»
S
I
D
E
B
A
R
«
அறிவுரைகள் சொல்லும் வழிகள்
August 28th, 2006 by பத்மா அர்விந்த்

சொல்லுதல் யாவர்க்கும் எ ளிய- அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்

என்பது போல நாள் தோறும் நமக்கு கிடைக்கும் அறிவுரைகளுக்கு பஞ்சமே இல்லை. தொட்டதெற்கெல்லாம் வீட்டில், அலுவலகத்தில், நண்பர்களிடத்தில் என்று எல்லோரும் எல்லாவற்றிலும் தங்கள் கருத்தை, அறிவுரையைச் சொல்வதை நீங்கள் கூட அனுபவப்பட்டிருப்பீர்கள். பெரும்பாலான சமயம் நாம் பதின்ம வயதினரை போல நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு என்பது போல நடந்து கொள்கிறோம். அதே அறிவுறை தொடர்ந்து வருமென்றால், ஒருவித கோபத்திற்கு உள்ளாகி மனத்தாங்கல்கள் வருகின்றன. இதற்கு மேலும் என் அறிவுரையை நீ கேட்காவிட்டால், உன்னுடன் பேசுவதில்லை என்பது போல கணவன் மனைவியிடத்து, பெற்றோர்கள் பிள்ளையிடத்து கட்டளைகள் போடும் இடத்தில் இது இன்னும் அடங்காத மனதின் வடிகாலாய், “நான் செய்தே தீருவேன் அதை கேட்க நீ யார்” என்று ஈகோ சண்டையில் போய் முடியும். இதற்காக நாம் அக்கறைபடுபவரிடத்து அறிவுரை கூறக் கூடாது என்றில்லை, அதை ஒரு வித பக்குவத்தோடு சொல்ல வேண்டும் என்கிறார் நியுஜெர்ஸி மருத்துவ, பல் விஞ்ஞான பல்கலை கழக பேராசிரியரும், மன நிலை மருத்துவருமான Dr.Pat Clifford.

உடல் நல பழக்க வழக்கங்களில் உடல் பயிற்சி, நல்ல உணவு உண்ணுதல் போன்றவற்றில் அறிவுறை கூறுதலும் அதை பயன் படுத்துவதும் எளிது. ஆனால் குடிப்பது, தொலை காட்சி பார்ப்பது, வீடியோ விளையாட்டு விளையாடுவது, புகைப்பது போன்றவைகளில் இது மிகவும் கடினம். இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண் வீட்டிற்கு, குழந்தை வளர்ப்பை பற்றி எடுத்து சொல்ல சென்ற செவிலித்தாயிடம் அந்த பெண் மிகவும் கடுமையாக நடந்து கொள்வதாக கேள்விப் பட்டு விசாரித்ததில், அளவுக்கதிகமான அறிவுறைகள் கேட்டு கேட்டு அந்த பெண்ணுக்கு தான் செய்வது எதுவுமே சரியில்லையோ என்ற தாழ்வு மனப்பான்மை வளர்ந்துவிட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில், அந்த செவிலி பெண்ணிடம் கடுமையாக நடக்க இதுவே காரணமாகிவிட்டது. புதிதாக வீட்டிற்கு வந்த மருமகளிடம் மாமியார் அறிவுரை கூற போக, எனக்கென்ன ஒன்றுமே தெரியாதா என்ன என்று மருமகள் மனதில் நினைக்க அதுவே பின்னாளில் பிரச்சினையாக உருவெடுக்கிறது.

அறிவுரை கூறுவது இரண்டு பிரிவுகள் உண்டு.

ஒன்று ஒரு செயலை பற்றிய செய்திகளை மட்டுமே கூறுவது (informative)

உதாரணமாக புகை பிடிப்பதால் வரும் தீமைகள் அதன் விளைவுகள் இதைப் பற்றிய செய்திகளை மட்டுமே சொல்வது. எதிரிலிருக்கும் புகை படிப்பவரின் செயல்களைப் பற்றி சிறிதும் அதில் சேர்க்காமல். இந்த நடைமுறை குடிப்பவர், புகை பிடிப்பவர், AIDS நோய் உள்ளவர் ஆகியோரிடத்து கடைபிடிக்க வேண்டிய முறை ஆகும். ஏனெனில் சம்பந்த பட்டவரின் நடவடிக்கையை இதில் சேர்த்து குழப்பினோமென்றால், என் விருப்பத்தை குறை கூற நீயும் சேர்ந்து கொண்டாயா என்ற தன்னிரக்கமே மிகும். இங்கே நோயாளியிடம் அறிவுரை கூறுபவர் அந்த துறையில் மிகுந்த தேர்ச்சி பெற்றவராக, ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ளும் ஒரே நோக்கம்தான் இருக்க வேண்டும். இந்த முறையில் பழக்கம் எந்தவகை தீமைகளை தரும் என்பதையும் சொல்லி மனதில் பயத்தை விளைவிக்கவும் செய்யலாம்.

மற்றொரு முறையில், அறிவுரை கூறுபவர் ஊக்கம் ஊட்டுபவராகவும் இருத்தல் அவசியம். (persuasive)

ஒரு 55 வயது நீரிழிவு நோய் உள்ளவரிடம் மருத்துவர் அவர் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும், இனிப்புகளை சேர்க்க கூடாது, தினமும் தன்னுடைய சர்க்கரை அளவை பரிசோதிக்க வேண்டும் என்று எத்தனை முறை சொல்லியும் பயனில்லாமல் போனது. மருத்துவர் ஒரு உடல் நல படிப்பாளியை அணுக அவரால் நோயாளியின் நடவடிக்கைகளை மாற்ற முடிந்தது. இது எப்படி சாத்தியமானது என்பதற்கு கீழ்க்கண்ட உரையாடலை கவனியுங்கள்:

Health Educator : உங்களுக்கு உலகிலேயே அதிக மகிழ்ச்சியை தரும் ஒன்றை மட்டும் கூறுங்கள்.

நோயாளி: சந்தோஷமாக இருக்க வேண்டும்

Health Educator: உங்களுக்கு எது சந்தோஷம் தரும்

நோயாளி: அலுவலக பணி உயர்வு, பிள்ளைகளுடன் விளையாடுவது, வீட்டில் மனைவியின் உடல் நலம், அமைதி

Health Educator: உங்கள் பிள்ளையுடன் விளையாடுவதுண்டா

நோயாளி: நேரம் கிடைக்கும் போதெல்லாம் விளையாடுவேன். இப்போதெல்லாம் அவனுக்கு ஈடு கொடுக்க என்னால் முடிவதில்லை. தளர்ச்சி அடைந்துவிடுகிறேன்

Health Educator: எனக்கும் ஒரு மகன் உண்டு. அவன் மனதிற்கு மகிழ்ச்சி தரும் படிப்பு படித்து நல்ல நிலையில் இருப்பதைக்காண எனக்கு மிகவும் ஆசை. உங்களுக்கும் அப்படிப்பட்ட கனவுகள் உண்டுதானே ?

நோயாளி: என்னுடைய மகன் கல்லூரியில் படித்து முடித்து நல்ல நிலையில் வாழ்வதை பார்த்தல் (குழந்தைகள் உள்ள பெரும்பான்மையான பெற்றோர் தரும் கருத்து) என்னுடைய ஒரே கனவு. கடவுள் புன்ணியத்தில் எனக்கு கிடைக்காத வாய்ப்புக்கள் அவனுக்கு கிடைக்குமாயின் அதை அடைவதில் அவனுக்கு உறுதுணையாக இருக்கவும் முயற்சி செய்வேன்.

Health Educator: உங்கள் பிள்ளை கல்லூரிக்கு செல்லும் வரை நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள் என்றும் அதற்கான செயல்களை செய்வீர்கள் என்றும் நம்புகிறேன்.

நோயாளி: ஆமாம். எனக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் அவன் மிக கஷ்டப்படுவான். நீங்கள் சொல்வது சரி. ஒரு பெற்றோரால்தான் அடுத்தவர் மனத்தை புரிந்து கொள்ள முடியும். எனக்கென்ன பொறுப்பில்லையா.

Health Educator: அப்படி யார் சொன்னது. உங்களுக்கு பொறுப்பில்லாமல் இருக்குமா என்ன? (மீண்டும் ஒருமுறை) உங்கள் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ளுங்கள். எதனால் தளர்ச்சி வருகிறது? அலுவலகத்தில் வேலை அதிகமோ?

நோயாளி: இல்லை, எனக்கு நீரிழிவு நோய் ஆரம்ப நிலையில் உள்ளது. அது சில சமயம் அளவிற்கதிகமாக போய்விடுகிறது அதனால் தான் இருக்கும். தினமும் சர்க்கரை அளவை சரிபார்க்க நினைக்கிறேன் முடியவில்லை. மறந்து போய் விடுகிறது. பிறகு என் மனைவியடமும் மருத்துவரிடமும் பேச்சு கேட்க வேண்டியிருக்கிறது.

Health Educator: இப்படித்தான் என்னுடைய நண்பர் ஒருவர் சொல்வார். சர்க்கரை அதிகமாகி, கோமா வந்துவிட்டால் அவருடைய பிள்ளையல்லவா கஷ்டப்படும். அதனால், காலையில் பல் விளக்கியவுடன் குளியலறையிலேயே சரி பார்த்துவிடுகிறார். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். சரி, எனக்கு நேரமாகிறது. உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் எனக்கு தொலை பேசுங்கள்.

இம்முறையில், நோயின் தீவிரம் மட்டுமே பேசப்படுவதில்லை. ஆனால் அதே சமயம் அதன் விளைவுகள், எது சந்தோஷம் என்பது போல சில விஷயங்கள் நோயாளிக்கு புரிய வைக்கப்பட்டது. சர்க்கரை சரிபார்க்க எளிய முறையும் போதிக்கப் பட்டது என்பதையும் கவனித்து கொள்ளுங்கள். பல் விளக்குவது போல சர்க்கரை அளவை சரிபார்ப்பது ஒரு நித்திய பழக்கத்தில் கொண்டு வரப்பட்டது. இங்கே அறிவுரை சொல்லப்பட்டபோதும் அது நோயாளியின் முடிவாகவே திரித்து சொல்லப் பட்டது.


17 Responses  
  • துளசி கோபால் writes:
    August 28th, 2006 at 6:38 pm

    பத்மா,

    இதுதான் ‘ஆடிக் கறக்க மாட்டை ஆடிக் கற. பாடிக் கறக்க மாட்டைப் பாடிக் கற’ன்னு
    சொல்லி வச்சுருக்காங்க போல.
    எப்பவுமே இதமாச் சொன்னாத்தான் எடுபடும். அதயே பதமாவும் சொல்லணும்,இல்லையா?

    ( அறிவுறை- அறிவுரை)

  • பத்மா அர்விந்த் writes:
    August 28th, 2006 at 6:48 pm

    துளசி
    நன்றி. எங்கம்மா இத அடிக்கடி சொல்வாங்க துளசி. பிழைதிருத்தியதற்கும் நன்றி. டீச்சர்னு சும்மாவா சொன்னாங்க:)

  • Ravishankar Kannabiran writes:
    August 28th, 2006 at 8:51 pm

    இது போன்ற மருத்துவர்கள், நோயாளிகளைக் கையாளும் விதமே தனி அழகு! கொஞ்சம் பொறுமை, கொஞ்சம் கெட்டிக்காரத்தனமான பேச்சு!

    காரியம் பெரிசா வீரியம் பெரிசா என்பார்கள்! உண்மையாக அறிவுரை சொல்ல நினைக்கும் நல்ல உள்ளங்கள், அதை சொல்வதை விட, அது போய் நல்ல முறையில் அடைய வேண்டுமே என்ற எண்ணமே மேலோங்கி நிற்கும்.
    அதுவே சரியான approach-ஐ தேடிப்போகச் சொல்லும் – இல்லீங்களா பத்மா?

  • ஷ்ரேயா writes:
    August 28th, 2006 at 9:24 pm

    //அதே அறிவுறை தொடர்ந்து வருமென்றால், ஒருவித கோபத்திற்கு உள்ளாகி மனத்தாங்கல்கள் வருகின்றன. இதற்கு மேலும் என் அறிவுரையை நீ கேட்காவிட்டால், உன்னுடன் பேசுவதில்லை என்பது போல கணவன் மனைவியிடத்து, பெற்றோர்கள் பிள்ளையிடத்து கட்டளைகள் போடும் இடத்தில் இது இன்னும் அடங்காத மனதின் வடிகாலாய், “நான் செய்தே தீருவேன் அதை கேட்க நீ யார்” என்று ஈகோ சண்டையில் போய் முடியும். இதற்காக நாம் அக்கறைபடுபவரிடத்து அறிவுரை கூறக் கூடாது என்றில்லை, அதை ஒரு வித பக்குவத்தோடு சொல்ல வேண்டும் //

    totttttally agree :)

  • செல்வராஜ் writes:
    August 29th, 2006 at 10:28 am

    மிகவும் நல்ல பதிவு. இது போன்ற கருத்துக்களைப் படித்திருந்தாலும், அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்வது நல்லது.

    தலைமுறை வளர்ச்சியில் பதின்ம வயது வரை பொறுத்திருக்க வேண்டியதில்லை – சிறு குழந்தைகளிடம் அறிவுரை சொல்வது கூடச் சிரமமாக இருக்கிறது.

  • selvanayaki writes:
    August 29th, 2006 at 7:42 pm

    பத்மா,

    நீங்கள் மீண்டும் தொடர்ச்சியாக எழுத ஆரம்பித்திருப்பது நன்று. அறிவுரை சொல்லப்படும் விதம் முக்கியமானதுதான். சிலநேரங்களில் அது அதிகபட்ச அன்பான வழியில் சொல்லப்பட்டும் பயனற்றுப் போய்விடுவதையும் பார்க்க முடிகிறது. என் மாமா ஒருவரின் புகைக்கும் பழக்கம் வருடங்கள் கடந்து, ஒரு அறுவை சிகிச்சைக்குப் பிறகும், பல கவுன்சிலிங் தாண்டியும்கூடத் தொடர்ந்து கொண்டிருக்கிறது:((

  • SK writes:
    August 29th, 2006 at 8:47 pm

    என் பதிவில் பின்னூட்டம் இட்டிருந்தீர்கள்!
    அது நீங்கள்தான் என்பதை ‘மறந்து’ [அவசரம்!!:(] “தேன் துளியாரே!” என விளித்து, மறுமொழி இட்டிருக்கிறேன்!

    தயவு செய்து மன்னிக்கவும்!

    இதில் நீங்கள் கூறியிருக்கும் கருத்துகள் என் பதிவை எழுதும் போது நான் நினைவில் கொள்ள வேண்டிய வாசகங்களாய்ச் செயல் பட உதவும்!

    நன்றி!

  • Muse writes:
    August 30th, 2006 at 8:15 am

    Useful information.

  • பத்மா அர்விந்த் writes:
    September 1st, 2006 at 8:14 am

    ரவிஷங்கர், ஷ்ரேயா: நன்றி. நாம் அனைவருமே இந்த அனுபவத்தை பெற்றிருப்போம்.
    செல்வநாயகி, பெரும்பாலான புகை பிடிப்பவர்கள் self locus நிறைந்தவர்கள். அவர்களாகவே விரும்பினால் தவிர நிறுத்த செய்வது கடினம். ஆனால் சமீபத்திய சில நுட்பங்கள் இந்த self locus தன்மையை புரிந்து அதை நோக்கி செயல் படுவதால் இரண்டு சந்திப்புகளுக்கு பிறகு சிறிய மாற்றத்தை கொண்டுவர முடிகிறது. உங்கள் மாமா விரைவில் இந்த பழக்கத்தை விட்டு குணமடைய வாழ்த்துகள்.

  • பத்மா அர்விந்த் writes:
    September 1st, 2006 at 8:17 am

    உண்மைதான் செல்வராஜ். என் மகனிடம் சில சமயங்களில் தடுமாறியது உண்டு. நம் குழந்தைகள் என்று வரும்போது அவர்களிடம் நாம் வைத்திருக்கும் அதீத அன்பு குறுக்கிட்டு விடுகிறது. குழந்தைகள் அதை நன்கு அறிவார்கள். அந்த அன்பை தங்களுக்காக பயன்படுத்தி கொள்ள கைக்குழந்தை கூட அறியும்.
    Sk: மன்னிப்பெல்லாம் எதற்கு. நான் உங்கள் சமீபத்திய தொடரை விரும்பி படிக்கிறேன்.
    ம்யூஸ்; நன்றிகள் வருகைக்கும் கருத்துக்கும்.

  • எ.அ.பாலா writes:
    September 1st, 2006 at 12:32 pm

    பத்மா,
    ‘விவரமான’ பதிவு. உரையாடல் was interesting !
    எ.அ.பாலா

  • dharumi writes:
    September 2nd, 2006 at 2:30 am

    after so long a gap…glad.
    எல்லாம் தெரியுது…வயசாயிக்கிட்டு போவுது..காலையில தினமும் நடக்கணும்னும் தெரியுது. நடந்தா நல்லா இருக்கிறதும் தெரியுது. ஆனாலும்…அந்தக் காலை நேரத்துத் தூக்கம்….ம்..ம்..சிலநேரங்களில் புத்தி வெல்கிறது;பல நேரங்களில் காலைத்தூக்க சுகம் வெல்லுது. என்ன பண்றது?
    அடிக்கடி autosuggestion எல்லாம் முயற்சி பண்றேன். என்ன சொல்லுங்க…

  • பத்மா அர்விந்த் writes:
    September 3rd, 2006 at 8:38 am

    நன்றிகள் பல தருமி, பாலா. விரைவிலேயே உடற்பயிற்சியை எப்படி வழ்க்கமாக்கி கொள்வது என்பது பற்றி எழுத இருக்கிறேன். வரவேற்புக்கும் நன்றி. இனிமேல்தான் உங்கள் பழைய பதிவுகளை படிக்க வேண்டும்.

  • Chandravathanaa writes:
    September 3rd, 2006 at 3:03 pm

    நல்ல பதிவு

  • கிரி writes:
    September 3rd, 2006 at 8:31 pm

    நல்ல பதிவு.ஆனால் இன்றைய இளைய தலைமுறை
    ஒழுக்கத்தை பற்றிய எந்த அறிவுறையையும் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. பட்ட பின் தான் புத்தி வருகிறது.

  • பத்மா அர்விந்த் writes:
    September 4th, 2006 at 7:42 am

    சந்திரவதனா, கிரி: நன்றி. சொல்லும்விதமாய் சொன்னால் பலன் இருக்கும் என்று நம்புகிறேன். இதையே அடுத்த பதிவாக விரிவாக இட இருக்கிறேன்.

  • மலைநாடான் writes:
    September 4th, 2006 at 8:56 am

    மிக நல்ல பதிவு.


Leave a Reply

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions