»
S
I
D
E
B
A
R
«
உளவியலும் ஆன்மீகமும்
November 20th, 2007 by பத்மா அர்விந்த்

நீங்கள் எப்போதாவது குணசீலம் போய் இருக்கிறீர்களா? அங்கே மன நிலை பிறழ்ந்தவர்களை சங்கிலியால் கட்டி வைத்திருப்பார்கள். அனுதினமும் காலை கோவில் குளத்தில் குளிக்க வைத்து சன்னிதிக்கு அழைத்து வந்து அங்கே தரும் பிரசாதத்தை உண்டால் குணமாகி விடும் என்ற ஒரு நம்பிக்கை. காலில் சங்கிலியுடன், பரிதாபமாக இருக்கும்அந்த மனிதர்களை பார்க்கையில் மனம் வருத்தமாக இருக்கும். அவ்வப்போது பூசாரி வைத்து மந்திரிப்பது, துடைப்பத்தால் அடித்து பெண்களுக்கு பேயோட்டுவது, தலமுடியை கொத்தாக பிடித்து இழுத்து அடிப்பது, பணிந்து வரவேண்டும் என்று வன்முறை செய்வது, அறியாமையால், ஏதோ ஒரு நம்பிக்கையால் அந்த பூசாரிகளிடமே தம் பெண்களை குணமாகும் வரை விட்டு வருவது என்று நிறைய நிகழ்ச்சிகளை படித்திருக்கிறேன். இதில் பல பெண்கள் பூசாரிகளால் பாலியல் துன்பத்திற்கு ஆளான கதையையும் கேட்டிருக்கிறேன். ஆனாலும் கணவனை பற்றிய மனக்கவலைகளைச் சொன்னால், மதிப்பு போய்விடுமோ என்ற பயம் அல்லது இதென்ன பெரிய விஷயம் நான் பார்க்காததா, இவனுடைய அப்பாவை விட இவன் எவ்வளவோ பரவாயில்லை என்ற சமாதனமோ கிடைக்குமே தவிர தீர்ப்பு கிடைப்பதில்லை. மன அழுத்தம் அதிகமாக இருக்கும் ஒருவித vulnerable நிலையில் உள்ள பெண்கள் அதிகம் இதுபோல நம்பிக்கையில் விழுகிறார்கள். நம் சமூகத்தில் மனநோய்க்கு அதிக ஆதரவோ புரிந்துணர்வோ இல்லை. உண்மையில் சொல்ல போனால் நாம் அனைவருமே எப்பொழுதாவது ஒருமுறை மனச்சோர்வுக்கு ஆளாகிறோம், ஆனால் அது நம்மை அல்லது சில சமயம் நம் குடும்பத்தை தவிர மற்றவரை பாதிக்காமல் இருப்பதில் கவனம் செலுத்துகிறோம். அது வரம்பு மீறி, தன் கட்டுப்பாட்டை இழக்கும் போது இது போல பரிகாரங்களையும், தெய்வ குற்றமாக கோவில் கோவிலாக செல்லவும் ஜாதக ஆலோசனை, தோஷம் போக்க சில கட்டுப்பாடுகள், விரதங்கள் என முடிந்து போகிறது.

பெண்களைப்போலவே ஆண்களும் மன அழுத்தம், மன சோர்வுக்கு ஆளாவது உண்டு. ஒவ்வொருவர் ஒவ்வொருவகையில் வடிகால்கள் தேடிக்கொள்கிரார்கள். இதில் ஆண்மை என்பது உணர்ச்சிகளுக்கு அதிகம் ஆட்படுவதில்லை, அழுவதோ பாராட்டிக்கொள்வதோ இல்லை என்ற ஒரு பிம்பம் இருப்பதால், இவர்கள் பாடு இன்னும் மோசம். இப்படி பட்ட சூழலில் மேலை நாடுகளில் திருமண பிரச்சினையானாலும் போதைப் பழகத்தில் இருந்து விடுபவேண்டுமானாலும் இல்லை அலுவலக பணி அழுத்தம், சக பணியாளரிடையே பிரச்சினை எல்லாவற்றிற்கும் அலுவகத்திலேயே, இல்லை வெளியே ஆலோசனை சொல்ல மனநலத்தில் தேர்ச்சியும் இந்த பிரச்சினையில் தனிப்பட்ட ஆதாயம் இல்லாமல் நடுநிலையோடு அதை அலசி வழிநடத்தவும் பயிற்சி பெற்றவர்கள் இருக்கிறார்கள். அதனை போலவே நம் ஊரிலும் இப்போது நிறைய முறையான பயிற்சி பெற்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பரவலாக பத்திரிக்கைகளில் கொஞ்சம் புகழோடு கூடிய நடிகைகளை ஆலோசனை கூற அழைக்கிறார்கள். இதில் பெரும்பாலும் பெண்களுக்கு பொறுமையோடு இருங்கள், அடிக்கிற கைதானே அணைக்கும் என்றெல்லாம் ஆலோசனை சொல்லப்படுவதை கண்டு சலித்திருக்கிறேன். இதற்கும் மேலாக சில வார இதழ்களில் தற்கொலை செய்து கொள்ள இருக்கிறேன், என் பிரச்சினைகளுக்கு உடனே ஒரு தீர்வை சொல்லுங்கள் என்ற வுடன், பூவரசன்குப்பம் நரசிம்மன சன்னிதியில் விளக்கேற்றுங்கள் என்றோ, ஜாதகப்படி உங்கள் மனைவி சபல புத்தியுடையவர் என்ரு தெரிகிறது, விவாகரத்து செய்துவிடுங்கள் என்றோ, உங்கள் பெண் மனம் அலை பாய்வது ஜாதகம் மூலம் தெரிவதால் படிப்பை நிறுத்தி உடனே திருமணம் செய்துவிடுங்கள் என்ரூ வரூகின்ற ஆலோசனைகள் கோபத்தை வரவழைக்கும். முன்பின் தெரியாதஒருவரின் வாழ்க்கை முடிவுகள் இன்னொருவரால், பெற்றோர்களுக்கு சொல்லப்பாடுவது எப்படி சரியாகும்?

இப்படிப்பட்ட சூழலில் சமீபத்தில் சுகி.சிவம் அவர்களிடம் ஒரு வாசகர் கேட்ட கேள்வியும் அதற்கான பதிலும் கீழே:

    மேலைநாடுகளில் உளவியல் கல்வி கற்று, பட்டம் பெற்ற நிபுணர்களே மக்களின் பிரச்னைகளுக்கான ஆலோசகர்கள். ஆனால், இங்கோ உங்களைப் போன்ற சமயவாதிகள் அந்த வேலையைச் செய்கிறார்கள். இது சரிதானா


மேலைநாடுகளது சுயமுன்னேற்றச் சிந்தனைகளை மொழிபெயர்த்து உங்களை வளப்படுத்தும் பயிற்சியாளர்கள் இங்கும் நிறைய இருக்கிறார்கள்! ஆனால், அவர்களுக்கும் சமயவாதிகளான எங்களுக்கும் இடையில் நுட்பமான ஒரு வேறுபாடு இருக்கிறது. அவர்கள் பூமி; நாங்கள் ஆகாயம். பூமி அதிகம் பயன்படுவது போலத் தோன்றும். ஆனால், ஆகாயம் என்ற இடைவெளி இருப்பதால்தான் பூமி இயங்க முடிகிறது. ஆகாயம் என்பது இல்லாதது போல் தோன்றும் ஒன்று. ஆனால், அந்த இல்லாமையே பிறவற்றின் இருப்புக்கு ஆதாரம்.

சுலபமாக்குகிறேன். மனத்தை மையப்படுத்தியே மேற்கத்திய நிபுணர்கள் பேசுகிறார்கள். மனம்தான் நமது வெற்றி& தோல்விக்கான ஆதாரக் களம் என்கிறார்கள். மனதை உபயோகப்படுத்தி, வெற்றி பெறுங்கள் என்பது அவர்களது பாடத் திட்டம். சரியாக உபயோகப்படுத்துகிறவர்கள் வெற்றி பெறுகிறார்கள்; தவறாக உபயோகப்படுத்துகிறவர்கள் தோல்வி அடைகிறார்கள் என்று கற்றுத் தருவார்கள். ஆனால், இது சரியல்ல என்பதே என் போன்றவர்களது கருத்து. அவர்களது அஸ்திவாரமே ஆட்டம் காண் கிறது என்பதே ஆன்மிகவாதிகளின் அபிப்ராயம்.

காரணம் மனத்தை உபயோகப்படுத்தச் சொல்வதும், எழுதுவதும் சுலபம். ஆனால், வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் கூர்ந்து கவனித்தால், மனத்தை யாரும் உபயோகப்படுத்துவது இல்லை என்பது புலனாகும். உண்மையில், மனமே நம்மை உபயோகப்படுத்துகிறது. மனம் எஜமானனாகி, மனிதனை பயன்படுத்திக் கொள்கிறது. மனத்தைச் சரியாகப் பயன்படுத்துவது என்ற பேச்சு, குதிரைக் கொம்பு மாதிரி. மேலைநாட்டின் எல்லாச் சுய முன்னேற்ற நூல்களும் இந்தக் குதிரைக் கொம்பு வியாபாரத்தையே நடத்துகின்றன. உண்மையில் மனம் என்பது, பல ஆசைகள் சேர்ந்த ஒரு கூட்டம். அது ஒரே ஒரு ஆசையல்ல. உண்மையில் ஒரு மனம் என்பது, எண்ணற்ற முகங்கள் கொண்டது. எனவே, மனத்தைச் சரியாக உபயோகிப்பது… தவறாக உபயோகிப்பது… அல்லது உபயோகிக் காமல் இருப்பது என்கிற மேலைச் சிந்தனையாளர்கள் பலரது பயிற்சி முறைகள், வெறும் பசப்பு வார்த்தைகள், பாசாங்கு நாடகங்களே. உலக வரலாற்றை ஊன்றிப் பாருங்கள். மனம்தான் நம்மை உபயோகிக்கிறது; நம்மால் மனத்தை உபயோகிக்க முடியவில்லை என்பது விளங்கும்.

நமது கீழை நாட்டு ஆன்மிகம் வலிமையான அஸ்திவாரம் உடையது. ‘நான் மனம் அல்ல’ என்ற சிந்தனை, நெருப்பை விட& அணுகுண்டை விட சக்தி வாய்ந்த ஓர் உண்மையை அது பயன்படுத்துகிறது. ‘நானே மனம்; மனமே நான்’ என்ற மேலை நாட்டுச் சிந்தனையைத் தகர்த்து எறிந்து, ‘நான் மனம் கடந்தவன்’, ‘மனமற்ற நிலையே மிக வலிய நிலை’, ‘மனத்துடன் இருத்தல் துன்பம் தரும்; மனமற்ற நிலையே ஆனந்தம்’ என்பதை நிரூபித்த பெருமை ஆன்மிகத்தை மட்டுமே சாரும். அதற்கு ‘ஆன்மா’வின் இருப்பை உணர வேண்டும்.

‘மனத்துக்கு நாம் எஜமானர்’ என்ற அசாதாரண உண்மையைப் புரிய வைக்கும் ஆன்மிகம், எனது உலகம். மனம் நமது எஜமானன் என்கிற சாதாரண உண்மையைப் புரிய வைத்துக் கொண்டிருப்பது மேலைநாட்டு உள நல நிபுணர்களது உலகம். நான் ஆகாயம்: அவர்கள் பூமி. நான் எப்படி அவர்களது வேலையைச் செய்ய முடியும்? எனது வேலையே வேறு… இப்போது சொல்லுங்கள். நான் செய்வது தவறா… சரியா

எனக்குப் புரியாதது ஒன்று, சில நியுரோ வேதிப்பொருட்கள் ஏற்றதாழ்வால் (inbalance)ஏற்படும் சில மன பிரச்சினைகளுக்கு இது எப்படி வடிகாலாகும்? அல்லது ஆன்மீகம் என்பது மூடநம்பிக்கைகள் அடக்கியதா இல்லை அப்பாற்பட்டதா? பிறந்த நேரம் துல்லியமாக தெரியாமல் கணித்த ஜாதகம் சொல்வதாக ஒரு பெண்ணை பாதியில் படிப்பை நிறுத்துவது, உங்கள் கணவரின் (அல்லது மனைவி) மீதுதான் பிழை, அசைவ உணவு உண்பதால்தான் இந்த பிரச்சினை என்று சொல்வது எதில் அடக்கம்?

இவை எல்லாம் கடந்த ஆன்மீகம் ஏன் பரபரப்பான ஊடகங்களில் தென்படுவதில்லை? மனத்தை கடந்து இருப்பவனுக்கு எப்படி வேறுபாடுகள் வரும்?


16 Responses  
  • kannabiran Ravi Shankar (krs) writes:
    November 21st, 2007 at 11:57 am

    Padma

    I am reading this again; Will come back!
    I saw Sugi Sivam’s comments too!
    //ஆன்மீகம் என்பது மூடநம்பிக்கைகள் அடக்கியதா இல்லை அப்பாற்பட்டதா?//
    ஆன்மீகம்-மதம் ரெண்டும் வெவ்வேறு domain!
    Spiritual vs Religious தான்!
    ஆனா ரெண்டும் பல சமயம் க்ராஸ் ஆகும்! அது நல்லது தான்!
    க்ராஸ் ஆகாம இருக்கும் போது பிறக்கும் பிள்ளை தான் இந்த மூடநம்பிக்கை!

    பதிவு, பல சிந்தனைகளைத் தூண்டுகிறது! மீண்டும் வருகிறேன்!

  • Mohandoss Ilangovan writes:
    November 21st, 2007 at 2:45 pm

    பத்மா,

    சமீபத்தில் ராமர் பாலப் பிரச்சனை வந்த பொழுது, NDTVல் இருந்து நாசாவின் chiefஐ நேரில் சென்று பேட்டி கண்டார்கள். அப்பொழுது இரண்டு மூன்று முறை பேட்டி எடுத்தவர். இந்தியால் ஒரு belief உண்டு, belief உண்டு என்று இரண்டு முறைச் சொல்லி அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்க, அந்த மனிதர் நேராகவே,

    belief, science இரண்டில் ஒன்றுதான் இருக்கமுடியும். எனக்கும் beliefல் நம்பிக்கையில்லை scienceல் நம்பிக்கை என்றார்.

    எனக்கும் அதுதான் சரியென்று படுகிறது.

    PS: NASA பற்றிச் சொன்னது சட்டென்று உதாரணத்திற்காகத் தோன்றவே, அம்மேரிக்காவை வம்பிழுக்கவோ இல்லை வேறு வகையறாக்களுக்கவோ இல்லை.

  • பத்மா அர்விந்த் writes:
    November 21st, 2007 at 2:59 pm

    இரவி
    எழுதுங்கள். மதத்தின் கட்டுப்பாட்டுக்கள் இயங்கும் தலைவர்களும் தங்களை ஆன்மீகவாதிகள் என்று சொல்லிக்கொள்வதாலும் எனக்கு இந்த ஐயம். விளக்கினால், புரிந்துகொள்வேன்.
    மோகன், எனக்கும் கூட //belief, science இரண்டில் ஒன்றுதான் இருக்கமுடியும். எனக்கும் beliefல் நம்பிக்கையில்லை scienceல் நம்பிக்கை என்றார்// . பின்குறிப்பெல்லாம் தேவையில்லை. அமெரிக்காவிலும் நிறைய மூட நம்பிக்கைகளும், மதக் குழுக்களும் அதிகம். இங்கேயும் மத நம்பிக்கை சார்பாக தடுப்பூசி போட மறுப்பவர்களும், தான் கருவைக் கலைத்த பாவத்திற்காக கடவுள் தரும் குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என 19 குழந்தை பெற்றுக்கொண்டவரும் உண்டு. பூதம், பேய் ஆகிய நம்பிக்கைகளும் உண்டு. அதில் முரன் என்ன என்றால் அந்த பேயோ ஆவியோ வருவதை வீடியோ படம் எடுத்ததாக போட்டு விவாதிப்பது:))

  • Tulsi Gopal writes:
    November 21st, 2007 at 3:08 pm

    அடுத்தவன் பேச்சைக் கேக்கறதுலே நம்ம ஆளுங்களை அடிச்சுக்கவே முடியாது பத்மா.

    நம்மக் குடும்பத்துலே பிரச்சனை இருக்குன்னா நாமே அதைச் சிந்திச்சு என்ன செய்யலாமுன்னு முடீவு எடுக்கணும். இதுக்கெல்லாம் ஜாதகம், ஜோசியம்ன்னு பத்துப்பேர்கிட்டேக் கேட்டாலும் பத்துவிதமாத்தான் பதில் வரும்.

    பெண்களுக்குப் பிடிக்கும் பேய்கள் எல்லாம் மன அழுத்தங்கள்தான்(-: இத்தனைக்கும் துக்கம்வந்தா அழுது தொலைக்கும் வகை.

    ஆனா, அழக்கூடாதுன்னு சொல்லி வளர்க்கப்படும் ஆண் குலங்களுக்கு ஏன் அவ்வளவாப் பேய் பிடிக்கறதில்லை???

  • மலைநாடான் writes:
    November 21st, 2007 at 3:36 pm

    //இவை எல்லாம் கடந்த ஆன்மீகம் ஏன் பரபரப்பான ஊடகங்களில் தென்படுவதில்லை?//

    இவை எல்லாம் கடந்த ஆன்மீகம் அமைதிநிலையாக அமைந்துவிடுவதால் இந்தப் பரபரபுக்குள் வருவதில்லை.

    பரபரப்பு ஊடகங்களுக்கு வேண்டுவது வணிகம். ஆதலால் இவற்றுக்குள் வருவது ஆன்மீக வணிகம். அவ்வளவே.

    // மனத்தை கடந்து இருப்பவனுக்கு எப்படி வேறுபாடுகள் வரும்?//

    புரியவில்லை.

  • இலவசக்கொத்தனார் writes:
    November 21st, 2007 at 3:56 pm

    ரொம்ப கனமான பதிவு. உண்மையில் நம் முன்னோர்கள் சொன்ன பல தீர்வுகளில் விஞ்ஞானம் கலந்து இருக்கிறது. ஆனால் இன்று வணிகமயமாக்கப்பட்ட சூழலில் ஒரு விதமான பின்புலமும் இல்லாத, முன்பு கடைபிடிக்கப்பட்ட காரணங்கள் என்ன எனத் தெரியாமல் நீர்த்துப் போகப்பட்ட ஆலோசனைகள் உருப்படியானவை அல்ல என்பது எனது எண்ணம்.

    மற்ற படி இந்த மனமே மனிதன், மனமின்மை – இதெல்லாம் எனக்கு புரிவதில்லை.

  • தெகா writes:
    November 21st, 2007 at 4:04 pm

    பத்மா அர்விந்த்,

    நானும் படித்தேன். பதில் சொல்லாமல் போக முடியவில்லை. மதவாதிகள் எப்படி தன்னை ஒரு ஆன்மீக வாதியாக இணைத்துக் கொள்ள எத்தனிக்கிறார்கள் என்பதனைப் பொருட்டு எனக்கும் நிறைய கேள்விகள் உண்டு.

    இங்கு ஒரு கேள்வி இந்த மன அழுத்தம் சார்ந்து வரக்கூடிய மனப்பிறழ்வு வியாதிகளுக்கு நவீன முறை சிகிச்சை முறைகள் வருவதற்கு முன்பு எப்படி அந்த காலத்தில் சிகிச்சைகள் அளித்து மன நோயாளிகளை குணப் படுத்தினார்கள் (குட்டிச் சுவற்றில் கட்டிப் போட்டு எதனையாவது கொண்டு அடிக்காமல்…).

    சுகி, போன்றவர்களின் சிகிச்சை முறை என்ன, ஏது என்று வீனே ஆராய்ச்சி எல்லாம் பண்ண வேண்டிய அணுகு முறை இல்லை… நேரடியாக ஒரே பதில் தான் “நீ செய்த பாவ புண்ணியத்தில் வந்தது”" மனம் கடந்த நிலையை அடை” என்று வேதீய சமச்சீரற்ற ஒரு மனிதனிடம் கூறி கொடுக்கும் புரியா “”பிலேசிபோ”" மருந்து மாதிரிதான் தெரிகிறது.

    ஆனால் அந்த மருந்தும் தூரத்திலிருந்து கட்டிப் போடப்பட்டவருக்கு வழங்கும் ஒரு மருந்து தான்…

  • பத்மா அர்விந்த் writes:
    November 21st, 2007 at 7:13 pm

    துளசி

    நாமே சிந்தித்து முடிவெடுக்க நாம் கற்றுக்கொள்வதில்லை. அப்படி முடிவெடுத்தால் அதன் விளைவுகளுக்கு பொறுப்பெடுக்க வேண்டும். ஜாதக் ரீதி பதில் உடனே கிடைக்கும் ஒரு சமாதானம், எளிய முடிவு. ஆனால் தற்கொலை எண்ணம் உள்லவர் கடிதம் கண்டு உடனடியாக ஒரு தற்கொலைக்கான உதவி எண்ணை தொடர்பு கொண்டு உயிரைக்காக்காமல், பிரபல பத்திரிக்ககள் ஜாதக பரிகாரம் சொல்வது, தெகா சொல்வது போல போன ஜென்ம பாவம் என்று எழுதுவது, படிப்பை நிறுத்துவது, இன்ன துறை படிக்க வைக்க சொல்வது எத்தனை ஆபத்தானது.
    ஆண்களுக்கு மன நோய் வருவதுண்டு. ஆனால் அவர்கள் வடிகாலாக நிறைய வழிகள் உண்டு. விளையாட்டு, நண்பர்கள், மற்றும் பிரச்சினைகள் இருப்பதை உணராமல் ஒருவித டினையலில் இருப்பது என்று.

  • பத்மா அர்விந்த் writes:
    November 21st, 2007 at 7:19 pm

    இ.கொ: உண்மை. சில விஷ்யங்களில் சாப்பிட்டபின் நீராடாதே, நெய் ஊறுகாய் போன்ரு பல நாட்கள் இருக்கும் பொருளை எப்படி உபயோகிப்பது, cross contamination தடுப்பது போன்ற பல விஷ்யங்களில் எனக்கும் உடன்பாடு உண்டு. அதேபோல சில பண்டிகை தின சாப்பாட்டு முறைகள் காலத்தை ஒட்டி இருக்கும். ஆனாலும் உளவியலைவிட ஆன்மீகம் பெரிது என்பதுவும் நான் ஆகாயம், உளவியல் பூமி என்ரும் இந்திய கலாச்சாரம், மேலை நாட்டுடையதைவிட பன்மடங்கு பெரியது, மேலை நாட்டில் கலாச்சாரம் இல்லை என்பதுபோல பேசுவதெல்லாம் எனக்கும் புரியவில்லை. மனத்தை அடக்க முயன்றால் ஒருமித்து அடக்கலாம் ஒரு வேலையில் ஆழ்ந்து ஒருக்கும் போது. ஆனால் அதே பொழுது போக்கிற்காக எங்காவது நிதானமாக செல்லும் போதுகூட அலைஇபாயும் மனத்தை ஒன்றில் இருந்து இன்னொன்றுக்காய் தாவும் மனத்தை அடக்க பயிற்சி வேண்டும். நான் இதில் இன்னும் தவழும் குழந்தை நிலை கூட இல்லை.

  • பத்மா அர்விந்த் writes:
    November 21st, 2007 at 7:29 pm

    எல்லாப்பிரச்சினைக்கும் போன ஜென்ம பாவத்தின் மீது பழியை போட்டால், பிரச்சினையை தீர்க்காமல் தப்பிக்கலாம். அந்த நாளில் என்ன செய்தார்கள் என்பது சுவாரசியமான கேள்வி. மேலும் இந்த பாவ புண்ணியம் கூட வசதி பார்த்து வரவேண்டும், ஏனென்றால் அதற்கேற்ற பிராயசித்தங்கள் (பண் ரீதியில்) மாறும்.
    மலைநாடன்: ஆன்மீகம் என்பது இப்போதெல்லாம் மதத்தோடு கலந்துவிட்டதாக தோன்றுகிறது. ஆன்மீக தலைவர்கள் ஏதேனும் ஒரு மதத்தின் கோட்பாட்டை பிடித்துக் கொண்டிருப்பதாகவும் அதை பரப்புவதாகவும் எனக்கு தோன்றுகிறது. நான் சொல்வது தவறாக கூட இருக்கலாம். மற்றபடு ஊடகங்கள் வணிகத்தீற்காக பரபரப்பை தேடும் போது, அமநலத்தை புறக்கணிக்கும் ஒரு நாட்டில், மனநல மருத்துவரைவிட, உளவியலைவிட ஆன்மீகமே பெரிது என்று சொல்லவேண்டாம்.

  • ஜீவா writes:
    November 21st, 2007 at 8:32 pm

    நிறைய பேருக்கு ஜோதிடம் பற்றியான குழப்பம் இருக்கிறது. ஜோதிடம் என்பது கணிப்பு மட்டுமே. அந்த கணிப்புப் படித்தான் நடந்தாக வேண்டும் என்பதல்ல. அந்த கணிப்பை நாம் செய்யும் செயலால் மாற்றி அமைக்கலாம். இதைத்தான் மதியால் விதியை வெல்வது – என்பார்கள்.

  • ஜீவா writes:
    November 21st, 2007 at 9:09 pm

    நிறைவு செய்வதற்கு முன்பாகவே ‘Enter’ஐ அழுத்திவிட்டேன்…இங்கே தொடர்கிறேன்:

    “கண் போன போக்கிலே கால் போக வேண்டாம்” என்பதுபோல மனதுபோன போக்கிலெல்லாம் மனிதன் போனால் தடுமாற்றம் அடைபவர்களுக்கான நல்வழிப்படுத்தலே சமயம். பல்லாயிரக்கணக்கான நம்பிக்கைகளும் அதுனுள்ளே புதைந்து போய் விட்டது உண்மைதான். ஒரு நம்பிக்கை ஒருவருக்கு பயன் தருவதாக இருந்தாலும், இன்னொருவருக்கு பயன் அற்றதாகவும் இருக்கலாம். ஆகையால் இவற்றை பொதுமைப் படுத்த வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொருவரும் தானாக ஆராய்ந்து இந்த நம்பிக்கை எனக்கு தேவையானதுதானா என்று ஆராய்ச்சி/சோதனை செய்து மேற்கொள்ளலாம். ஆதலால் பொதுப்படையான ஆராய்ச்சி செய்தல் பயனற்றது.

    ஆன்மீகம் சொல்லும் மெய்ஞானம் எனப்படுவது இறை அருளை நாடுவது. இது ஒரு நபர் தனக்காக, தன் மெய்ஞான மேம்பாட்டிற்காக செய்வது.
    மனம் ஆசைகளின் வழியே இடறுவதை கடிவாளம் போட்டு நிறுத்தி, எது அறம் என அறிந்து, அனைத்து உயிர்களிடமும் பாகுபாடில்லாமல் அன்பினை செலுத்தி, உண்மையான பேரறிவினை நாடி, தான் உண்மையில் யார் என அறிவது. அப்படி அறிதனிலால், மனதுக்கு எஜமானாக இருக்கிறோம்.

  • பத்மா அர்விந்த் writes:
    November 21st, 2007 at 9:10 pm

    ஜீவா
    உண்மையாக இருக்கலாம். ஆனால் என் வருத்தம் எல்லாம் முன் பின் தெரியாதவர்கள் ஜாதகமே சரியாக கணிக்கப்பட்டதா, பிறந்த நேர வினாடிக் கணக்கில் துல்லியமானதா என்றெல்லாம் தெரியாமல் ஜாதகத்தை பார்த்தே உங்கள் பெண் சபல புத்தி உடையவ்ர், உங்கள் கணவனுக்கு இன்னோர் பெண்ணுடன் உறவு இருக்க கூடும் என்று சொல்வதாக சொல்வது தவறல்லவா? சில வாரங்களுக்கு முன் ஒரு பிள்ளை தன் அம்மாவின் ஒழுக்கத்தை பற்றி கேட்டதாக கூட கடிதம் பார்த்தேன். எனக்கு உளவியல் ரீதியாக இதற்கெல்லாம் என்ன காரணம் இருக்க கூடும் என்று சிந்திக்க முயற்சி செய்ய விருப்பம் உண்டு.

    நீங்கள் சொல்வது போல அவரவருக்கு ஏற்றதனை சிந்திப்பது நலம் என்றாலும், பலருடைய நம்பிக்கைக்கு ஆளானவர்கள் பொதுவாக அறிவுரை சொல்லும் போது கவனமாக இருத்தல் அவசியம் (மனநல மருத்துவர்கள் உட்பட). நீங்கள் ஆன்மீகம் என்பது மேய்ப்பொருளாம் இறையருளை நாடுவது என்கிறீர்கள். ஆனால் மெப்ய்ப்பொருளாம் இறைவனை நாடுவதென்றால், அதில் ஏன் இத்தனை பிரிவுகள்.நீண்ட கருத்துக்கு மிக்க நன்றி. நாஅன் சொல்ல நினைப்பதை சரியாக சொல்லவில்லை என்றே நினைக்கிறேன். இன்னும் விரிவுபடுத்த முயல்கிறேன்.

  • seetha writes:
    November 23rd, 2007 at 1:34 am

    பத்மா உங்கள் பதிவைப்பார்த்தபின் ஒரே எக்சைட்மெட்ன். .சுகிசிவம் பதில் ரொம்பவே குழப்பமாகதான் உள்ளது. ஆனாலும்,வைத்தியம் என்று வரும்போது, அவரவ்ருடய் நம்பிக்கை மிகவும் முக்கியமாக பங்கு வகிக்கிறது.geriatric depression எடுத்துகொண்டால் out come is dependent on religious affliation. that may as well indicate the community feeling of church etc. however today in psychiatry lots and lots of buddist/advaitha princilples are used.for eg mindfullness…

    yes it is a neurochemical imbalance , but imaging studies are able to prove talk therapies do show changes in the brain.infact if we want effective mental health awareness we will have to colloboratively work with these poosaris.all the allied helth seem to have some sort of placebo effect.it is a bit hard for me to write in a more lucid way.in cmc where i did my pg we were taught to say,’சாமியும் கும்புட்டுக்கங்க, மருந்தயும் சாப்பிடுங்க’.

    in no way i am suggesting that we should foster unhealthy superstitious believes. but at times my idea of superstition may be your blief to health.i hope i am clear!!!

    தமிழில் எழுததர்க்கு மன்னிக்கவும்

  • பத்மா அர்விந்த் writes:
    November 23rd, 2007 at 10:21 am

    சீதா
    உங்கள் மறுமொழிக்கு நன்றி. நீங்கள் சொல்லும் நம்பிக்கைகள் போதை பொருட்கள் அடிமைத்தனத்தில் இருந்து விலக, புற்றுநோய் சிகிச்சை ஆகியவற்றில் மிகவும் பயன்படுகிறது. உடல்நலக்கலவி இந்த கூட்டு முறையில் நம்பிக்கை கொண்டிருக்கிறது. பயமுறுத்தி பழக்கங்களை மாற்றுதல் (புற்றுநோய் வந்துவிடும் அல்லது பாவம் சேர்ந்து அடுத்த பிறப்பை கஷ்டப்பட வைக்கும் போல) இன்னமும் பழக்கத்தில் இருக்கிறது. அதேபோல pshcho neuro immunology இன்னமும் அதிக ஆராய்ச்சி முடிவுகளை கொண்டுவருகிறது. it has been proven that positive thinking does increase cytokines and has positive results in therapy. இதைப்பற்றி இன்னமும் விரிவாக, தனிப்பதிவாக எழுத வேண்டும்.

    இங்கே சுகி சிவம் அதை முன்வைக்கவில்லை, இந்திய ஆன்மீகம் உளவியல் துறையைவிட உயர்ந்தது என்ற அளவில் நான் ஆகாயம் நீ பூமி என்றெல்லாம் சொல்வதில் உடன்பாடில்லை.

    அதேபோல நம்பிக்கை எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். துன்பத்தில் இருக்கும் ஒருவருக்கு அந்த துன்பம் விரைவில் நீங்கும் என்ற நம்பிக்கை இல்லாவிடில் வாழ்க்கையே போய்விடும். ஆனால் அந்த நம்பிக்கை இறைபக்தியில் மட்டும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதிலே அறிவுறுத்தலோ எந்த அளவு சரி? தொழில் நம்பிக்கை இருக்கலாம், தன்னிடத்திலே கூட இருக்கலாம் அல்லது இயற்கை சக்தியில் இருக்கலாம். ஒன்று தவறென்றொ இன்னொன்று சரியென்றோ சொல்ல முடியாது. ஏனென்றால் இவரின் சில பதில்களில் நாத்திகம் எப்படி தவறு, அசைவ உணவு உண்பது எப்படி பாவம் என்ற விவாதத்தை பார்த்திருக்கிறேன்.

    நம்முடைய ஆன்மீக பதிவர்கள் பலரும் (நான் விரும்பி படிக்கும் ரவியின் பதிவும்) ஏதோ ஒரு இறைவனின் வழிபாட்டை பேசுவதாகத் தான் தோன்றுகிறது.

  • jeevee writes:
    November 23rd, 2007 at 7:00 pm

    மதிப்பிற்குரிய டாக்டர் பத்மா அர்விந்த் அவர்களுக்கு,
    ஆன்மீகமா இல்லை நவீன மருத்துவமா என்கிற பட்டிமன்றமில்லை உங்கள் பதிவு என்று நினைக்கிறேன். இப்பொழுதெல்லாம் புதுசு புதுசாகத் தோன்றும் சில வியாதிகளுக்கு, ஆங்கில மருத்துவச் சிகித்சையும், மருந்துகளும் தான் தீர்வு என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமேயில்லை என்றுதான் எண்ணுகிறேன்.
    ஆனால், பெரிய அள்வில் நோய்கள் வராமல் காத்துக்கொள்வதில், ஆன்மிகத்தின் பங்கு மகத்தானது என்பதையும் மறுக்கமுடியவில்லை. ஆன்மீகமும், உடல்நலமும் என்று தனியாகவே ஒரு சப்ஜெக்ட் இருப்பதை, வேதாத்திரி மகரிஷி போன்றோரின் வாழ்க்கைமுறையும், அவரது போதனைகளும் எனக்குத் தெரிவித்தன். ஆயுர்வேதம் என்பது நாம் எதைஎதை உணவாகச் சேர்த்துக்கொள்கிறோமோ, அதையே மருந்தாகக் கொள்கிறோம் என்பதும் நாம் அறிந்ததே. அத்னால், ஆங்கில மருத்துவத்தில் இருக்கும், side effect இதில் கிடையாது. ஆனால், ஆப்ரேஷன் என்கிற அளவுக்கு போனாலும், உடனடியான தீர்வுக்கும் ஆங்கில மருந்துகள் தான் நாட வேண்டியிருக்கிறது. ஆயுர்வேதத்திற்கு எதிராக ஆங்கில மருத்துவத்தைக் கொள்ள முடியாது. இரண்டும் இரண்டு கண்களே. அதனால், சுகிசிவம் அவர்கள் குறிப்பிட்ட ஆகாயம்,பூமி என்கிற இரண்டொரு வார்த்தைகளை மட்டும் எடுத்துக்கொண்டு ஆன்மிகத்தின் பரந்த எல்லைகளை மறுக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். கடவுளைத் தொழல் மட்டும் ஆன்மிகமில்லை; ஆன்மிகத்தைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்யின், எப்படி வாழ்க்கையை அமைத்துக்கொண்டு ஒழுக வேண்டும் என்று நமக்கு பிரமிப்பேற்படுத்தும் செய்திகளும், அநுசரிக்க வேண்டிய நியதிகளும் இருக்கின்றன். வாய்ப்பு கிடைத்தால், மகான் வேதாத்திரி மக்ரிஷி அவர்களின் எழுத்துக்களையும், உடல் நலம் பேணுதல் குறித்து அவர்து யோசனையும் படித்துப் பார்க்க வேண்டுகிறேன்.


Leave a Reply

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions