»
S
I
D
E
B
A
R
«
பார்க்கத்தான் அழகு பனிமழை
March 2nd, 2009 by பத்மா அர்விந்த்

பனி அழகுதான் வீட்டின் உள்ளே இருந்துகொண்டு சன்னல் அருகேயிருந்து பார்த்து இரசிக்கும் போது, அந்த பனி நீர் அப்படியே இலையில்லா மரக்கிளைகளில் உறைந்து ஊசலாடும் போது பார்க்க அழகுதான். ஆனால் பனி படர்ந்த சாலையில் வாகனங்கள் செலுத்தும் போது சக்கரங்கள் அதில மாட்டி சுற்றுகிற போது, இல்லை உருகிய பனி இரவு உறைந்து அது தெரியாமல் நடக்க வழுக்கி விழும்போது ஃபிளோரிடா பக்கம் போய்விடலாமா என்றே தோன்றும்.

முதல் பனி வருடா வருடம் ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதும் அதே தொடர்கதையாகி போகும் போது எப்போது வசந்தம் வரும் என்று ஏங்குவதும் என் வாழ்க்கையில் ஒரு அங்கம். அதுவும் போன வாரம் ட்ரெண்டனில் குழுக்கூட்டத்திற்காக செல்லும் போது சூரிய ஒளியில் பனி பிரகாசிக்க முன்னால் சென்று கொண்டிருந்த ட்ரக்கின் நீட்ட வாகனங்களை எடுத்துசெல்ல நீண்டிருந்த ட்ராலியில் தெரியாமல் என் வாகனத்தை ஏற்ற இருந்ததில் இருந்து அந்த ஆசை இன்னும் அதிகமாகவே போய்விட்டது.

முழங்கால் வரை பனி பூட்ஸ், அலுவலகம் சென்ற பின் மாற்றி அணிய ஃபார்மல் ஷீ என்றெல்லாம் இன்னும் எனக்கு பழக்கம் இல்லை. எதற்கு வேண்டுமானாலும் போட்டுக்கொள்ள ஒரு கறுப்பு ஷூதான் அதுவே எல்லா ஆடைக்கும். மாலைவேளையில் கடைகள் நூலகங்கள் போனால் ஒரு ஸ்னீக்கர் என்றே பழகிப்போய், ஐசும் பனியுமா, எல்லாமுமாக இருக்கும் சாலையில் நடக்க விழாமல் செல்ல என்று இருக்கும் கவலைகளில், எலும்பே உறையும் வண்ணம் காற்று அடிக்க ஆரம்பித்தால் என்ன செய்ய?

வெப்பமான நாட்டில் வளர்ந்து பழக்கத்தால்,என்னதான் அடுக்கடுக்காக ஆடை அணிந்து கொள் என்று சொன்னாலும் அதெல்லாம் சரிப்படுவதில்லை. அதிலும் thermalwear எல்லாம் எனக்கு ஒத்துக்கொள்வதும் இல்லை. இதே தப்பான பழக்கம்தான் பிள்ளைக்கும். எப்போது வெப்பநிலைக்கு போனாலும் ஐயா கடவுளே எனக்கு இருப்பது tropical genes என்பதேன் உனக்கு புரியவில்லை என்று கவலைப்படும் பிள்ளையின் ஆர்த்ரைடிஸ் இன்னும் மோசமாய் தாக்க எப்போது வரும் வசந்தம் என்றே காத்திருக்கிறோம்.

சென்ற வாரம் இரவில் நீர் உறைந்து போய் இருக்க, தட்ப வெப்ப நிலை இணயத்தளத்தில் 40க்கும் மேலே என்று போட்டதை நம்பி எதையோ யோசித்துக்கொண்டு விரைவாக நடந்து மெயில் வைக்க சென்றால் இன்னும் விரைவாகவே போகலாம் என்று என் கால்கள் நினைத்து சறுக்கியதில் அடி. அந்த அடி ஆறும் முன்னே இன்று ஒரு அடிக்கு பனிமழை. ஆறு வருடங்கள் முன், காரின் மேலுள்ள பனியை நீக்கி சற்றே என்ஜினை ஆரம்பித்து கணவன் வைக்க சொகுசாக அலுவலகம் சென்று வந்தேன்.

இப்போது கராஜில் இருந்தே காரை எடுத்து செல்லும் வசதி, ஆனாலும் 6 கார் நிறுத்தலாம் போல பெரிய டிரைவ் வே என்று பார்த்து வாங்கியபோது புத்தியில் அதில் பனி விழுமே அதை நீக்க வேண்டுமே என்றெல்லாம் தோன்றவே இல்லை.
எப்போதும் நான் போகும் வரிசை நீங்கலாக மற்ற வரிசையில் வாகனங்கள் விரைவாக செல்வது போல, நாங்கள் வாங்கும் வீட்டுக்கு எதிர்வரிசை வீடுகள் டிரைவ்வே சூரிய ஒளியில் பனி ஐஸ் எல்லாம் உருகி அற்புதமாக இருக்க எங்கள் வீட்டில் மட்டும் ஒரு வாரம் தாண்டியும் இன்னும் பழைய ஐஸ் உருகுவேனா என்று அடம். அடுத்த முறை வீடு வாங்கும் போது அது கிழக்கு பார்த்தே இருக்க வேண்டும் என்று வழக்கம் போலவே உறுதி மொழியும் எடுத்தாகிவிட்டது.

சொகுசாக தலைவரும் பிள்ளையும் சுத்தம் செய்ய அனுபவித்த சுகத்திற்கு பரிகாரமாக, இப்போது எல்லாம் நானும் பிள்ளையுமாக பனிநீக்கம் செய்துகொண்டிருக்கிறோம்.ஷவலின் எடையை தூக்கவா, இல்லை கம்பளி ஆடைகளின் எடையை சுமக்கவா என்று யோசித்து ஒரே ஒரு குளிர்கால ஜாக்கெட்டுடன் சென்று குளிர குளிர பனிநீக்கம் செய்ய நிச்சயமாக முற்பிறவி ஒன்றில் தன்ணீரை வீணடித்திருக்க வேண்டும். செங்காந்தள் அன்ன விரல்களை சூடேற்றி இயற்கையாக மாற்றை ஒரு கோப்பை சூடான் தேநீர் பருகியை கையோடு இனியொரு பனிமழை வேண்டாம் இந்த வருடத்திற்கு என்று வேண்டிகொள்ளும் போதே நம் ஊரில் பாஸ்ட்டனைவிட குறைவுதான் நல்லவேளை நாம் நியுஜெர்ஸியில் இருக்கிறோம் என்று ஒரு குட்டி சந்தோஷம்.


13 Responses  
  • ரேவதிநரசிம்ஹன் writes:
    March 2nd, 2009 at 8:47 pm

    நம் ஊரிலிருந்து பார்க்க அழகத்தானிருக்கு.
    எனக்கு அன்பவிக்கும்போது இனிப்பாக இல்ல்லை. நீங்கள் சொல்வது போலத்தான் என் பெண்ணும் சொல்லுவாள். அங்கே விண்ட்சில்லும் சேர்ந்து கொள்ளும்போது டிப்ரஷனே வந்துவிடும். அவள் சினேகிதி அந்த ஊரிலியேபிறந்து வளர்ந்தவள் விண்டர்ப்ளூஸ் என்று அதற்காகவே சைக்கியாட்ரிக் கவுன்சிலிங் எடுத்துக் கொள்ளுபவள்!!!

  • பத்மா அர்விந்த் writes:
    March 3rd, 2009 at 8:50 am

    நன்றி ரேவதி. குளிர்காலம் வசந்த காலம் போல அதிக சோஷியல் பழக்கம் இல்லாததால் பலருக்கு இப்பைட் ஒரு டிப்ரஷன் வரும். குளிர்காலத்தில் அலாஸ்காவில் இல்லாமல் இருப்பதே எனக்கு சந்தோஷம்.

  • இலவசக்கொத்தனார் writes:
    March 3rd, 2009 at 1:01 pm

    அக்கா, என்னதான் சங்கடங்கள் இருந்தாலும் இந்த மாதிரி வருஷத்திற்கு நான்கு காலங்கள் வருவது எனக்கு ரொம்பப் பிடிக்கும். எனக்கு பனிக்காலம் ரொம்பவே பிடித்த ஒன்று.

    போடா ஐஸ்லாந்தில் பிறந்தவனே என என்னை வீட்டிலும் அலுவலகத்திலும் திட்டுவது போல நீங்களும் திட்டலாம்! :)

  • பத்மா அர்விந்த் writes:
    March 3rd, 2009 at 1:11 pm

    கொத்ஸ் தம்பி, நாலு பருவம் மாறும் போது அழகாத்தான் இருக்கு. அதுக்கப்புறம் வீட்டு வாசல் சுத்தம் செய்யறதுக்குள் முதுகு வலியும் முழங்கால் வலியும் வரதுதான் பிடிக்கல.
    முந்தி மாதிரி இப்ப fall அவ்வளவு அழகா இல்லைன்னு தோணுது.

  • dyno writes:
    March 4th, 2009 at 8:58 am

    ஆகா என் மனதை படித்து எழுதியதைப்போல இருக்கு உங்க பதிவு. நாங்களும் ப்ளோரிடா (ஹரிக்கேன்), கலிபோர்னியா (எர்த் குவேக்), டெக்ஸாஸ்/அட்லாண்டா (பணியிடங்கள் குறைவு) என்று எல்லா ஆப்சன்களையும் ஆராய்ந்து, நிஜெவே கதி என்று இருந்துவிட்டோம்! ஆனாலும் குளிர்தாங்காமல் அரை டஜன் தெர்மல்களை வாங்கிவிட்டேன், கொஞ்சம் அசவுக்கியமாக இருந்தாலும் குளிருக்கு விறைப்பதற்கு இது மேல் என்று பழகுகிறோம்! நாங்க் கிழக்க பார்த்தவீடு வாங்கியும் இடையில் நந்தியாக ஒரு மரம், வெட்ட பாவமாய் இருக்கிறது!

    அடுத்த வருசம் கொஞ்சம் செலவு ஆனாலும் ஸ்னோ ப்ளோவர் ஒன்னு வாங்க திட்டம்!

    யோவ் கொத்ஸ் – உமக்கு என்னவோய், டவுன் ஹவுஸ் மெயிடெனன்ஸ் குறைந்த செலவுல பனி விலக்கிடுவாங்க, நோகாம காரை எடுத்துட்டு போய்கினே இருப்பீர், எங்க வீட்டாண்ட வாருமைய்யா ஒருநாள் டிரைவ்வே கிளீன் பண்ணிப்பாரும், அப்புறம் தெரியும் வைரமுத்து ரேஞ்சு கவித படிப்பீஹலான்னு! :) )

    d

  • பத்மா அர்விந்த் writes:
    March 4th, 2009 at 9:10 am

    ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லைன்னு சொன்னவரை கூட்டு மரத்தை காட்டுங்க :) ) ஸ்னோ ப்ளோவர் என்கிட்ட இருக்கு. பிரயோசனம் இல்லை. 2 இன்ச் மேல ஸ்னோ போனா உள்ள சிக்கிக்குது. அஞ்சு நிமிஷத்துக்கொரு முறை கழட்டி கையால எடுத்துப்பொட்டு திரும்பி மாட்டி, அதுக்கு இதுவே பெட்டர்னு இப்ப பயன்படுத்தறதில்லை. என்னோடது எலெக்ட்ரிக். Gas ப்ளோவர் பரவாயில்லைன்னு சொன்னாங்க. நேத்தி seience channelல அதுலயும் நிறைய பணி இருந்தா சிக்கிக்கும் உடைச்சே காமிச்சு விளக்கினாங்க. http://www.sciencechannel.com தேடினா வீடியோ கிடைக்கும்.

  • dyno writes:
    March 4th, 2009 at 9:22 am

    அடப்பாவமே, அப்ப ப்ளோவர் இருந்தாலும் முடியாதா? விவசாயி ரேஞ்சுல எஸ்கிமோ டிரெஸ்ல டிரைவ்வே உழவேண்டியதுதான் :) )

  • Manikandan writes:
    March 4th, 2009 at 9:41 am

    கார்ல போனா தான இவ்வளவு ப்ராப்ளம். ஜாலியா நடந்து போங்க. இல்லாட்டி ஸ்கேட் பண்ணிக்கிட்டே போங்களேன் !!

  • aruna writes:
    March 4th, 2009 at 10:58 am

    அழகுப் பனியில் இப்படி ஒரு பிரச்னை இருக்கா???
    அன்புடன் அருணா

  • கெக்கெ பிக்குணி writes:
    March 4th, 2009 at 11:36 am

    ஸ்னோ வேண்டாஆஆஆஆஆஆம்னு ஓடினாலும், துரத்தித் துரத்தில்ல அடிக்குது!!!

    ஸ்னோ ப்ளோயருக்கு ஒரு நல்ல பயன் உண்டுன்னு ஒரு ”சிகப்பு-கழுத்தர்” சொல்லிக் கொடுத்தார்: அசால்டா, வேண்டாதவங்க வண்டி ரோட்டில போவும் போது அவங்க வண்டி மேல விழற மாதிரி ப்ளோயரைத் திருப்பிடணும். ஹிஹி.

    பக்கத்தாண்டை இருக்கிற (டீனேஜ்) பசங்க கூலிக்கு செய்யறேன்னு வந்து சரியா கவனிக்கலன்னா ஒரு ஓரமா செஞ்சிட்டு போய்கினே இருப்பாங்க.. அதையும் பாக்கணும். செம கடி.

    (கொத்ஸை நோக்கி நறநற…..)

  • பத்மா அர்விந்த் writes:
    March 4th, 2009 at 11:46 am

    டைனோ, இல்லாட்டி இரண்டு இன்சுக்கு ஒருமுறை போய் கிளீன் பண்னலாம். வாங்கறாதா இருந்தா எல்க்ட்ரிக் வாங்காதீங்க. நல்ல ஒர்க் அவுட்
    மனிகண்டன்
    முதல்தடவையா வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன். நடந்தே போகலாமே, கொஞ்சம் நடைபாதை சீரமைச்சு, உடம்பும் இளைக்கும், நல்லதும் கூட:)
    அருணா, இன்னும் நிறையவே இருக்கு, ஸ்கூல் விடுமுறை, சின்னவங்களா இருந்தா யார் பாத்துக்கறதுன்னு ஆயிரம் பிரச்சினை. இன்னிக்கு சாலை பக்கம் குவிஞ்சு இருக்கிற பனியில் சூரியன் பட்டு பிரகாசிக்கிரது இன்னும் அழகு

  • முத்துக்குமார் writes:
    March 4th, 2009 at 12:33 pm

    எனக்கு எங்க சொந்த ஊரு (ஆஸ்டின்)-க்கே ஓடிடலாமா-ன்னு தோணுது. இங்கே (கனெக்டிகட்) என்னோட வேல பாத்த நண்பர் ஒருத்தர் விட்டுட்டு டல்லஸ்-க்கு ஓடிட்டாரு. அங்க இருந்தபடி கிழக்கும் மேற்கும் பறந்து பறந்து Consulting பண்ண வசதியா இருக்குமாம். ஹ்ம்ம்ம்ம் …

    Don’t mess with Texan-னு பந்தா பண்ணலாம். ஆனா வெய்யில்காலத்துல 100-க்கு மேலயாச்சே !

    வறுபடறதா உறைபடறதா-ங்கிறது மிகப்பெரிய எக்ஸிஸ்டன்ஷியலிஸக் கேள்வி.

    Comfort comes with it’s own costs-னு சும்மாவா சொன்னாங்க ? (யாரா ? ஹி..ஹி)

  • பத்மா அர்விந்த் writes:
    March 4th, 2009 at 6:19 pm

    முத்துக்குமார், டெக்ஸாஸ் பக்கம் போனா காட்ரீனாவும் ரீட்டாவும் பயமுறுத்துதே. நான் 1989 அங்க இருந்த போ, ஜெயில்ல இடம் இல்லைன்னு ஒரு ப்ரேஸ்லெட்டோட எல்லாரையும் வேற வெளிய விட்டாங்க.
    வறுபடறது பரவாயில்லை, தண்ணீர் குடிச்சு சமாளிக்கலாம். டல்லசில இருக்க இப்படி ஒரு காரணமா:)) ஏர்லைன் கம்பெனியெல்லாம் உங்க நண்பரால் கொஞ்சம் பிழைச்சு போகட்டும்:))

    கெகேபிகே: என்னப்பா ஒரு சமயம் வேகமா போய் அடுத்த டிரைவர கட் செஞ்சு பயமுறுத்துறீங்க, இப்ப பனியை போடலாம்னு, நல்லவேளை நான் இருக்கிறது வேற ஊரில.


Leave a Reply

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions