறை, அதன் தொடர்பாக பள்ளி, கல்லூரிகள் நாட்கணக்கில் மூடப்பட்ட சம்பவம் இன்னமும் நினைவில் இருக்கிறது.இப்போதும் சினிமாவும் அரசியலும் அவ்வப்போது கலகலப்பூட்டினாலும், அது போன்ற வன்முறை சம்பவங்கள் குறைவு.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா – தொழில்நுட்ப சம்பவம்?
மூடுபனி திரைப்படத்தில் அறையாக தேடும் காட்சி பிடித்திருந்தது. மற்ற எதுவும் நினைவில் இல்லை.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
பதிவுகளில் அவ்வப்போது—

7. தமிழ்ச்சினிமா இசை?
எந்த மொழியானாலும் இசை எனக்கு பிடித்திருக்க அதன் எளிமையான கவிநயம் உள்ள பாடல் வேண்டும்.மென்மையான இசை பாடலை ஆக்கிரமிக்காத அல்லது மூழ்கடிக்காத மென்மையான் இசை வேண்டும். அந்த வகையில் எனக்கு இன்னமும் பிடித்தவை பழைய பாடல்கள்தான். பரவலாக இசை அனுபவத்தை கொண்டு சேர்த்ததில் சினிமா இசைக்கு முக்கியத்துவம் உண்டு. ஹிந்திப்பாடல்களிலுமெனக்கு அதிகம் விருப்பமானவை பழைய திரை இசை பாடல்களே.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
கணவருடன் சேர்ந்து பார்க்கும் படங்களில் ஹிந்தி அதிகம். பிள்ளைக்கும் ஷாருக்கான் படங்களில் பிடித்தம் உண்டு. ஆங்கில படங்களில் குழந்தைகளுக்கான எல்லா படங்களும் பார்ப்பதோடு வாங்கிச்சேகரிப்பதும் உண்டு.
ஆங்கில படங்களில் அதிகம் பாதித்தவை: The Untouchables, Scent of a woman
ஹிந்தியில் ஆனந்த், ஷோலே, நயாடார், அமர்பிரேம். அடிக்கடி பார்க்கும் படம் படோசன்.
மலையாளத்தில் ஓளங்கள். எப்போதாகிலும் சில சீன, ஸ்பனிஷ் மொழிப்படங்கள் பார்ப்பதுண்டு.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
இல்லை. விருப்பமும் இல்லை. கலைத்துறையில் பணியாற்ற பொறுமை, ஆர்வம் தேவை. என்னிடம் அது மிகக் குறைவு

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
முன்பெல்லாம் திரைப்படம் பார்ப்பதென்பது ஒரு அனுபவம். குடும்பத்தோடு சென்று பார்ப்பது ஒரு பொழுது போக்கு வழி. இப்போது பெருகி வரும் இணைய வழி இலவச படங்களும் இன்னபிறவும் வந்தாலும், அது மத்தியதர மக்களிடம் மட்டுமே பரவலாக இருக்கும். கணிணி இன்னபிற வகைகளில் மிக அதிகமாக திரைப்படங்கள் பார்த்தாலும் எதிர்பார்த்து காத்திருந்து பார்க்கிற அந்த அனுபவம் குறைவாகவே இருக்கும். மேல்தர மத்தியதர மக்களும் பணக்காரர்களும் வீட்டிலேயே திரை அரங்கினை அமைக்க கூட முடியும். ஆனாலும் இவை எல்லாம் கைகூடாத தொழிலாளர்கள், கூலி வேலை செய்பவர்கள், இரசிகர்கள், போன்றோருக்கு திரை அரங்குகளில் சென்று திரைப்படம் பார்ப்பது தொடர்ந்தே இருக்கும். முன்பைவிட இப்போதெல்லாம் திரைப்படங்கள் தயாரிக்க ஆகும் செல்வை ஈடு செய்ய டிக்கெட் விலை இன்னும் அதிகமாக ஏற்றப்படும். நாயகர்களின் ஊதியம் செலவில் பெரும்பகுதி இருக்கும் நிலை மாறலாம்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த பாதிப்பும் இருக்காது. மற்றவர்களும் வேறு பல கலைகள், நாடகம் போன்ற துறைகளில் கவனம் செலுத்துவார்கள். நசித்துப் போன கிராமிய கலைகளும் இன்னமும் அதிக கவனம் பெறலாம். ஒரு பொழுது போக்கு இல்லை என்றால், மன அழுத்தத்தை போக்கிக்கொள்ளவும் கனவுலகில் சஞ்சரிக்கவும் வேறு பொழுதுபோக்குகளை தேடவோ உண்டாக்கிக் கொள்ளவோ முடியும். திரைத்துறை தொடர்பு கொண்ட நிறைய தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இன்னும் இது குறித்து எழுதாதவர்கள் தொடர்ந்து எழுதலாம்.

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions