»
S
I
D
E
B
A
R
«
மனநிறைவு தந்த எட்டு
June 20th, 2007 by பத்மா அர்விந்த்

சில பதிவுகள் படிக்கும் போது நிறைவும், சில சுவையாகவும் சில சிந்திக்க தூண்டுவதாகவும் இருப்பதுண்டு. வெங்கட்டின் பதிவினை படித்த போது என் வீட்டில் நடந்த சில இளமைக்கால நிகழ்வுகள் நினைவுக்கு வர அதைப்பற்றி பேசிக்கொண்டும் நினைவுகளில் மூழ்கிப்போகவும் முடிந்தது. நீங்கள் என்னதான் சாதித்திருக்கிறீர்கள் என்று யாரவது கேட்டாலே ஒன்றுமில்லை என்பதுதான் பொருள்.

வாழ்க்கையில் பெரும்நாட்களை ஒரு படி ஏறவே திண்டாடி கழித்ததாலோ என்னவோ சாதனை என்று பெருமை கொள்ள எதுவும் இல்லை என்றாலும் மன மகிழ்வைத் தந்தவையும் எனக்குள்ளேயே பிடித்துப் போனவையுமாக நிறைய செய்திகள் உண்டு. அந்த பட்டியலில் எட்டு
1. இந்திய அறிவியல் தொழில்நுட்பக்கழகத்தில் 35 வயதுக்கும் கீழானோருக்கா ஆராய்ச்சிக்கு நிதி வழங்க செயல்திட்டம் உண்டு. நான் AIIMSஇல் சேர்ந்த போது அதற்கு படிவங்கள் அனுப்ப ஆர்வம் கொண்டபோது, என்னிடம் இன்னமும் ஆராய்ச்சி முனைவர் பட்டம் இல்லை, ஆராய்ச்சி செய்த பயிற்சியும் இல்லை என்று படிவங்கள் தர மறுத்துவிட்டனர். 35 வயதுக்கீழாக உள்ளவர்கள் எல்லாம் பங்கு பெறலாம் என்ற போதும் எழுதப்படாத விதிகள் இருந்தது அறிந்து, திரு. வசந்த கவரிகர்(அப்போதைய DST தலைவர்) அறைமுன் நீதிகேட்டு உண்ணாவிரதம் இருந்து மூன்று நாள் கடந்து எனக்கு விண்ணப்பங்கள் தர ஒப்புக்கொண்டனர். இந்த திட்டங்கள் ஒரு பரிந்துரைக்குழுவிற்கு செல்லும். அங்கே நல்ல முறையில் பரிந்துரை செய்யப்பட்டால் 3 வருடம் நிதி கிடைக்கும். எனக்கு கிடைக்காது என்று பலரும் AIIMSஇல் நம்பிக்கொண்டிருக்க, அந்த வருடம் பரிந்துரை செய்யப்பட்திலேயே சிறப்பான திட்டம் என்று சொல்லப்பட்டு வழகத்திற்க்கு மாறாக கூடுதல் நிதியும் கிடைத்தது. அதன் பின் வருடாவருடம் இளம் ஆராய்ச்சியாளர்களும் அதற்காக விண்ணப்பிக்க முடிந்தது.

2. இந்திய அறிவியல் கழக கூட்டம் மதுரையில் நடந்த போது சிறந்த விஞ்ஞானிகளுக்கு பிரதமர் ராஜீவ் காந்தி பதக்கங்கள் வழங்க, அன்று மாலை பிரதமருடன் நடந்த விருந்தில் இளம் விஞ்ஞானிகள் சார்பாக என்னை பேச சொல்ல அழைத்தார்கள். 5 நிமிட பேச்சு 20 நிமிடமாக ஆனதும், ஆராய்ச்சிக்கழகங்களில் ஆய்வகங்களில் பணிசெய்யும் கடைநிலை ஊழியர்களின் உடல்நலம் பாதிக்க கூடிய வகையில், காசநோய், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் இருந்து எடுக்கும் இரத்தம் செல்களை அகற்றிய பிறகு கழிவுநீர்க்குழாயில் கொட்டப்படுவதும், ரேடியோ கதிர்வீசும் வேதிப்பொருட்கள் பயன்படுத்திய சாதனங்கள் சுத்தம் செய்யப்படுவதும் எத்தனை முறைகேடானது என்ன்பது தொடங்கி, அறிவியல் திட்டங்களுக்கான நிதியில் எத்தனை முறைகேடு நடக்கிறது என்பதற்கு AIIMs இல் நடப்பதை சொன்னதும், மறுநாள் வட இந்திய பத்திரிக்கைகள் young scienctist uproar என்று எழுத, தொலைகாட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாக, என்னை நீக்கிவிடுவார்கள் என்று அண்ணன் பயப்பட, பெற்றொர் கடிந்துகொள்ள இவை யாவும் நடவாமல், ராஜீவுடன் நெருங்கி பழகவும், பாதிக்கப்பட்ட கடைநிலை ஊழியர் சிலருக்கு மருத்துவ உதவி தரவும், அதன் பின் AIIMSஇல் சில மாற்றங்கள் ஏற்பட்டதும் மறக்க முடியாதது.

3. இப்போதெல்லாம் அமெரிக்கா பழகி இருந்தாலும், 86இல் முதன் முதலாக DStயில் கிடைத்த நிதி உதவியில் steamboat Springsக்கு வந்த போது, super 8 Motelல் தங்கியதும், கொட்டும் பனியில் சாதாரண செருப்புடன் ஒரு மைல் தள்ளியுள்ள மாரியாட்டுக்கு போக முயன்றதும்(முழங்கால் அளவு பனியில் பருத்தி உடையும் பாட்டா செருப்புமாக செல்ல நினைத்ததை இப்போது நினைத்தாலும் சிரிப்புத்தான்) பார்த்த ஒரு 18 சக்கர ட்ரக் ஓட்டுனர் அனுதாபம் கொண்டு தினமும் காலையில் கூட்டத்திற்கு அழைத்து போனதும், உணவு பொருளில் எதை சாப்பிடலாம் என்று தெரியாமல், எல்லவற்றையும் இந்திய ரூபாயில் கணக்கு பார்த்து பாதி நேரம் பசியுடனும் மீதி நேரம் குளிருடனும் இருந்து, கூட்ட முடிவில் சிறந்த ஆராய்ச்சி சுவரொட்டியாக தேர்ந்தெடுக்கப்பட்டதும் முனைவர் பட்டம் கிடைத்தபின் மேல் ஆராய்ச்சிக்கு வேலையையும் ஏற்படுத்திக்கொண்டு ஊர் சென்றது பசுமையான நிகழ்வு.

4. கார்னெல் பல்கலை கழகத்தில் இளம் ஆராய்ச்சியாளருக்கான விருது பெற்றதும், யூரிஸ் ஆடிட்டோரியத்தில் பேசியதும்(அங்கே பேசுவது அப்போது உயர்வாக கருதப்பட்டது), 5 நிமிட நிகழ்ச்சிக்காக கேடி (Katie couric) யுடனும் நிகழ்ச்சி ஒளிபரப்பாளருடன் 3 மணி ரிகர்சலும் தந்த நிறைவைவிட, கார்னெல் மருத்துவக் கழக தலவர் என் பெற்றோரிடம் என்னை பற்றி பேசிய போது அவர்கள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி பரவாயில்லை, நாம் ஒழுங்காகத்தான் வளர்ந்திருக்கிறோம் என்ற நம்பிக்கை இன்னும் அதிக மகிழ்ச்சியைத் தந்தது.

5. நிதிக்காக படிவங்கள் அனுப்பும் போது சில ஆராய்ச்சி முடிவுகளை உடன் அனுப்பி எப்படி எங்கள் திட்டம் வெற்றி பெரும் என்று சொல்வது சாலச் சிறந்தது. மனித மரபணு ஆராய்ச்சி திட்டம் ஒன்றிற்கு அவ்வாறாக நாங்கள் திட்டம் அனுப்ப சில கடைசி கட்ட பரிசோதனைகளை திரும்ப செய்ய வேண்டி இருந்த போது எனக்கு எந்த நாளிலும் குழந்தை பிறந்துவிடும் என்று இருந்ததால் என் ஆராய்ச்சி துறை தலவருக்கு சற்றே சங்கடமாய் இருந்தது. எப்படியும் நான் முடித்து, முடிவுகளை ஆராய்வு செய்து குறிப்பு எழுதிவிடுவேன் என்று கொடுத்த வாக்கை காப்பாற்ற, ஒரு நவம்பர் 17 காலை 6 மணிக்கே ஆய்வகம் சென்று அன்றைய நாளுக்காக பரிசோதனைகள் தொடங்கி நீண்ட நேரம் வளரக்கூடிய DNA cultur தொடங்கி, அர்விந்த் அலுவகம் சென்றபின் அம்மாவை அழைத்துக்கொண்டு நானே மருத்துவமனையில் முன்பே மருத்துவருடன் பேசி திட்டமிட்டபடி என்னை சேர்ப்பித்து, மாலை அர்விந்த் வரும்வரை, ஒருபக்கம் ஆக்ஸ்டோசின் உள்ளே சென்றுகோண்டிருக்க, உடன் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுடன் நிதி திட்டத்தை முடிக்க பேசிக்கொண்டிருந்து, மாலை 7 மணிக்கு அர்விந்த் அலுவலகத்தில் இருந்து வந்தபின் 8 மணிக்கு பிள்ளை பெற்று, மறு நாள் காலையில் 5 மணிக்கெல்லாம் அர்விந்த அலுவகம் சென்றுவிட, நான் 6 மணிக்கு ஆய்வகம் சென்று முடித்ததும், நிதி திட்டத்தை நேரத்திற்கு அனுப்பியதும் நிறைவான ஒரு விஷயம்.

6. எதனையும் கற்றுக்கொள்ள முடியும் என்ற எண்ணம் காரணமாகவோ என்னவோ புதிதாக ஒரு வேலைக்கு சேரும் முன் அதன் தொடர்பாக படித்துவிடுவது உண்டு. ஆராய்ச்சிக்கு பின் மேலாண்மை(நிர்வாகவியல்)யும், பொதுநலமும் படித்தபின்னும், ஒரு நிதி திட்டமிடுபவருடன் பேசியபோது அவர் சொன்ன எதுவும் புரியாமல், எப்படி கஷ்டப்பட்டு சேர்க்கும் பணத்தை அடிப்படை கூடத் தெரியாமல் முதலீடு செய்வது என்று யோசித்து அதன் காரணமாக series 7, 65, 66 என்று சான்றிதழ்கள் பெற்று ஸ்டாக் புரோக்கர் லைசென்ஸ் பெற்றதும், உடல்நல பயிற்சிக்கான Cerified health education specialist தேசிய சான்றிதழுக்கான தேரிவில் வெற்றி பெற்றதும், பணியில் சில நேரங்களில் உதவும் என்று இப்போது corporate law என்றும் படித்துக்கொண்டிருக்கிறேன்.

7. மேலாண்மை படித்துக்கொண்டிருந்த போது அப்போதைய லியுசெண்டிர்கான ஒரு திட்டம் எழுதி, அதை பற்றி பேசி முதல் பரிசு வாங்கி அது வால்ஸ்ட்ரீட் ஜர்னலில் பெயருடன் திட்டக்குறிப்பும் வந்ததுகூட ஆச்சரியமான விஷயம். இந்த திட்டங்களை ஆராயும் குழுவில் பல நிறுவன தலைவர்கள் இருந்ததும் என் திட்டத்தை பாராட்டியதும் இன்னும் நினைவில் உள்ள நிகழ்வு.

8. காகேசியன் ஆடவர்கள், அதுவும் 20 வருடமாக கூடவே பணி செய்பவர்கள் நிறைந்த அரசாங்க குழுக்களில் முதன் முதலாக ஒரு பெண் அதுவும் இந்தியாவில் இருந்து வந்தவர் என ஆரம்பத்தில் அலட்சியமாக பார்க்கப்பட்டது மன வருத்தத்தை தந்தாலும், பிறகு என் பணிகள் மூலமாக கவனத்தை கவர்ந்து, சிறந்த சமுதாய திட்டமாக சமீபத்தில் என் திட்டம் ஒன்று தேர்வு செய்யப்பட்டதும், NACCHO விலும், வெள்ளை மாளிகையில் இருந்து உடல்நல கொள்கை பற்றி திரு. புஷ்க்கு உதவவும் அழைக்கப்பட்டது சில காரணங்களால் என்னால் ஒப்புக்கொள்ள முடியாவிட்டாலும், என்னாலும் முடியும் என்று தன்னம்பிக்கை தந்ததாலும் மறக்க முடியாத ஒன்றாகிவிட்டது.

இது எல்லாவற்றையும் மீறி என் மகனின் நண்பர்களின் பெற்றோர்களும் அவனுடைய ஆசிரியர்கள், அவன் ஈடுபட்டுள்ள மருத்துவமனை தன்னார்வ குழுத்தலைவர்கள் your mom did a good job raising you என்று என் மகனிடம் சொல்லும் போதும், நிராதரவான பெண்களுக்கு நிரந்தரமான வருவாய்க்கும் வாழ்க்கைக்கும் ஏற்பாடு செய்யும் போது அவர்கள் முகத்தில் தெரியும் நிறைவும் இன்னும் அதிக மகிழ்ச்சியாகவே இருக்கிறது.
நிறைவினை தந்த தகவலா இல்லை பொதுவான தகவலா என்று தெரியாததால் இரண்டையும் எழுதி இருக்கிறேன்.
பொதுவான எட்டு தகவல்கள் என்றால்
1.இருட்டை கண்டால் பயம்
2.அவசரகதியில் வரும் வேலை தவிர இரவு எட்டு மணிக்கு மேல் குடும்பத்திற்காக மட்டுமே என் நேரம்
3.பிடிக்காத அல்லது வேருபாட்டு காட்டும் எந்த அரசு இயந்திரமானாலும் விளைவுகள் ஆராயமல் போராடுவது இல்லை எதிர்ப்பை தெரிவிப்பது
4. நான் செய்தது தவறாகுமானால் தெரிவிப்பத்துடன் எனக்கு நானே தண்டனை கொடுத்துக்கொள்வது
5. அர்விந்தின் அலுவக திட்டங்களில் கூடுமானவரை உதவுவது
6. திட்டமும் வேலையும் பிடித்திருந்தால் ஊதியத்தை கணக்கில் கொள்ளாமல் உழைப்பது
7. முடியாது என்று சொல்லாமல் நிறைய நேரம் கூடுதல் பணிகளை சுமப்பது
8. சமீபகாலமாக தீவிரமாக உடற்பயிற்சி செய்வது

நான் அழைக்க விரும்பும் சிலர்

1. மங்கை
2. அருணா ஸ்ரீனிவாசன்
3.மூக்கு சுந்தர்
4.திரு
5. Voice on Wings
6.நிர்மலா
7. பிரபு ராஜதுரை
8. செல்வநாயகி

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்


49 Responses  
  • இலவசக்கொத்தனார் writes:
    June 20th, 2007 at 6:33 pm

    ஆஹா! நீங்க எல்லாம் எட்டு போட்டா நாங்க எல்லாம் பார்த்து படிச்சு இப்படி எல்லாம் இல்லாம போயிட்டோமே, நம்ம பசங்களாவது இப்படி வருவாங்களான்னு ஒரு எண்ணம் வரணும். ஹாட்ஸ் ஆப் பத்மா.

  • வடுவூர் குமார் writes:
    June 20th, 2007 at 7:36 pm

    அட்டகாசமாக இருக்கு உங்கள் உழைப்பும்,விடாமுயற்சியும்.
    உழைக்க யோசிக்கும் அனைவரும் கட்டாயம் படிக்கவேண்டிய கட்டுரை.
    மனது நிறைந்தது கட்டுரை படித்து முடிந்தவுடன்.

  • துளசி கோபால் writes:
    June 20th, 2007 at 7:37 pm

    வாவ்……………. பத்மா !!!! ரியலி யூ ஆர் க்ரேட்!!!!

    வாயடைஞ்சு நின்னுக்கிட்டு இருக்கேன்.

  • Sathia writes:
    June 20th, 2007 at 9:55 pm

    அடேங்கப்பா, நிரம்ப பெரிய ஆளா இருப்பீங்க போல. உங்களிடம் தான் பாடம் கத்துக்கணும் சாதனைன்னா என்னன்னு.முதல் முறை இங்கே வந்தேன். வாயடைச்சுப்போய் திரும்புகிறேன்.

  • VSK writes:
    June 20th, 2007 at 10:24 pm

    இதுவல்லவோ சாதனை!

    சாதனையாளரான என் நண்பருக்கு[அப்படி சொல்லிக் கொள்வதில் எனக்கு பெருமை என்பதால் சொல்லிக் கொள்கிறேன்!!] பாராட்டும், வாழ்த்தும்!

    கால் இப்போது குணமாகிவிட்டதா?

  • மூக்கு சுந்தர் writes:
    June 20th, 2007 at 11:24 pm

    பத்மா, அழைப்பிற்கு நன்றி.

    உங்களைப் போன்றவர்கள் பற்றிய நல்ல விஷயங்களைப் படித்துவிட்டு மனசுக்கு நிறைவாகவும் பிரமிப்பாகவும் உள்ளது

    சாதனை என்று சொல்லிக் கொள்ளுமளவிற்கு இதுவரை நான் எதையும் செய்யவில்லை. அவையடக்கம் அல்ல. அப்பட்டமான நிஜம் இது.

    மீண்டும் அழைப்பிற்கு நன்றி.

  • dharumi writes:
    June 20th, 2007 at 11:50 pm

    சிலரின் உயரங்கள் மலைப்பை மட்டுமே தருகின்றன. பொறாமைப் படக்கூட மனசில்லை.

    நிறைவான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்.

  • Prabhu Rajadurai writes:
    June 21st, 2007 at 6:50 am

    காலையிலேயே தங்களது பதிவினைப் பார்த்தேன். தங்களின் அழைப்பினை பெருமையாக கருதினாலும், தங்கள் பதிவின் benchmark கொஞ்சம் அதிகமாக இருக்கிறது.

    எனினும் வார இறுதியில் எழுதுகிறேன். இணையத்தில் அதிகம் expose செய்வது நல்லதா, என்ற பயத்துடன். நன்றி!

  • Ramachandranusha writes:
    June 21st, 2007 at 7:17 am

    பத்மா,
    ஓரளவு தெரியும் என்றாலும், இதையெல்லாம் படித்துவிட்டு என்னுடைய தற்புகழ்ச்சியை தேடிக் கண்டுப் பிடித்து எழுத மனம் வரவில்லை.படிக்க, படிக்க என் தோழி என்ற சொந்தத்தில், மனம் பூரிப்பு அடைகிறது.

  • Voice on Wings writes:
    June 21st, 2007 at 9:46 am

    பத்மா, உங்கள் அழைப்பிற்கு மிகவும் நன்றி. உங்களைப் பற்றி அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. மேன்மேலும் வளர, உயர வாழ்த்துக்கள்.

  • Nirmala writes:
    June 21st, 2007 at 11:36 am

    உங்களுடைய பதிவை வாசித்தேன் பத்மா. அழைப்பிற்கு நன்றி. அவசியம் எழுதறேன்… இந்த மாதிரி யோசிக்க உட்காரும் போது தான் நம்மைப் பற்றி நாமே உயர்வா நினைக்கும் வாய்ப்பு கிடைக்கும், சிறிதாக இருந்த போதிலும்.

    எப்போதும் போல நிறைய ஆச்சர்யப்பட வைத்த சங்கதிகள்… பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  • மலைநாடான் writes:
    June 21st, 2007 at 1:43 pm

    பாராட்டுக்கள் பத்மா!

  • Thangamani writes:
    June 21st, 2007 at 2:39 pm

    பத்மா படிக்கையில் வழக்கம் போல மனம் மகிழ்ச்சி அடைகிறது. இன்னும் பல உயரங்களை நீங்கள் அடைவது நிச்சயம். நன்றி!

  • ILA writes:
    June 21st, 2007 at 6:04 pm

    என்ன சொல்ல, தலை வணங்குகிறேன்

  • sarah writes:
    June 21st, 2007 at 6:08 pm

    //பத்மா படிக்கையில் வழக்கம் போல மனம் மகிழ்ச்சி அடைகிறது. இன்னும் பல உயரங்களை நீங்கள் அடைவது நிச்சயம். நன்றி!

    //

    அதே, அதே பத்மா.

    நன்று.

    சாரா

  • மங்கை writes:
    June 21st, 2007 at 8:32 pm

    ஆஹா…வாழ்த்துக்கள் பத்மா.. என்னையும் அழத்தற்கு நன்றி.. உங்க சாதனையும் எழுதி எங்க சாதனையையும் எழுதவா?
    (மனோரமா ஸ்டைல்)..

    நன்றி பத்மா..இன்னும் பல உயரங்களை அடைய வாழ்த்துக்கள்

  • Kannabiran Ravi Shankar (KRS) writes:
    June 21st, 2007 at 10:14 pm

    பாராட்டுக்கள் பத்மா…
    மேலும் பல பாராட்டுக்கள் பெற வாழ்த்துக்கள்:-)
    உங்கள் அனுபவங்களை ஒரு bench markஆக வைத்துக் கொள்ளலாம் போல் உள்ளதே!

    //ஒரு நவம்பர் 17 காலை 6 மணிக்கே ஆய்வகம் சென்று அன்றைய நாளுக்காக பரிசோதனைகள் தொடங்கி நீண்ட நேரம் வளரக்கூடிய DNA cultur தொடங்கி, அர்விந்த் அலுவகம் சென்றபின் அம்மாவை அழைத்துக்கொண்டு நானே மருத்துவமனையில் முன்பே மருத்துவருடன் பேசி திட்டமிட்டபடி என்னை சேர்ப்பித்து, மாலை அர்விந்த் வரும்வரை, ஒருபக்கம் ஆக்ஸ்டோசின் உள்ளே சென்றுகோண்டிருக்க, உடன் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுடன் நிதி திட்டத்தை முடிக்க பேசிக்கொண்டிருந்து, மாலை 7 மணிக்கு அர்விந்த் அலுவலகத்தில் இருந்து வந்தபின் 8 மணிக்கு பிள்ளை பெற்று//

    அப்படியே கற்பனையில் ஓடவிட்டுப் பார்க்கிறேன்!
    You are differently inspiring, Padma! :-)

  • 8………8…….8…………..8 « கதம்ப மாலை writes:
    June 21st, 2007 at 11:58 pm

    [...] இங்கே பாருங்க மக்கள் எடுத்து விடற எட

  • ரவிசங்கர் writes:
    June 22nd, 2007 at 3:06 am

    உங்க சாதனைகளைப் படிச்சுட்டு, நான் எட்டு போடுற ஆசையை விட்டுட்டேன் !! தாழ்வு மனப்பான்மை உண்டாக்கி விட்டிருவீங்க போல இருக்கே !! ஒரு அமைப்புக்கு எதிரான வெளிப்பாடு என்பதால், உங்கள் முதல் இரு சாதனைகள் மிகவும் மெச்சத்தக்கவை. வாழ்த்துக்கள்

  • பத்மா அர்விந்த் writes:
    June 22nd, 2007 at 5:38 am

    கொத்தனார்
    முதல் (முதன் முதலான)பின்னூட்டம், பாராட்டு, வருகைக்கு நன்றி.

    குமார்: நன்றி.உண்மையான உழைப்புக்கு ஈடானது எதுவும் இல்லை. உங்களின் கட்டுமானத்துறை பதிவுகள் எனக்கு பிடித்தமானவை.
    துளசி: உங்களின் தொடர்ந்த ஊக்கம் எனக்கு பிடித்திருக்கிறது. நன்றி
    சத்தியா: அடிக்கடி வருகை தரவும். நீங்கள் சமீபத்தில் எழுதிய நட்சத்திர பதிவுகள் நான் படித்திருக்கிறேன்.

  • பத்மா அர்விந்த் writes:
    June 22nd, 2007 at 5:43 am

    விஎஸ்கே: நன்றி. தோழர்தான் என்பதில் என்ன ஐயம்? கால் இன்னமும் குணமாகவில்லை. லிகமெண்ட் சற்றே விலகி இருக்க கூடும் என்கிறார்கள். எப்போதாவது வலி அதிகம் இருக்கிறது. நிறைய நடக்கிறேன், தூண்டுதலாக இருக்கட்டுமெ என்று. நாம் பேசிக்கொண்ட படி, உடல் பருமன, செரிமானத்தை பற்றி எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.

    சுந்தர்: சீக்கிரம் எழுதுங்க.எவ்வளவு அழகா எழுத தெரியும் உங்களுக்கு. நாம் நேர்மறையா சிந்திக்கிறது நல்ல பலன் தரும். அதனாலேயே இந்த அழைப்பு(பாலஜி, வெங்கட் இரண்டு பேரும் கூப்பிட்டதோட) பிடித்திருந்து. நிர்மலா சொல்றமாதிரி நம்மை பத்தி நாம நினைக்க வாய்ப்பு இல்லையா?

  • பத்மா அர்விந்த் writes:
    June 22nd, 2007 at 5:45 am

    தருமி: பேராசிர்யர் கிட்ட இருந்தே பாராட்டுன்னா சும்மாவா? ராஜதுரை: உங்களோட பதிவெல்லாம் படிக்கும் போது நானும் இதுபோல பிழைகள் இல்லாமல் எழுத வேண்டும் என்று நினைத்து கொள்வதுண்டு. வார இறுதிக்காக காத்திருக்கிறேன்.
    உஷா: கலைமகள் பரிசுக்கதையை படித்துக்கொண்டிருக்கிறேன்.
    குரல் வடிவம்: எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்

  • Premalatha writes:
    June 22nd, 2007 at 5:46 am

    பாராட்டுக்கள் பத்மா…
    மேலும் பல பாராட்டுக்கள் பெற வாழ்த்துக்கள்:-)

  • பத்மா அர்விந்த் writes:
    June 22nd, 2007 at 5:50 am

    நிர்மலா: வருகைக்கு நன்றி//இந்த மாதிரி யோசிக்க உட்காரும் போது தான் நம்மைப் பற்றி நாமே உயர்வா நினைக்கும் வாய்ப்பு கிடைக்கும், சிறிதாக இருந்த போதிலும்.// இது முக்கியம். ஆராய்ச்சியில் பங்கெடுத்துக்கொண்ட சிலரை இரண்டு குழுவா பிரிச்சு, ஒரு குழுவை அன்னிக்கு நடந்த ந்ல்லாத்தையும் படுக்க போகும் முன் எழுதவும், இன்னொரு குழுவை அன்னிக்கு மகிழ்ச்சியை தந்த ஒன்னை மத்திரம் எழுதவும் சொன்னாங்களாம். மாச கடைசியில மகிழ்வான ஒன்னை எழுதி அந்த நினைவுல தூங்கினவங்க குழு மனசளவில உறசாகம் அதிகமாகி, அநத மாதம் செஞ்ச எல்லா வேலையிலயும் மகிழ்வா செஞ்சு இன்னும் நல்லா செஞ்சாங்களா,. நம்மை பத்தி உயர்வா நாம நினைக்கிறது ஒரு ஊக்க மருந்து. புரிஞ்சுகிட்டதுக்கு நன்றி.(நீங்களும் ஆசிரியை+மன நல வல்லுனர்/என்பதும் தெரியும்- தகவல் சரியா)

  • பத்மா அர்விந்த் writes:
    June 22nd, 2007 at 5:51 am

    மலைநாடன்: பாரட்டுக்களுக்கு நன்ரி
    தங்கமணி: உங்களுடைய தொடர் ஊக்கமும் ஆதரவும் எனக்கு நிறைய மகிழ்ச்சியை தருகிறது.
    இளா: முதல்முதலாக வருகிறீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி

  • பத்மா அர்விந்த் writes:
    June 22nd, 2007 at 5:55 am

    சாரா: நன்றி.
    மங்கை: உங்கள் பதிவீற்காக காத்திருக்கிறேன்

    ரவி: மாம் ஏகம் சரணம் வ்ரஜ அப்படின்னு கண்ணனே சொன்னபிறகு எதுக்கும் கவலைபட முடியுமா? //You are differently inspiring// நல்லவிதமா இருந்தா சரி:)

    கதம்ப மாலையில் தொடுத்ததற்கு நன்றி

  • பத்மா அர்விந்த் writes:
    June 22nd, 2007 at 5:58 am

    பிரேமலதா: பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  • ஜி writes:
    June 22nd, 2007 at 6:05 am

    வாழ்த்துக்கள் பத்மா…

    இது மாதிரி ஏதாவது சாதனைகள் இருந்தால் கண்டிப்பா எட்டுப் போட கூப்பிடலாம். சும்மா ஓரமா நடந்து போய் கொண்டிருந்தவன இழுத்து எட்டு போட சொல்லிட்டாரே இந்த பாபா :( ((

  • விசிட்டர் writes:
    June 22nd, 2007 at 6:23 am

    பத்மா,
    பிரமிப்புடன் என் வாழ்த்துக்கள். தலை வணங்குகிறேன்.
    உங்க 8 எனக்குத் தாழ்வு மனப்பாண்மையை கொடுத்துவிட்டது, போங்க. எப்படிங்க ஒரு சிலர் சாதனையாளர்களாகவும், மற்ற பலர் சாமான்யர்களாகவும் இருக்காங்க?

  • Sridhar Venkat writes:
    June 22nd, 2007 at 6:23 am

    எட்ட முடியாத எட்டு – அப்படி தலைப்பு கொடுத்திருக்கலாம் போல.

    மலைக்க வைத்தது நீங்கள் குழந்தை பெற்றுக் கொண்டு மறு நாளே ஆய்வகம் சென்று பணியை முடித்தது.

    உங்களின் அர்ப்பணிப்பு உணர்வும், போராட்ட குணமும், கற்றுக் கொள்ளும் ஆர்வமும்….ம்…ம்… எல்லாமே வியக்க வைக்கிறது. நீங்கள் சுயசரிதம் எழுதினால் நிச்சயம் இளைய சமுதாயத்தினருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

  • Lakshmi writes:
    June 22nd, 2007 at 6:50 am

    படித்து பிரமித்தேன். அதிலும் #4ல் குறிப்பிட்டிருந்தீர்களே, பெற்றோரின் மகிழ்ச்சி – தன் மகவை(னை) சான்றோன் எனக்கேட்டல், அதுதாங்க நாம செய்யற அதிகபட்ச நன்றிக்கடனா இருக்க முடியும். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

  • பாலாஜி-பாரி writes:
    June 22nd, 2007 at 7:34 am

    மிகவும் அருமை பத்மா!!
    நீங்கள் மேன்மேலும் பற்பல சிகரங்களை தொட வாழ்த்துக்கள்.
    அன்புடன்
    பாலாஜி-பாரி

  • பத்மா அர்விந்த் writes:
    June 22nd, 2007 at 10:01 am

    விசிட்டர், ஜி, ஸ்ரீதர் வெங்கட், லஷ்மி, பாலாஜி:
    பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
    ஸ்ரீதர்: இது ஒன்னும் கஷ்டமில்லை, அதுவும் மருத்துவமனையும் ஆய்வகமும் பக்கத்து கட்டிடம் என்பதாலும், நர்சரியில் குழந்தையை கவனித்துக்கொள்ள செவிலிகள் இருப்பதாலும். முன்பெல்லாம் ஆய்வகங்களில் எல்லாமே போட்டிதான். survival மிகவும் கஷ்டமானது, அதிலும் கார்னெலில் ஒரே திட்டத்தை இரண்டு மாணவர்களுக்கு வழங்கும் நிலை கூட உண்டு.

  • Dubukku writes:
    June 22nd, 2007 at 11:00 am

    மேடம் நல்லா நியாபகம் வெச்சிக்கோங்க…எனக்கு உங்கள தெரியும் உங்களுக்கும் என்னத் தெரியும்…இத மட்டும் மறந்திராதீங்க…

    ஹூம்…என்ன அவங்களுக்குத் தெரியும்ன்னு இனிமே மத்தவங்க கிட்ட சொல்லிப்பேன்…

  • Vassan writes:
    June 22nd, 2007 at 11:31 am

    உழைத்து – சாதித்ததைப் பற்றி நீங்கள் எழுதியுள்ளது, படிப்பதற்கு நிறைவாக உள்ளது. வாழ்த்துகள். அவையடக்கம் என்றெல்லாம் நினைத்து,சுருக்கமாகச் சொல்லியுள்ளீர்களோ என்றொரு ஐயம் !

    நன்றி நல்லதொரு பதிவை பதிந்தமைக்கு.

  • arul writes:
    June 22nd, 2007 at 12:05 pm

    படிக்கப் படிக்க உற்சாகமூட்டும் பதிவு. மேன்மேலும் வளர்க.
    அருள்

  • Surveysan writes:
    June 22nd, 2007 at 12:15 pm

    மேடம்,

    அருமையான சாதனைகள். அடேங்கப்பா.
    இவ்வளவு பண்ணியிருக்கீங்களா?

    HATS OFFFFFFFFFF!!!!!

    பி.கு: என் எட்டும் கிட்டத்தட்ட உங்கள் எட்டை போன்றுதான், சாதனைகள் நிறைந்தது. வந்து பாருங்க.

    நன்றி!
    சர்வேசன்

  • ஜெயஸ்ரீ writes:
    June 22nd, 2007 at 9:56 pm

    இதில் சில சாதனைகள் உங்கள் பழைய பதிவுகள் மூலமாகத் தெரிந்தவை என்றாலும் பதிவைப் படித்தபின் மலைத்துப் போய்விட்டேன்.

    வாழ்த்துக்கள் பத்மா. வேறென்ன சொல்வது என்று தெரியவில்லை :)

  • Premalatha writes:
    June 23rd, 2007 at 2:14 am

    பத்மா,

    உங்களைப்பற்றி ஏற்கனவே ஓவரால் ஐடியா தெரியுமாதலால் அதிக ஆச்சரியப் படவில்லை நான்.

    //7 மணிக்கு அர்விந்த் அலுவலகத்தில் இருந்து வந்தபின் 8 மணிக்கு பிள்ளை பெற்று, மறு நாள் காலையில் 5 மணிக்கெல்லாம் அர்விந்த அலுவகம் சென்றுவிட, நான் 6 மணிக்கு ஆய்வகம் சென்று முடித்ததும், நிதி திட்டத்தை நேரத்திற்கு அனுப்பியதும் நிறைவான ஒரு விஷயம். //

    என்ற விசயம் மட்டும் இந்தமுறை additional informationஆக மனதில் தங்கியது.

    படித்து முடித்ததும் என்ன எழுதுவதென்று வந்த பற்பல குழப்பங்களில் வாழ்த்துக்கள் மட்டும் சொல்லிவிட்டுப் போய்விட்டேன்.

    பொறாமையாக இருக்கிறதென்றால் தவறாகப் புரிந்துகொள்ள மாட்டீர்களே. :-)

  • சிவா writes:
    June 23rd, 2007 at 2:34 am

    மிகவும் அருமை. தங்களின் scholastic,moral மற்றும் எண்ணங்களின் நீள அகலங்களை நினைத்து மிகவும் பெருமிதமாக இருக்கிறது.

    //மேலாண்மை(நிர்வாகவியல்)யும், பொதுநலமும் – series 7, 65, 66 என்று சான்றிதழ்கள் பெற்று ஸ்டாக் புரோக்கர் லைசென்ஸ் – health education specialist – corporate law…. //

    நினைத்துப்பார்க்கவே மலைப்பாக இருக்கிறது. சாதித்த உங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

  • Premalatha writes:
    June 23rd, 2007 at 2:55 am

    பத்மா,

    உங்களைப்பற்றி ஏற்கனவே ஓவரால் ஐடியா தெரியுமாதலால் அதிக ஆச்சரியப் படவில்லை நான்.

    படித்து முடித்ததும் என்ன எழுதுவதென்று வந்த பற்பல குழப்பங்களில் வாழ்த்துக்கள் மட்டும் சொல்லிவிட்டுப் போய்விட்டேன்.

    மொத்தத்தில் பொறாமையாக இருக்கிறதென்றால் தவறாகப் புரிந்துகொள்ள மாட்டீர்களே. :-)

  • பத்மா அர்விந்த் writes:
    June 23rd, 2007 at 6:50 am

    சிவா: நன்றி. அருள்: ஊக்கத்திற்கு நன்றி. ஜெயஸ்ரீ: வருகைக்கும் தொடர்ந்து தரும் உற்சாகத்திற்கும் நன்றி.

    பிரேமலதா: நான் கருவுற்றிருந்த காலத்தில் நிறைய பிரச்சினைகள் இருந்தது. அதனாலேயே செயற்கையாக வலி வரவழைத்தோம். ஆனாலும் முடிவில் பிரச்சினையில்லாமல் போகவே, பக்கத்து கட்டிடம் சென்ரு வேலைகளை முடிக்க முடிந்தது. இன்னமும் என் பேராசிரியர் அதை நினைவுகூர்ந்து சொல்வது வழக்கம்.
    சர்வேசன்: நன்றி.

  • ஜெஸிலா writes:
    June 23rd, 2007 at 8:48 am

    ஒவ்வொருத்தருக்குள்ளேயும் எவ்வளவு பிரம்மிக்க வைக்கும் திறமைகள். படிக்கவே பெருமிதமாக இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் இந்த பதிவை படிக்க வேண்டும். இப்படிப்பட்டவர்கள் வலையில் உலா வருவதே பெரிய விஷயம்தான். கருவாச்சி காவியத்தில் வரும் தமிழச்சியாக குழந்தை பெற்றெடுத்த மறுநாளே ஆய்வுக் கூடத்திற்கு சென்றது. வாழ்த்துகள். மேலும் பல உயரங்கள் அடைய பிராத்தனைகள்.

  • பாலராஜன்கீதா writes:
    June 23rd, 2007 at 11:46 pm

    //சில பதிவுகள் படிக்கும் போது நிறைவும், சில சுவையாகவும் சில சிந்திக்க தூண்டுவதாகவும் இருப்பதுண்டு. //

    நாங்கள் எழுதவேண்டிய பின்னூட்டத்தை நீங்களே பதிவில் எழுதக்கூடாது. :-)

    இன்னும் பல சிகரங்களை அடைய வாழ்த்துகள்.

  • பத்மா அர்விந்த் writes:
    June 24th, 2007 at 10:54 am

    ஜெயஸ்ரீ
    தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி. முன்பே எழுதியது தவிர்த்து எழுதலாம் என்றால் ரொம்ப தனிப்பட்டதாக போய்விடு. உங்களோட பின்னூட்டம் ஸ்பாமில் மாட்டிக்கொண்டுவிட்டது. மன்னிக்கவும்.
    கீதா: பின்னூட்டம் எப்போ எப்படி வரும்னு தெரியாததாலே நானே எழுதிட்டேன்:)) இதன் முதல் வருகைன்னு நினைக்கிறேன். நன்றி

  • Murali writes:
    June 27th, 2007 at 1:43 pm

    Hello Padma

    Hats off to you. I have been a regular reader of your blog and amazed at your achievements. I wish I can express myself better in tamil..

    Wish you all the best for your leg to heal faster.

    Keep up your writing further. I very much appreciate it.

    PS: I understand you are in NJ. correct? I will be visiting NJ in July second week. Can you email me your ph.# so that we could talk and possibily meet if you dont mind?

    Murali
    muldri at yahoo dot com

  • Aruna Srinivasan writes:
    July 1st, 2007 at 12:52 pm

    பத்மா, 8 போட்டாச்சு :-) அழைப்புக்கு மிக்க நன்றி.

  • Mp Sundar writes:
    July 3rd, 2007 at 2:03 pm

    Well Done .

  • வலைச்சரம் நாருக்கு மேலும் அழகூட்டும் மலர்கள் « writes:
    August 15th, 2007 at 1:19 pm

    [...] கட்டுரைகளை எழுதியுள்ள பத்மாவின் தேன்துளி கண்டிப்பாக அனைவரும் படிக்கவேண்டிய [...]


Leave a Reply

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions