»
S
I
D
E
B
A
R
«
குழந்தைகளுக்கு அறிவுரை கூறும் வழிமுறைகள்
September 5th, 2006 by பத்மா அர்விந்த்

குழந்தைகள் இரண்டு வயது முதற்கொண்டு நாம் சொல்வதை புரிந்து கொள்ளவும் சிந்திக்கவும் ஆரம்பிக்கிறது. அழுகின்ற போதெல்லாம் அம்மாவின் கவனிப்பு கிடைக்கும் என தெரிந்தால் கீழே விட்டவுடனே அழும். அழட்டும் என்று சில நிமிடங்கள் விட்டு விட்டால், அழுகையை நிறுத்திவிட்டு தான்பாட்டுக்கு விளையாட ஆரம்பித்துவிடும். அதேபோல குழந்தைக் காப்பகங்களில் விடும் போது அழும் குழந்தை நீங்கள் நகர்ந்ததும் விளையாடி மகிழ்ச்சி அடையும்.

குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் நேரடியாக பலன்களை சொல்ல வேண்டும். உதாரணமாய் வேலை செய்ய விடாமல் தொணதொணக்கும் குழந்தையிடம், அம்மா வேலை முடிக்கும்வரை அமைதியாய் இருந்தால் நாம் இருவரும் 1 மணி விளையாடலாம். இப்படி பண்ணினால் வேலையும் முடியாது, விளையாடவும் முடியாது என்று சொல்லி பாருங்கள். இரண்டு குழந்தைகள் இருக்கும் போது, எல்லா அன்பும் தனது தம்பி/தங்கைக்கே கிடைக்கிறது என்று உணரும் குழந்தை, தனது தம்பியை தொல்லை படுத்த ஆரம்பிக்கிறான்/ள். அப்போது தொடாதே என்று நீங்கள் கூறினால் அது நேர்மறையான வினையை துவக்குகிறது. கடிந்து கொண்டாலும் கவனிப்பு கிடைப்பதால் அதை மேலும் மேலும் செய்ய, உங்கள் கோபம் அதிகமாகி அடித்து வருத்தத்தை விளைவிக்கிறீர்கள். இதற்கு மாறாக, தங்கை/தம்பி பிறக்கும் முன்னேயே மூத்த குழந்தையையும் ஈடுபடுத்தினால், அதன் பின்னும் துணைக்கு அழைத்து பேசினால் அன்பும் வளரும், மனமும் அமைதியுறும்.

பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தானாகவே வீட்டு பாடம் செய்ய, நேரத்தில் கிளம்ப, முந்தைய இரவே எல்லாவற்றையும் எடுத்துவைத்துக் கொள்ளும் போது மனநிலையை பாதிக்காது என்பதை சொல்லி பழக்கப்படுத்த வேண்டும். சின்ன சின்ன கைவேலைகளும் செய்து பழக்க வேண்டும். தனது துணிமணிகளை மடித்து வைத்தல், தனது அறையை சுத்தம் செய்தல், சமையலறையை தூசி துடைத்தல் போன்று வயதுக்கு ஏற்ற வேலைகள்பெண், ஆண் என்று இருபாலாருக்கும் நாம் வேலை செய்யும் போது கூடவே செய்யச் சொன்னால் பின்னாளில் எந்த வேலையையும் செய்ய முடியும். தன்னைவிட சிறிய குழந்தைகளுக்கு உதவி செய்தல், பணிவாக இருத்தல், பெரியோரிடம் அன்புடன் இருத்தல் போன்றவை எந்த வயதுக்கும் ஏற்ற கல்வியே ஆகும்.

சமீபத்தில் என் சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தோம். அப்போது அவளுடைய 3 வயது மகன் திடீரென வந்து, mommy, I am upset, என்றவுடன் என்ன விஷயம் என்று விசாரித்து பார்த்ததில் இன்னொரு குழந்தை தன்னுடைய விளையாட்டு பொம்மையை மற்ற குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ள மறுக்கிறான் என்றான். வயதென்னவோ 3தான். ஆனாலும் நினைத்தை கோர்வையாக, வருந்துகிறேன் என்பதையும் எதனால் வருந்துகிறேன் என்பதையும் சொல்ல அறிந்திருக்கிறது. இந்த பழக்கம் இல்லாமல் போனால், பின்னாளில் அலுவலகக் கோபத்தை அடுத்தவரிடம் காண்பிக்கும் பழக்கம் வரும். கோபம் கொள்வதில் தவறே இல்லை, அதை சரியாக சொல்லவும் செய்யவும் கற்றுத்தர வேண்டும். மனநிலை பயிற்சியாளர்கள் குழந்தைகள் வருந்தும் போது அதை ஒரு காகிதத்தில் எழுதவோ, படம் வரையவோ அல்லது க்ரேயானால் கிறுக்கவோ சொல்கிறார்கள். இது அவர்களுடைய மனநிலையை அறிய உதவும்.

இரண்டு வருடம் முன்பு என் மகனின் பள்ளியில் ஒரு சிறுவன் கையில் மீனுடன் இவனை துரத்த, மீன் வாசம் பிடிக்காத என் மகன் கத்திக்கொண்டே ஒடியிருக்கிறான். அவனின் பயம் ஒரு விளையாட்டாக மாற, அந்த சிறுவன் இன்னும் துரத்தியிருக்கிறான். பள்ளி கவுன்சிலர் இருவரையும் அழைத்து இதை எவ்வாறு தடுத்திருக்கலாம் என்பதை இருவரையும் யோசிக்க சொல்லியிருக்கிறார். என் மகன் அவனிடம் தெளிவாக மீன் எனக்கு பிடிக்காது, ஆகையால் எனக்கு வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம் என்று எழுதித்தர, அந்த மாணவன் தான் செய்தது தவறு, ஏன் தவறு என்பதையும், அடுத்தவரின் உணர்ச்சிகளை, விருப்பு வெறுப்புகளை புரிந்து கொள்ளல் வேண்டும் என்றும் உணர்ந்து எழுதித்தந்து மன்னிப்பு கேட்டுக்கொள்ள இருவரும் கைகுலுக்கி நண்பர்களாக பிரிந்தனர். இன்னமும் என் மகன் அதை சொல்வது உண்டு. சரி தவறு என்பதை நாமே சொல்வதைவிட, அவர்களை சிந்திக்க சொல்லி ஒரு காகிதத்தில் எழுதவும் சொல்லிப்பாருங்கள். பிறகு உங்கள் கருத்தை சொன்னால் மனதில் நன்கு படியும்.

திடீரென்று பேசாமல் அமைதியாகும் பதின்ம வயதினரை அவர்கள் உணர்வை மதிக்கவும் பழக வேண்டும். பள்ளியில் உள்ள சக வயதினருடன் ஏதேனும் மனத்தாங்கல்கள் வந்திருக்கலாம், இல்லையெனில் தன் தோற்றம் பற்றிய கருத்தும் கவலையும் வந்திருக்கலாம். பெற்றோரிடம் சொன்னால் தவறாக நினைப்பார்களோ என்ற ஏக்கத்தால் பேசாமல் இருக்கலாம். குழந்தைகள் சொல்வதை கவனமாககேட்பதே முதல் படியாகும். எங்கள் காலத்தில் என்று ஆரம்பித்து கதை சொல்லாமல் அவனுடைய உணர்வுகளை அறிந்து அதற்கேற்றார்போல அரவணைத்து நடக்க வேண்டும்.

சின்ன வயதில் மனதில் வரும் குழப்பமும், காயமும் பின்னாளில் பலத்த விளைவுகளை ஏற்படுத்தும். சக மாணவனுக்கு உடல் நிலை குறைவு என்றாலும் அளவுக்கு மீறி வருந்துகிற குழந்தைகள் உண்டு. பதின்ம வயதினருடன் வாழ்க்கையை மகிழ்ச்சியாய் கழிப்பதுபற்றி நிறைய கையேடுகள் உண்டு. (How to Enjoy Life with a Preadolescent HELP) என்ற கையேடில் பல அற்புதமான நடைமுறைக்கு உட்பட்ட கருத்துக்கள் உண்டு. இவை peer pressure போன்றவையை சமாளிக்கும் வழிகள் பற்றியும் சொல்கின்றன. குழந்தைகளை குழந்தைகளாகவே இருக்க விடுங்கள்.


19 Responses  
  • karthikramas writes:
    September 5th, 2006 at 11:25 am

    பத்மா,
    நல்ல பதிவு.

    //வயதென்னவோ 3தான். ஆனாலும் நினைத்தை கோர்வையாக, வருந்துகிறேன் என்பதையும் எதனால் வருந்துகிறேன் என்பதையும் சொல்ல அறிந்திருக்கிறது.//

    பல நேரங்களில் குழந்தைகள் நினைப்பதைச் சொல்லமுடியாமல்தான் பிரச்சினைகள் பெரிசாகின்ற‌ன.

  • செல்வராஜ் writes:
    September 6th, 2006 at 8:39 am

    பத்மா, நல்ல பதிவு. ஆனால், இந்தத் தலைப்பிற்கு ஒரு பதிவெல்லாம் பற்றாது என்பது போல் தோன்றுகிறது. :-) நீங்கள் விரிவாக எழுதியிருந்தாலும், ஒரு சுருக்கம் போலத் தான் தோன்றுகிறது.

  • பத்மா அர்விந்த் writes:
    September 6th, 2006 at 8:58 am

    நன்றி கார்த்திக், செல்வராஜ். இன்னும் பல பதிவுகள் தொடர்ச்சியாக வர இருக்கின்றன. அது வாசகர்களுக்கு எச்சரிக்கையா அல்லது எதிர்பார்ப்பா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும்.

  • ராம்கி writes:
    September 6th, 2006 at 9:31 am

    தற்செயலாக இன்று உங்கள் பதிவுக்கு வந்தேன். மீண்டும் பதிவுகளில் முழுவீச்சுடன் இயங்குகிறீர்கள் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி. பணி தொடர வாழ்த்துக்கள்.

  • உதயச்செல்வி writes:
    September 6th, 2006 at 9:36 am

    ஆம் பத்மா! இந்த முறைகளை நானும் என் குழந்தைகளிடம் முயன்றிருக்கிறேன்.எதையாவது கேட்டு அழும்போது பேசத்தெரியாத குழந்தையாய் இருந்த போதுதான் அழுகை ஒரு மொழியாக இருந்து அவர்கள் உணர்வுகளை பெரியவர்களுக்கு உணர்த்த பயன்பட்டது. இப்போதுதான் பேசத்தெரியுமே1 நீங்கள் சொல்லியே எங்களுக்கு புரிய வைக்கலாம்.அழுகையை நிறுத்தி என்னவென்று சொன்னால்தான் நீங்கள் பெரியவர்களாகி விட்டதாக அர்த்த்ம் என்று சொன்னால்…அழுகையும் நின்றுவிடும்!சொல்லிவிட முயலும் ( தாங்கள் பெரியவர்களாக அங்கீகரிக்கப்பட) அவர்கள் முயற்சி சுவரசியமானதாக இருக்கும் பல பொழுதுகளில்!!

    நல்ல பதிவு!

  • நிர்மல் writes:
    September 6th, 2006 at 10:43 am

    உபயோகமான விஷயங்கள்.

    நன்றி

    உதயச்செல்வி கூறும் முறையை ஊரில் பயன்படுத்தி பார்த்திருக்கிறேன்.

  • சுந்தரவடிவேல் writes:
    September 6th, 2006 at 3:33 pm

    பத்மா, தேவையான பதிவு.
    என் மகனுக்கு அறிவுரையும் க்ராஃபிக்கலாக இருக்க வேண்டும். பல் விளக்கலாம் என்று கூப்பிடும்போது கொஞ்சம் சுணங்கினால், “இந்த பேஸ்ட்டை மட்டும் பாத்தா, பல்லுக்குள்ள இருக்க பூச்சியெல்லாம் எடுக்கூம் பாரு ஓட்டம்” அப்படின்னு ஆரம்பிச்சு ஒலியும் ஒளியுமா எதாச்சும் கதை விட்டா போதும். சிரிப்போட வேலை தன்னால நடக்கும்!
    நமக்கு இப்படிச் செய்பவர்களைப் பிடிக்கும்/பிடிக்காது என்பதை மெல்லச் சொல்லிவிட்டால் நம் அன்புக்குப் பாத்திரமாவதற்காகவே நமக்குப் பிடிக்கின்ற காரியத்தைத்தான் செய்ய விரும்புவார்கள் என்று தங்கமணி கூறுவான். இந்த வழிமுறைகளையெல்லாம் தாண்டி, ஒவ்வொரு பிள்ளையும் ஒவ்வொரு மாதிரி, சிலருக்குச் சிலது வேலை செய்யும், சிலருக்கு வேலை செய்யாது. அவர்களிடமிருந்து இவற்றைக் கற்றுக்கொண்டுதான் நம் வழிமுறைகளைத் தயாரிக்க வேண்டும் :)

  • selvanayaki writes:
    September 8th, 2006 at 2:58 am

    பயனுள்ள தகவல்கள். நன்றி பத்மா.

    ////ஒவ்வொரு பிள்ளையும் ஒவ்வொரு மாதிரி, சிலருக்குச் சிலது வேலை செய்யும், சிலருக்கு வேலை செய்யாது. அவர்களிடமிருந்து இவற்றைக் கற்றுக்கொண்டுதான் நம் வழிமுறைகளைத் தயாரிக்க வேண்டும் /////

    இதுதான் மிகப் பெரிய வேலை

  • selvanayaki writes:
    September 8th, 2006 at 3:02 am

    உதயா,

    தோழியரில் உங்களை அடிக்கடி சந்திக்க முடிந்தது. இப்போது நீண்ட இடைவெளிக்குப்பின் உங்களின் பின்னூட்டங்களைப் பார்ப்பது மகிழ்ச்சி.

  • பத்மா அர்விந்த் writes:
    September 8th, 2006 at 11:28 am

    ராம்கி, வாழ்த்துக்களுக்கும் தொடர்ந்த ஆதரவுக்கும் நன்றிகள்.
    உதயா: உங்களுடைய பதிவுகள் என் நினைவுக்கு வருகிறது. நலமா? நீங்கள் பதிய ஆரம்பித்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.
    நன்றி செல்வநாயகி: குழந்தைகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
    சுந்தர்: ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மாதிரி இருப்பதால்தான் சுவாரஸ்யமாக இருக்கிறது.நம்முடைய எதிர்பார்ப்புகளை திணிப்பதும் பல முரண்டு பிடித்தல்களுக்கு வழிவகுக்கும்.
    வருகைக்கு நன்றி நிர்மல்.

  • Jayashree writes:
    September 8th, 2006 at 5:40 pm

    நல்ல பயனுள்ள பதிவு பத்மா. மற்ற பகுதிகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  • வயிரவன் writes:
    September 9th, 2006 at 6:55 pm

    பயனுள்ள பதிவு. பதின்ம வயதுப் பிள்ளைகளிடம் பல நேரங்களில் வாயைத்திறந்து ஒன்றுமே சொல்ல முடிவதில்லை. ‘வாயை மூடு’ என்று வாயை அடைத்து விடுகிறார்கள். பல உபாயங்களைக் கடைபிடிக்க வேண்டியிருக்கிறது. – வயிரவன்

  • SP.VR.SUBBIAH writes:
    September 10th, 2006 at 2:37 pm

    நல்ல பதிவு அம்மணி!
    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!
    SP.VR.SUBBIAH

  • ரேவதிநரசிம்ஹன் writes:
    September 10th, 2006 at 10:22 pm

    இதை அப்படியே என் பேரனுக்குப் படித்துக் காட்ட ஆசையாய் இருக்கிறது.
    அவனுக்கும் தம்பி வரப்போகிறான்.

    மிக நல்ல முயற்சி எடுத்துக்கொள்ளுகிறார்கள்.
    8 வயது வித்தியாசம்.

    நல்ல அறிவுரைகள் வலையில் பதிகிறீர்கள்.
    நன்றி பத்மா.

  • யாத்திரீகன் writes:
    September 11th, 2006 at 1:53 am

    பத்மா.. மிகவும் பயனுள்ள.. நன்றி

    சுந்தர் மற்றும் உதயா குறிப்பிடிருக்கும் வழிமுறைகளும் சுவாரசியமானவையாக இருக்கின்றது.. :-)

  • பத்மா அர்விந்த் writes:
    September 11th, 2006 at 5:44 am

    சுப்பைய்யா அவர்களுக்கும் வயிரவன் அவர்களுக்கும் என் நன்றீகள். ரேவதி: இப்போது பேரன் வளர்ப்பில் பங்கு கொள்ளும் நீங்கள் இன்னும் சிறந்த அனுபவத்தை பெற்றிருப்பீர்கள். எழுதுங்களேன். உங்கள் ஆல்ய பயணக்கட்டுரைகள் நன்றாக இருக்கின்றன.
    நன்றி யாத்திரீகன அவர்களே.

  • T.T. Mayuran writes:
    March 4th, 2007 at 12:07 am

    Dear Pathma,
    It is so help full for people like us who are working with children. Please try to post more about children
    Nanri

  • dharumi writes:
    March 13th, 2007 at 5:44 am

    பிள்ளைகளுக்கு அனுப்பிட வேண்டியதுதான்.

  • Arthi writes:
    March 14th, 2007 at 8:02 am

    Hi, Useful blog. But when i went half way through, i realised the incident mentioned would have been taken place in US and not in India. ‘The 2 guys fought incident’ – i thought in our place (India) they will call and make them to stand in front of HM office for atleast 1 hour as punishment. After reading the whole, i confirmed, as it was written by ‘padma’ who is here in US.
    Arthi


Leave a Reply

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions