»
S
I
D
E
B
A
R
«
பல்வலியால் படும் பாடு
April 3rd, 2006 by பத்மா அர்விந்த்

என் வீட்டில் எல்லோருக்கும் பற்கள் கரும்பை கடித்து தின்கின்ற ரகம் இல்லை. ஈறுகளின் அறுவை சிகிச்சை செய்து, இப்போது நலத்துடன் இருந்தாலும் பேகல் போன்றவை உண்ணவே யோசிக்கும் ரகம். என் மகன் 3 வயதிலேயே பால்பற்களை கூட பிடுங்கி பற்கள் இல்லாமல் திரவ உணவில் 7 வயதுவரை வளர்ந்தவன். அதிலும் முகம் வீங்கி, கேவர்னஸ் சைனஸ் வழியாக கிருமிகள் பரவியிருக்குமோ என்ற ஐயத்தில் அவசர சிகிச்சை பிரிவில் இரவை கழிக்க நேரிட்டது. பற்களை இழந்துவிட்டால் உண்ண முடியாமல், சக்தி இல்லாமல் எந்த வேலையும் செய்யவும் முடியாமல் திணறிப்போகிறது. ஈறுகளில் நோய் வருமேயானால், அது சைனஸ் மூலமாக மூளைக்கும் பரவ வாய்ப்பு உண்டு. இதனால் தன்னுடைய மாக்ஸிலரி சைனஸ் பாதிக்கப்பட்டு நல்ல சுரத்தில் என் மகன் பல நாட்கள் அவதிப்பட்டான்.

இப்போது அதே நிலையில் அர்விந்த். ஈறுகளில் வீக்கம் கண்டு அது புரையோடி முகம் முழுதும் வீங்கி, கடந்த வாரம் உண்ணவும் முடியாமல் பேசவும் முடியாமல், அதையும்விட வேலைகளை செய்யவும் முடியாமல் ஒரே அவஸ்தை. இத்தனைக்கும் சானிகேட்டர் பிரஷும், பார்த்து வாங்கிய பற்பசையும், இரண்டு வேளையும் பல் துலக்குவதும் உண்டு.ஒருமுறை மிக மோசமான விபத்துக்கு பிறகு பற்கள், தாடை எலும்பு அறுவை சிகிச்சையால் சரிசெய்தும் அடிக்கடி வரும் தாகுதல்தான் என்றாலும் எல்லோரும் கஷ்டப்பட்டது கடந்த வாரம் இன்னும் அதிக பிரச்சினையாகிவிட்டது.

இங்கே 4 வயதிலேயே முதம் முறை பல்மருத்துவரிடம் அழைத்து போய் வருவது வழக்கமாக இருக்கிறது.(well baby visit)மிக முக்கியமாக பதின்ம வயதில் பல் வரிசையை ஒழுங்குபடுத்த இன்னபிற சுத்தம் செய்ய என்று ஒரு வரிசைக்கிரமத்தில் நடந்தே ஆகவேண்டி இருக்கிறது. இல்லை என்றால் பள்ளி நர்ஸிடமிருந்து தொலைபேசிகள் வருவதும் உண்டு. இங்கே பள்ளியிலும் வருடம் இரண்டுமுரை பற்களை பரிசோதிக்கிறார்கள். பல் துலக்கும் முறை சொல்லி தருவது, ஒரு இலவச ப்ரஷ், பற்பசை, நைலான் நூல்( floss) எல்லாம் தருவார்கள்.
இப்போது கோக் போன்ற பானங்களை குடிப்பவர்கள் அதில் உள்ள பாஸ்பாரிக் அமிலத்தின் விளைவால் பல் எனாமல் மெல்ல அழிவதனால் இன்னும் பிரச்சினைக்கு உள்ளாகிறார்கள்.
ஆரோக்கியம் இல்லாத பற்களும் ஈறுகளும் இதய நோய் வரக்கூட காரணமாகலாம். நுண்ணிய பாக்டீரியாக்கள் பல்லின் இடையில் தங்கும் சர்க்கரை, உணவு துகளில் இருந்து பெருகி, இரத்தம் மூலம் இதயத்தை அடந்து அங்கே நோய் உண்டாக்கும். இதுபோல ஈறுகளில் ஏதேனும் பாக்டீரியாக்கள் இருந்து ஜிஞ்ஜிவைடிஸ் என்ற நோய் வந்தால், அது சைனஸ் குழாய் வழியே மூளையில் உள்ள கேவர்னஸ் சைனஸை தாக்கி மூளை காய்ச்சலை வரவழைக்க கூடும். முகம் வீங்கி, மருத்துவமனைக்கு வருவோர் உண்டு.

இலட்சணக்கான மக்கள் பல்வலியால் (சாதாரணது முதல் ஈறுகளில் புற்றுநோய்வரை) துன்பப்படுவதை கண்டால் வருத்தமாக இருக்கிறது. மனிதனுக்கு வரும் உபாதைகளில் பல்வலிதான் முற்றிலும் தவிர்க்க கூடியது.

20% சதவிதம் 2-4 வயதுக்குள்ளான குழந்தைகள் பல்லில் ஓட்டைவந்து அவதிப்படுகின்றனர். இதற்கு அவர்களுக்கு தரப்படும் மிட்டாய்களில் உள்ள சர்க்கரையே காரணம் ஆகும். 60% 15 வயதுக்குள் உள்ள குழந்தைகள் பல்வலியால் மிகவும் துன்பப்படுகிறார்கள். இதில் ஏழை வீட்டில் உள்ள குழந்தைகள் இந்த ஓட்டைகள் சீர் செய்யப்படாமல் மேலும் துன்பத்திற்கு உள்ளாகிறார்கள். அமெரிக்காவில் பெரும்பாலான மக்கள் பல் மருத்துவ காப்பீடு பெறுவதில்லை. இந்த வலியால் பள்ளிக்கு சரியாக செல்ல முடியாத நிலை, முகத்தின் அழகான தோற்றம் குறைவு, சொல்லின் பேச்சின் சீரான தன்மை குறைவு, வாயில் வீசும் துர்நாற்றம் இவை ஒரு குழந்தையின் தன்னம்பிக்கையை குறைக்க வல்லன.

அமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்டோர் 95% பேர் பல்வலியால் துன்பப்படுகின்றனர். இதில் பலர் பற்களை இழந்து பொய்பற்கள் கொண்டு இன்னும் திண்டாடுகின்றனர். இன்னும் பலர் ஈறுகளில் வரும் உபாதை இன்ன பிறவற்றால் துன்பப்படுகின்றனர். பற்களை இழப்பது ஒரு அழகுணர்ச்சி பிரச்சினை மட்டும் இல்லை. சரியாக உச்சரிக்க இயலாமை, சில வகை உணவுகளை கடித்து உண்ண முடியாமை போன்று பொதுவான உடல் நலத்திற்கு கூட பாதிப்பு வரக்கூடும்.

இதையும் தவிர்த்து வாய், தொண்டை இவற்றில் வரும் புற்றுநோயால் வருடத்திற்கு 28,000 பேர் துன்பப்படுகின்றனர். இதில் வருடாவருடம் 7200 பேர் இறக்கின்றனர். வாயில் வரும் புற்றுநோய் இந்தியர்களை பெருமளவில் பாதிக்கிறது. பாக்கு வெற்றிலை அதிகம் உண்பதால், அதன் சாற்றை துப்பாமல் சிலர் உட்கொள்வதால், அதிக நேரம் பான் பராக், பாக்கு போன்றவற்றை வாயில் அதக்கி கொள்வதால் இந்த புற்று நோய் ஏற்படுவதாக அண்மையில் நியுஜெர்ஸியில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் சில அறிவியலாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.மேலும் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், அதிக மது (ஒரு நாளைக்கு 4, 12 அவுன்ஸ் பியருக்கு மேல்)அருந்துபவர்களுக்கு புற்றுநோய் வர வாய்ப்பு உண்டு.

அமெரிக்காவில் கடந்த வருடம் கிட்டதட்ட 78 பில்லியன் டாலர்கள் வரை பல் மருத்துவர்களுக்கு செலவு செய்துள்ளனர், 500 மிலியன் தடவை பல்மருத்துவர்களை மக்கள் சந்தித்திருக்கின்றனர். ஆயினும் பெருவாரியான மக்கள் பற்களை சுத்தம் செய்து கொள்ள செல்வதில்லை. பல் துலக்கும் போதும் பற்களின் இடையே சிக்கி யுள்ள உணவு துகள்களை (floss) சரிவர அகற்றுவதில்லை.

அமெரிக்காவில் கிட்டதட்ட 100 மிலியன் மக்களுக்கு சரியான ப்ளுரைடு உள்ள தண்ணீர் கிடடப்பதில்லை(www.cdc.gov).

இதை தவிர்க்க என்ன செய்யலாம்? பாஸ்பாரிக் அமிலம் உள்ள கோக் போன்ற பானங்களை குழந்தைகளுக்கு தராமல் இருக்கலாம். மேலும் பழஜூஸ் குடித்தாலோ சாக்லேட் போன்றவை தின்றாலோ உடனே பற்களை சுத்தம் செய்வது, அல்லது நீர் விட்டு கொப்பளிப்பது போன்றவற்றை செய்ய பழக்கலாம்.

ஒரு நாளைக்கு இரண்டு வேளை பற்களை சுத்தம் செய்ய பழக்கலாம். செயற்கை பற்களை வெண்மையாக்கும் பெயிண்ட், gum போன்றவற்றை சுவைப்பதை நிறுத்தலாம். இது பற்களின் எனாமலுக்கு ஆபத்தானது.

அமெரிக்காவில் மாநில மத்திய அரசு நிறுவங்களுடன் சேர்ந்து ப்ளூரைடின் அளவை சரிபார்த்து தண்ணீர் வழங்கவும், இதற்காக ஒரு இணையதளம் நிறுவி, மாநிலை அரசு தண்ணீரில் உள்ள ப்ளூரைடின் அளாவை சரிபார்ப்பதை கட்டாயப்படுத்தியும் இருக்கிறார்கள்.

மாநில தண்னீர் தன்மையை சரிபார்க்கும் பொறியியல் வல்லுனர்கள், அதிகாரிகளுக்கு ப்ளூரைடின் தன்மை பரிசோதிக்க பயிற்சி தருகிறார்கள்.

நியுஜெர்ஸி 2010 திட்டப்படி ஒரு sealant பற்களில் போட்டு குழந்தைகளின் பற்களை பேண அரசு திட்டம் தீட்டி உள்ளது. எல்லா குழந்தைகளுக்கும் இந்த sealant போடப்படும். இது சர்க்கரை மூலம் எனாமல் கரைவதையும், பாக்டீரியா சேர்வதை தவிர்க்கவும் பயன் படும்.

மேலும் மாநில அரசு இதற்காக மான்யம் ஒதுக்கி மக்களுக்கு பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க மக்களுக்கு எடுத்து சொல்ல பல உடல்நல துறை வல்லுனர்களை பயன் படுத்துகிறது.

காப்பீடுகள் வருடம் இரண்டு முறை இலவசமாக பற்களை சுத்தம் செய்து கொள்வதை தூண்டுகிறது. அதற்காக 100% செலவையும் திருப்பி தருகிறது.
பள்ளிகளில் உள்ள செவிலிகள் இதற்காக வருடம் இரண்டு முறை பற்களின் ஆரோக்கியம் பற்றி சொல்லித்தருவதோடு, பற்களை பரிசோதிக்கவும் செய்கிறார்கள்.
ரட்கர்ஸ் பல்கலை கழகம், மாநில அரசுடன் சேர்ந்து பற்களின் ஆரோக்கியம், மற்றும் பால் அருந்துவது, பற்களை துலக்குவது, கால்சியம் சேர்த்து கொள்வதன் அவசியம் பற்றி பள்ளிகளில் பாடம் எடுக்கிறார்கள்.


11 Responses  
  • Karthikramas writes:
    April 3rd, 2006 at 11:05 am

    பத்மா,
    உடலைப்பேணும் பலரும் பல்லை அந்த அளவுக்கு கவனிப்பது இல்லை; இது கலாச்சார விளைவு போல என நினைக்கிறேன். உங்கள் கணவர் சீக்கிரம் குணமடைவாராக.பல் இருப்பதன் மதிப்பு நமக்கு அது வலிக்கும்போதும், போகும்போதுதான் தெரிகிறது :-)

  • குறும்பன் writes:
    April 3rd, 2006 at 1:07 pm

    பல் வலியும் தலை வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்று நம் முன்னோர்கள் சொன்ன அனுபவ மொழியை மறக்காதீர்.
    ஈறுகளில் எனக்கு இரத்த கசிவு உண்டு, மருத்துவரிடம் சென்றும் ஒரு பலனும் இல்லை. $1000 அழுததுதான் மிச்சம், இது காப்பீட்டு தொகை போக நான் குடுத்தது. அமெரிக்காவில் பல் மருத்துவரிடம் சென்றால் அழகாக சொத்தை எடுத்துவிடுவார்கள் ( பல் சொத்தையை அல்ல உங்கள் சொத்தை). பத்மா உங்களுக்கு ( யாருக்கு தெரிந்திருந்தாலும் ) தெரிந்த ஈறு காக்கும் இயற்கை முறைகளை சொல்லுங்களேன்.

  • Sam writes:
    April 3rd, 2006 at 2:08 pm

    //தெரிந்த ஈறு காக்கும் இயற்கை முறைகளை சொல்லுங்களேன். //
    இதைச் சொன்னால் கற்காலத்திற்கு அழைத்துப் போகிறேன் என்று சொல்ல வராதீர்கள்.குளிர்வான பானங்களை, உணவுகளை தவிர்க்கவும். எனக்கு தெரிந்த பலர் ஐஸ் கட்டியை விரும்பிக் கடித்து சாப்பிடுவார்கள். இதையும் தவிர்க்கவும். என் பல்லும் நல்ல நிலைமையில் இல்லை. எண்பது வயது வரை ஒரு பல்லும் விழாத முதியவர் ஒருவர் எங்கள் வீட்டில் இருந்தார். அவர் வாழ் நாள் பூராவும் உமிக்கரியை ம்ட்டும் உபயோகப் படுத்தி பல் தேய்த்தவர். இந்த ஊரில் உமிக்கரிக்கெங்கே போவது. ஆலும் வேலும் ப்ல்லுக்குறுதி என்பார்கள். அதுவும் இங்கே கிடைக்காது.
    சாம்

  • பத்மா அர்விந்த் writes:
    April 3rd, 2006 at 3:10 pm

    நன்றி கார்த்திக், குறும்பன், சாம். ஈறுகளை பாதுகாக்க பல் துலக்கும் போது அவற்றையும் சுத்தம் செய்வது நல்லது. இதற்காக மருந்து கடைகளில் பிரத்தியேக பிரஷ் (gum butler) உண்டு. மேலும் இரவில் நல்லெண்ணெய் போட்டு வாயை கொப்பளித்து பிறகு சூடான நீரில் கழுவுதல் நலம் பயக்கும் என்பது சித்தமருத்துவ குறிப்பு.

  • துளசி கோபால் writes:
    April 3rd, 2006 at 4:19 pm

    பத்மா,

    அரவிந்துக்கு எப்படி இருக்கிறது?

    இது அருமையான பதிவு பத்மா. பல்வலி வந்தா அவ்வளோதான். அனுபவிச்சவங்களுக்குத்தான் தெரியும்.
    இங்கே நியூஸியில் பல் முளைக்க ஆரம்பித்த முதல் 16/17 வயது( ஹைஸ்கூல் முடிக்கும்வரை) பல் மருத்துவம்
    இலவசம். ஆனால் பல்வரிசை சரி செய்ய இலவசம் இல்லை. ஒரு வரிசைக்கு 2500$ என்று ஆர்த்தோடாண்டிஸ்ட்
    தீட்டிவிடுகிறார்.

    எனக்குமே நேத்து கடவாய்ப் பல்லுக்கு கேப் போடப் போய்வந்தேன். மோல்ட் எடுத்து ஹாங்காங் அனுப்புகிறார்கள்.
    அங்கேதான் போற்ஸலீன் கிரவுன்கள் நன்றாகச் செய்கிறார்களாம்.

  • பத்மா அர்விந்த் writes:
    April 3rd, 2006 at 7:59 pm

    இப்ப பரவாயில்ல துளசி. குழந்தைகளுக்கு இலவச பல்மருத்துவம் ரொம்ப நல்ல திட்டம். இங்கேயும் பல் மருத்துவம் ரொம்ப செலவாகும். ஓட்டை போட்டு அடைக்கிறாங்களா இல்ல இருக்கற ஓட்டையை அடைக்கிறாங்களான்னு எதுவுமே புரியாது.

  • செல்வராஜ் writes:
    April 3rd, 2006 at 8:02 pm

    பத்மா, அர்விந்திற்கு விரைவில் குணமாக வாழ்த்துக்கள்.

    ஈறுகளின் இரத்தக்கசிவும் அதனால் பாதிப்படைந்த தாடையெலும்பும் கொண்ட என் நல்ல நண்பர் ஒருவர் பட்ட/படும் பாட்டை நானறிவேன்.

    பல்வலி பிரச்சினைகள் பெரும் பாடு தான். பள்ளிக் காலத்திலேயே இரண்டு பற்களைச் சொத்தைக்குக் காவு கொடுத்துவிட்டாலும், அதன்பிறகு ஓரளவிற்குச் சரியாகவே இருக்கிறது. ஈறுகளையும் துலக்குவது பற்றி அமெரிக்கப் பல் மருத்துவர்கள் மூலம் சில ஆண்டுகள் மூலம் அறிந்தபோது புதிதாக இருந்தது. வருடம் தவறாமல் பரிசோதனைக்குச் சென்று வருவதும் பயனுள்ளதாக இருக்கிறது.

    Flossing குறித்தும் சில வருடங்களுக்கு முன் எனக்கு அறிவு இருக்கவில்லை. மருத்துவர்கள் கூறுவது போல் அடிக்கடி இல்லாமல், எப்போதாவது ஒரு முறை செய்தாலும் அது பயனுள்ளதாக இருக்கிறது.

  • வலைஞன் writes:
    April 3rd, 2006 at 8:49 pm

    பல்வலியும் தலைவலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்.
    கோக்கும் சாக்லெட்டும் இன்று கலாச்சாரமாகிப் போனதும் சொத்தைப்பல் இளைஞர்கள் பெருகிவரக்காரணம்.
    நல்ல பதிவு

  • கோபி writes:
    April 4th, 2006 at 7:44 am

    அரவிந்த் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    நல்ல பதிவு. பற்களின் முக்கியத்துவம், அது ப்ரச்சனை செய்யும் வரையில் யாருக்கும் தெரிவதில்லை.

    பல்வலி மிகக் கொடுமையானது. பலர் சொல்வது போல தனக்கு வந்தால்தான் தெரியும் என்பது மிகச் சரியானது.

    எனாமல் லேசாக பாதிக்கப்பட்டபோது இதை முழுமையாய் உணர்ந்தேன்.

  • Mohandoss Ilangovan writes:
    April 4th, 2006 at 10:05 am

    நான் பட்டிருக்கேன். தினம் ஒரு பெய்ன் கில்லர் போட்டுக்கொண்டிருந்த காலமெல்லாம் உண்டு.

    ஒரு விஷயம் தெரியுமா எங்கள் மல்டினேஷனல் கம்பெனியில் பல், மற்றும் கண்களில் ஏற்படும் கோளாருக்காக பைசா க்ளேய்ம் பண்ண முடியாது.

  • பத்மா அர்விந்த் writes:
    April 4th, 2006 at 2:30 pm

    செல்வராஜ், மோகந்தாஸ், வலைஞன், கோபி: வாழ்த்துக்களுக்கு நன்றி. இப்போது கொஞ்சம் பரவாயில்லை. பல்வலி வந்தால் காது வலியும், தலைவலியும், உடலின் தளர்ச்சியும் வரும். ஆனால் நாம் எல்லோருமே கொஞ்சம் அலட்சியமாக நடந்து கொள்கிறோம்.
    மோகன்: இங்கேயும் பல நிறுவனங்களில் நல்ல பல், கண் காப்பீடு இல்லை. இது குறித்து மக்கள் குரல் எழுப்ப வேண்டும் என்று நானும் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.


Leave a Reply

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions