»
S
I
D
E
B
A
R
«
உயிர்த்தியாகம்
February 6th, 2009 by பத்மா அர்விந்த்

கிட்ட வராத, சுட்டுக்க போற என்று சின்ன வயதில் அம்மா துரத்தியது உண்டு. தீபாவளி வந்த எல்லா சமயங்களிலும் மறக்காமல் அம்மா சொல்வார்கள். ஜாக்கிரதை, பாவாடையில் மத்தாப்பு பட்டுடாம கவனமா இரு. எண்ணெயில் எதையாவது பொரிக்கும் போது, கார்த்திகைக்கு விளக்கேற்றும் போது எப்போதுமே அம்மாவின் கூடுதல் எச்சரிக்கை என் நினைவுக்கு வரும்.

இன்று நான் சப்பாத்தி செய்யும் போது அதை நேரடியாக நெருப்பில் போட்டெடுக்க பிள்ளை உதவினால் அதே அறிவுறைகள்.

use a tong, be careful, if you are going to play with fire, go to your room, I dont need your help, dont turn on the oven unless I am home என்று ஆயிரக்கணக்கான அறிவுறைகள். எனக்கும் அம்மாவுக்கும் இடையே நட்ந்த அதே விவாதங்கள், வேறு மொழியில்.எப்போதாவது அவன் சீக்கிரம் வந்து நான் திரும்ப தாமதமானால் அதே பயம். நெருப்பை கண்டால் பயம் இல்லை, ஆனால் நெருப்பால் வரும் காயம் எரிச்சல் கண்டு பயம். என் கையில் இபோதும் தழும்புகள் தடவும் போது நினைவுக்கு வரும் நான் எப்போதோ ovenஇல் வைத்த ஆப்பிள் டர்னோவரை எடுக்கும் போது கையின் உறை தாண்டி பட்டுவிட்டதும், அடுத்த இரண்டு நாட்கள் தண்ணீர் படும் போதெல்லாம் எரிந்ததும் அதில் தடவிய களிம்புகளும்.பிள்ளைக்கு இன்னும் எரியுமே என்ற அக்கறை. இப்படித்தான் வளர்த்திருப்பார்கள் முத்துக்குமாரையும்.

அடுப்பில் இருந்து எதையாவது இறக்கும் போது பிடித்துணி இல்லாமல் இறக்குவார்கள். கை சுட்டுவிடும். நெருப்பை கையால் பற்றி அணைப்பதும் எரியும் சூடத்தை உள்ளங்கையில் தாங்குவது என அவர் கை எல்லாம் புண். ஏன் இப்படி செய்கிறீர்கள் என்றால், என் மகள் ஸ்டவ் வெடித்து இறந்த போது உடல் முழுதும் இப்பத்தானே எரிந்திருக்கும், எத்தனை கஷ்டப்பட்டாளோ என் பெண், தெரியாமல் கல்யாணம் செய்து வைத்துவிட்டேனே என்று பெண் தீ பற்றி எரிந்த பின், 30 வருடம் கழித்தும் இன்னும் கவலை படுகிறார்கள் அரவிந்தின் பெற்றோர். அவள் இருந்திருந்தால் இப்போது 48 வயதாகி இருக்கும் என்று யாருக்கேனும் பிறந்த நாள் வந்தால் சொல்லாமல் இருந்ததில்லை, எல்லோருமாக சேர்ந்திருக்கும் தருணங்கள் என்று பெண்ணின் நினைவில்லாத நாளே இல்லை. எந்த ஆசையும் இன்றி சோகத்தில் இன்னமும் நாளைக்கழிக்கிறார்கள். அவள் தீப்பற்றி எரிந்த அன்று யாருடனும் பேசுவதில்ல, அன்று முழுதும் உண்பதும் இல்லை. இப்படித்தான் பெற்றோர்கள் மனம் பாடுபடப்போகிறது என்று முத்துக்குமாரின் தந்தையை பற்றி படித்த போது தோன்றியது. அவர் தங்கையைன் நிலை அறியும் போது வருத்தமாக இருக்கிறது. முத்துகுமாரின் மன உறுதி பிரமிப்பை ஏற்படுத்துகிறது. ஆனாலும் அந்த தீக்குளித்தலில் எனக்கு உடன் பாடு இல்லை. அந்த அளவு தைரியத்தை மன உறுதியை கொண்ட இளைஞர்கள் இந்த சமூகத்திற்கு தேவை.

தியாகம் என்பதன் முழுப் பொருள் எனக்கு புரிந்ததில்லை. ஆசையை துரப்பது என்பது கடினமான செயல்.நாம் எல்லாரும் வாழ்நாளில் நமக்கு மிகவும் பிடித்த ஒன்றை மற்றவரின் மீதான அன்பு காரணமாக விட்டொழித்திருக்கிறோம், நம் விருப்பத்திற்கு அதிக பங்கம் வராததவரையில். ஒன்றை விட்டுவிட வேண்டும் என்று சொல்கிறபோது அதன் மீது மற்ற நாளில் இல்லாத அளவு அதன் மீது பிரியமும் பழைய நினைவுகளும் வந்து போகும். காசிக்கு போய் பற்று ஒன்றை விடவேண்டும் என்று நினைத்துக்கொண்டு நான் காசிக்கு போனதிலேருந்து கொய்யாப்பழததை விட்டேன் என்றோ அல்லது புடலைங்காயை விட்டேன் என்றோ சொல்பவர்களை பார்த்திருக்கிறேன். சிறைக்கு சென்ற போது கூட பற்றெல்லாம் விட்ட முனிவர் தன் தண்டத்தை கெட்டியாக பிடித்து உடன் எடுத்து சென்றதையும் படித்திருக்கிறேன். ஆக ஒன்றை தியாகம் செய்வது எமக்கெல்லாம் முடியாத ஒன்று. அது பதவியானாலும், பார்க்கிற வேலையானாலும். உயிரையே தியாகமாக்க வேண்டுமானால் கொள்கை மீது அல்லது மொழி இனம் என்ற எதுவானாலும் அதன் மீது தம் உயிரையும் விட அளவுக்கடங்காத தாகம் இருக்க வேண்டும்.

நம் சமூகத்தில் உயிர்த்தியாகம் மிகவும் போற்றப்படுகிறது. ஸ்கூட்டரில் சேலை சிக்கி மானம் போனதால் உயிர்துஆர்ந்தால் பத்தினி தெய்வமாகிறார். தந்தையை காப்பாற்ற முடியாமல் மரணிக்கும் பிள்ளைகள் பாசம் போற்றப்படுகிறது. ஏதேனும் அவமானம் வந்து இறந்து போனால் இவர் கவரிமான் சாதி என்று போற்றுகிறோம். நாலு பேரின் சொல்லுக்கு நம் உயிரையும் விட அதிக முக்கியத்துவம் தருகிறோம். இதைவிட கொடுமை இந்த தற்கொலையை ஒரு பயமூறுத்தும் ஆயுதமாக உறவுகளுக்கிடையே தன் விருப்பத்தை சாதிக்க, அரசியல் தலைவர்களுக்கிடையே உண்னாவிரதமாக என்றெல்லாம் பயன் படுத்த படுகிறது. இதன் தாக்கம் புரியாமல் பள்ளி பிள்ளைகள் கூட சின்ன காரணங்களுக்காக, தேர்வில் தோற்றது தோழி பேசவில்லை என உயிரை விட துணிகிறார்கள். வாழ்த்து போராட இவர்களுக்கு நாம் சொல்லி கொடுக்கவில்லை. தன்னைத்தான் நேசிக்கும் பழக்கம் சொல்லி தரவில்லை. நேற்று சீனாவில் தந்தையின் கல்லீரல் புற்றுநோய் என்பதையும் அவர் உயிரோடு இன்னும் சில காலமே இருக்க முடியும் என்பதையும் அறிந்த ஒரு சிறுமி (10 வயதாம்) 200 தூக்க மாத்திரிகளை உண்டிருக்கிறாள். தான் இறந்ததும் தன் கல்லீரலை தந்தைக்கு கொடுக்க வேண்டும் என்ற ஆசையுடன். கணவனும் மகளும் மருத்துவ மனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள்.

பங்கு சந்தை போல தினமும் இராக்கில் இத்தனை பேர் இறந்தார்கள், ஆபகானிஸ்தானத்தில் காசாவில், இலங்கையில் பெண்கள் வன்புணரப்பட்டார்கள், குழந்தைகள் காயமடைந்தனர், இத்தனை பேர் இறந்தார்கள் என்றெல்லாம் பார்த்து பார்த்து மனம் என்னவோ மறத்து போய்விட்டது. அங்கே நம் உறவினர் இல்லையா தெரிந்தவர் இல்லையா உடனே அடுத்த வேலைக்கு என்று போவதென்பது பழகி விட்டது.

ஐக்கிய நாடு சபையும், மனித உரிமைக்கழகமும் கூட தோற்று போன நிலையில் மற்றவரின் துன்பம் கூட நமக்கு ஒரு உயிரில்லா செய்தியாக மாறி விட்டது. ஊடகங்களுக்கும் தீவிரமான குண்டு வெடிப்பா, குண்டுவெடிப்பால் மக்கல் மனத்தை அதிற கூடிய குழந்தைகல் காப்பகம் அல்லது மருத்துவமனையா இன்னும் வினாடிக்கு வினாடி நேரடியாய் ஒலிபரப்பலாம்அல்லது மிகவும் மிருகத்தனமான சித்திரவதையா அது இன்னும் அதிகம் வாசகர்களை அல்லது பார்ப்பவர்களை கூட்டுமா நம் ரேட்டிங் அதிகரிக்குமா மகிழ்ச்சியோடு காட்டுகிறார்கள். இப்படிபட்ட செய்தி இல்லாவிட்டால்தான் இவர்கள் துன்பப்படுவார்கள்.

நாம் பொருளாதாரம், மற்றும் கல்வி போன்றவற்றில் உலகமயமாக்கினதென்னவோ உண்மை. ஆனால் சகோதர மனப்பான்மையில் மனிதத்தில் தனிமைப்பட்டுவிட்டோம்.

பிள்ளையின் பள்ளியில் ஒரு வெடிகுண்டு இருந்ததாக செய்தி, குழந்தைகளை பாதுகாப்பான நிலவறைக்கு அனுப்பி பள்ளியை பூட்டியாகிவிட்டது. பெற்றோருக்கு செய்தி வந்த பத்து நிமிடத்தில் பதைபதைப்பும் கவலையும் சேர பள்ளிக்கு விரைந்து போனோம். 2 மணி நேரம் நாய்களும் காவலர்களுமாக விளக்குகள் எரிய காவலர்களின்ன் கார்களும் ஆம்புலன்சுகளும் தீயணைக்கும் வண்டிகளுமாக பள்ளியைச்சுற்றி ஒரே அமர்க்களம். அலசல், தேடுதல் எல்லம் முடிந்து ஒனுர்ம் இல்லை என்ர பின் குழந்தைகள் வெளியே அனுப்பப்பட்டார்கள். ஆனாலும் பிள்ளையை கண்டவும் ஒரு நிம்மதி பரவியதும் அந்த கவலையையும் என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது.

ஈழப்போரில் இறந்து போன குழந்தைகளின் படங்களை பார்க்கும் போது, காலையில் பள்ளிக்கு போன பிள்ளை மாலை வருவானா என்ற உறுதி இல்லாமல் செத்து பிழைக்கும் அன்னையர்களை நினைக்கும் போது, பள்ளி உண்டா திறப்பார்களா, நாளை என்ற ஒன்று நமக்கு இருக்குமா என்ற உறுதி கூட இல்லாமல் தவிப்பவர்களை பற்றி அறியும் போது மிகுந்த துக்கம் ஏற்படுகிறது. எப்போதேனும் ஒரு அறிக்கையில் கையெழுத்திடுவதும், அரசியல் அமைப்பாளார்களிடையே பேசும்போது விழிப்புணர்வை தூண்ட முயற்சிப்பதுமாய் நாளைய கவலையில் வாழ்க்கை போய்க்கொண்டே இருக்கிறது.

நம்பிக்கை மீதே நம்பிக்கை இழந்து போன மனத்தின் வெறுமை மட்டுமே மிச்சம்.


3 Responses  
  • சாந்தி writes:
    February 6th, 2009 at 4:14 pm

    என்ன சொல்ல இருக்கிறது மீதமாய் ? எல்லாவற்றையும் உங்கள் எழுத்தால் சொல்லிவிட்டீர்கள். முத்துக்குமாரனுக்காக இப்போது அழத்தான் முடிகிறது. அந்த இளைஞன் போன்றோரின் திறன் எல்லாம் எங்களுக்கு வேண்டும் தீக்குழித்தல்கள் இனி வேண்டாம். தமிழகத்து இளைஞர்கள் புரிந்திடுக.

    சாந்தி

  • அன்புடன் பாலா writes:
    February 8th, 2009 at 10:57 am

    பத்மா,
    மிக அருமையான, சற்றே மனதை கலங்க வைத்த பதிவுக்கு முதலில் நன்றி.

    ஒன்று நிதர்சனம். மனைவியைக் கொடுமைப்படுத்துபவர்களில், படித்தவர்களும் இருக்கிறார்கள், படிக்காதவர்களும் இருக்கிறார்கள் !!! வன்முறையால் பெண்ணை இழந்தவர்களின் வலி என்பது அசாதாரணமானது !

    நானும் நினைத்துப் பார்ப்பதுண்டு, தங்களை எரித்துக் கொள்பவர்கள், சாவதற்கு முன் எத்தகைய பெருவலியை சந்தித்து இருப்பார்கள் என்று :-( மனித உடல் மீதான உச்சக்கட்ட வன்முறை அல்லவா அது ?

    எ.அ.பாலா

  • vAssan writes:
    February 14th, 2009 at 12:48 am

    பத்மா: உங்கள் தமிழ் ஒளியுடன் உள்ளது. வேறு எப்படி சொல்வதென்று தெரியவில்லை.

    இதமாக துயரத்தைச் சொல்வது, எழுதுவது எளிதல்ல.

    மதி கந்தசாமி போட்டிருக்கும் புகைப்படங்களில், கலங்கிய முகத்துடன் ஒரு ஈழத்தம்பி அழுது கொண்டு மண்ணில்
    உட்கார்ந்திருப்பது பெரிதும் மனதை வருத்தியது. அதே வேதனை தற்போதும்…

    நலம் நாடும்,

    வாசன், விஜி.


Leave a Reply

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions