இந்த என் பதிவின் கடைசி பட்டியலில் எனக்கு முழு விருப்பம் இல்லாவிட்டாலும் கூட நீ என்ன செய்கிறாய் என்ற சில கேள்விகளுக்கு என்னாலான பதிலையும் தந்திருக்கிறேன். இது பலருக்கு வழிகாட்டுதலாக இருக்கவும் முடியும் என்ற காரணத்தால்.
அமெரிக்காவில் உணவகங்கள் முன் வரிசையில் காத்திருந்து உணவு வாங்குபவர்கள் சில சமயம் இந்தியாவில் ஏன் வரிசையில் இருக்கும் பொறுமை இருப்பதில்லை என்று ஏளனம் செய்வதுண்டு. அப்போது நான் சொல்வது “ 8 பேருக்கு 20 பேருக்கான உணவு இருக்கிறது, எப்படியும் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆகையால் காத்திருப்பதில் தவறில்லை, ஆனால் 20 பேருக்கு 8 பேருக்கான உணவுமட்டுமே இருக்கும்போது, சக்தியுள்ளவனுக்கு மட்டுமே என்றால் போராட்டங்கள் நிச்சயம் இருக்கும்” என்பதுதான். இதையே நியுயார்க்கில் subway ஏறும் போது நடக்கும் தள்ளல்களில் பார்க்கலாம். இந்த வாழ்வதற்கான வழிமுறைகளில் எளியோரை காப்பாற்ற என்று மட்டுமே சட்டங்கள் தோன்றி இருக்க வேண்டும். புகைபிடித்தால் புற்றுநோய் வரும் என்ற பய உணர்வை தூண்டுவது எப்படி புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த முக்கியமோ அதேபோல தவறான வழியில் சென்றால் நரகம் என்ற பயமுறுத்தலும் வந்திருக்க வேண்டும். முதலாவது அறிவியல் மூலமாக நிரூபிக்க பட்ட ஒண்று என்பதால் நம்பிக்கை தருகிறது.
வாழ்க்கை தரம் உயர சுதந்திரமான சிந்தனைகளும் (free thinking)அதை ஒட்டிய விவாதங்களும் அவசியம்.ஆதரவான கருத்துக்களைவிட மாற்றுக்கருத்துகள் இன்னும் முக்கியம். இதனால் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது வரக்கூடிய பிரச்சினைகள் பற்றி முன்பே அறிய முடிகிறது. இப்படியான ஒன்றாக நான் தங்கமணியின் சமீபத்திய பதிவை பார்த்தேன். பல விஷயங்களை பற்றி நான் தெரிந்து கொள்ள உதவிய போதிலும், சில சமயம் இது கருத்தை சொன்னவர்கள்(இரு புறத்திலும்) மேல் திருப்பப்பட்டது.
ஒரு பிரச்சினையின் மீதான கருத்தை சொல்லும் போது நமக்கு சரியென்று தோன்றுவதை சொன்னாலும் அதன் பிறகு அதை பற்றிய விமரிசனம் வரும் போது நாம் நம்முடைய கருத்து சரியானதே என்பதை நிலைநாட்டிவிட வேண்டும் என்ற தீவிரத்துடன் வாதிட ஆரம்பிக்கிறோம். எதிரிக்கு நண்பன் எனக்கும் எதிரியே என்று இன்னும் தீவிரமாகி இரண்டு குழுக்களாக பிரிந்து யார் சரி என்று வாதிட முயலும் போது பிரச்சினை தள்ளப்பட்டு வெகு காலமாகிவிடுகிறது. இதற்கு பெரும்பாலும் நம்முடைய கருத்தின் மீதான விமரிசனம் நம் மீதான விமரிசனம் என்று கொள்வதும், பிறகு அவ்வாறே அது மாறிவிடுவதும் ஒரு காரணம்.
மதங்களே இல்லாத ஒரு சமுதாயம், ஏற்ற தாழ்வே இல்லாத ஒரு உலகம் வருமானால் எவ்வளவு இனிமையானதாக இருக்கும்? உலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு தாழ்விலா நிலை வேண்டும் . அது இல்லாத பட்சத்தில், அதை எப்படி அடைவது என்பதை பற்றியாவது விவாதிக்க வேண்டும். விவாதங்களோடு மட்டும் இல்லாமல் தனிப்பட்ட வகையில் எதையாவது செய்ய வேண்டும்.
பலரும் அவரவர் அனுபவங்களை கொண்டே உலகை பார்க்கிறார்கள். என் அனுபவம் கொண்டு பார்த்தால் இந்த உலகம் பலவகைகளில் இனிமையானது. இ ன மத நிற வேறுபாடில்லாமல் எனக்கு உதவியவர்கள் அனேகர். இப்படித்தான் பலருக்கும் பல சாதியைகொண்டவர்கள், இனங்களில் இருந்து வந்தவர்கள் நண்பர்களாக பழகுகிறார்கள். மனிதன் தனிப்பட்ட முறையில் எப்போதும் நல்லவனாக இருக்கிரான். குழுக்களாக சேரும் போதே அடையாளாங்களும் அதை காப்பாற்ற தீவிரங்களும் சேர்கின்றன.
இங்கே இப்படி பேசுபவர்கள் இந்தியா வந்தாலும் இப்படி இருக்க முடியுமா என்றால், சுய நேர்மையும் புரிதலும், முடிவுகளின் விளைவுகளை சந்திக்க துணிவும் இருக்கும் எவராலும் முடியும். என்னால் முடிந்திருக்கிறது. இவ்வாறாக எண்ணியதை செய்ய முடியாமல் இருப்பவர்கள் இருக்கலாம், அப்படி விரும்புவது ஒன்றும் வாழ்வது ஒன்றுமாக இருப்பவர்கள் இருந்தாலும் அவர்களின் விருப்பம் வாழ்வாக ஒருநாள் மாறும் என்பதால் அப்படி உருவாகக்கூடிய சாத்தியங்களை மதிப்பதே என்னை பொறுத்தவரை சிறந்தது. ஒருவேளை தன்னால் அப்படி இருக்க முடியவில்லையே என்ற எண்ணம் கூட சில சமயம் மாறுபட்டு யோசிக்க வைக்கும். நியுஜெர்ஸியில் போதை பொருட்கள் உபயோகிப்பதை எதிர்த்து அரும் பணி ஆற்றும் லிண்டா என்பவர் இந்த பணிக்கு வந்ததே அவர் மகன் அளவுக்கு மீறிய போதை பொருளை உபயோகித்து இறந்ததால்தான். அதனாலேயே அதன் கொடுமைகளும், அவர் மகன் பட்ட அவஸ்தைகளும் அவருக்கு மற்றவரைவிட இன்னும் அதிகமாக தெரிந்திருக்கிறது. உன் பிள்ளையை காக்க முடியாத நீ என்ன சொல்வது என்ற கேள்வீங்கே அபத்தமானது.
முன்பே சொன்ன மாதிரி இதற்காக நான் என்ன செய்கிறேன்? வன்முறையில் அவதியுறும் பெண்கள் அவர்களுக்கான விடுதி கிடைக்கும் வரை என் வீட்டில் தங்க வசதிகள் தந்து, விடுதி கிடைக்க உதவுகிறேன்.பண பிரச்சினை காரணமாக திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களில் ஒருவருக்கு வருடம் தோறும் திருமணமாக பொருள் உதவி செய்கிறேன். மொழி தெரியாமல் தடுமாறுபவர்களுக்கு அரசாங்கத்தின் உதவி தேவையாய் இருந்தால் உதவி செய்கிறேன்.சில வயதான பெண்களுக்கு இங்கே மருத்துவ உதவிகள் தேவை என்றால் வலிய போய் உதவுவது போன்றவையும் அடக்கம். அரசாங்க கூட்டங்களில் இந்தியா பற்றிய பிரச்சினைகள் வந்தால் தனி ஆர்வத்துடன் வேண்டிய விவரங்கள் தேடுவது முதல் இன்னும் பிற வற்றில் ஈடுபடுகிரேன். நிறைய சட்ட குழுக்களில்(policy group) இந்தியர்களுக்கு அவர்களின் கலாசாரத்தை ஒட்டி உதவி வழங்க என்னால் முடிந்த உதவிகள், ஆலோசனை குழுக்கள் இவற்றில் பங்கு கொள்கிறேன். அதே போல நியு ஜெர்ஸியின் புற்றூநோய் ஆலோசனை மையத்திலும் இந்தியர்களுக்கான ன்னால் ஆன உதவிகல் செய்வது, CDCயில் பல விழிப்புணர்வு தரும் கையேடுகளை மொழிபெயர்க்கும் உதவிகள், குழந்தைகள் இரு வேறு கலாச்சார மாறுதல்களில் அடையும் சிக்கல்களை பெற்றோருக்கு சொல்வது, சிறுவருக்கு ஆலோசனை கூறுவது என என் நேரத்தை பலவகைகளிலும் செலவு செய்வது என்னால் முடிந்த நடைமுறையில் உள்ள ஒன்று. மேலே சொன்ன அனைத்தும் என் பணிக்கு அப்பாற்பட்ட நேரத்தில் செய்வதால் நான் என் சமூக வாழ்க்கைக்கான நேரத்தை, என் குடும்பத்தோடு செலவழிக்கும் நேரத்தை செலவிடுவதால் என் மகன், கணவன் இவர்களின் ஆதரவும் முக்கியம்.
சமீபத்தில் ஒரு பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பெண்ணை சந்திக்க நேர்ந்தது. இரண்டு மதியிறுக்கம் கொண்ட் குழந்தைகள். அதீத கோபம் கொண்ட, bipolar depression உடைய கணவன் என்று தனியாக சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தாள். அந்த பெண் எங்களுடன் பேச உபயோகிக்க அவர் அம்மா பெயரில் ஒரு செல்பேசி வாங்கி தந்திருந்தார்கள்.கணவரின் பெற்றோரும் பக்கத்துவீட்டில் தான் இருந்தார்கள். ஏதேனும் சத்தம் கேட்டால் உடனே வந்து மருமகளை பாதுகாக்கும் நல்ல குணமுடையவர்கள். இதனாலேயே விவாகரத்து வரை செல்லாத மருமகள் என்ற குடும்பம். இவர்களுக்கு இலவசமாக ஒரு வாரத்திற்கு 16 மணி நேரம் நர்ஸ் வந்து வீட்டில் குழந்தைகளை கவனித்து கொள்ள அரசாங்கம் அனுமதித்திருந்தது. ஆனாலும் கணவன் அதை விரும்பவில்லை. மனைவிக்கோ அந்த உதவி நன்றாக இருக்கும் என்று விருப்பம். மெல்ல பேசி இன்னமும் முயன்று கொண்டிருக்கிறோம். கண வன் இல்லாத போது உதவி கேட்கும் பெண் பிறகு மாறி பேசுவதை புரிந்து கொல்ளா முடியாதவர்களிடம் இதை விளக்கி சொல்லி, பெண்ணின் மீதான புரிதலை ஏற்படுத்த என்னால் முடிந்ததைச் செய்த திருப்தி.
நான் படித்த பள்ளியில் இன்னமும் ஏழை மாணவியருக்கு சீருடையும் உதவித்தொகையும், அங்கே கழிவறைகளை சுத்தம் செய்பவர் வீட்டு குழந்தைகள் படிக்க உதவி செய்கிறேன். இது போல முன்பு உதவி செய்பவர் வீட்டு மகன் சமீபத்தில் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார், இன்னமும் என் வீட்டில் இருந்தே கல்லூரி கட்டணம் அனுப்ப படுகிறது.பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் இருப்பவர் யாராக இருப்பினும் நம்மாலான உதவி எத்துணை சிறியதாக இருப்பினும் செய்தால், அ து அந்த குடும்பம் முன்னேற வழிவகுக்கும். உதவ முடியுமா என்ற என் பதிவிற்கு பொருள், ஆலோசனைகள் தந்து உதவியர் பலர். அதேபோல துள சி, முத்து, ரம்யா, மது, பாலா, சிவா, ராம்கி போன்றோரின் பல பதிவுகளில்,பல சமயங்களில் பலரும் உதவிய செய்திகள் பார்த்திருக்கிறேன்.சிலருக்கு அமைதியாக செய்வதில் விருப்பம் இருக்கும். இன்னும் சிலருக்கு இது போன்ற வழிகள் இருப்பதை சொன்னால் ஆர்வம் இருப்பவர்கள். இவற்றில் ஒன்றை செய்ய முடியும் என்பதால் சொல்ல விருப்பம் இருக்கும்.
இந்தியா போகும் போது இதை போல ஏதேனும் மாணவர்கள் இருந்தால் என் சகோதரர்கள், நான், சகோதரிகள் என்று அனைவருமே இதைத்தான் செய்கிறோம். புதிதாக வாகனங்கள் வாங்கினால் அதுவரை உபயோகித்த பழைய வாகனங்களை விற்காமல் யாரேனும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு இலவசமாக கொடுக்கிறோம். அ தை விற்று வரும் பணம் எங்களுக்கு பெருமளவில் உதவ போவதில்லை. It is sunk cost. ஆனால் குழந்தைகளை வைத்து கொண்டு சிரமப்படும் ஒருவருக்கு அது பெரிய தொகை என்பதால் இந்த முடிவு. இவர்கள் யாரும் எந்த சாதி என்று கேட்பதில்லை.
என் சகோதரனின் மனைவியும் (கர்னாடகத்தில்)பல தலித்துகளின் வீடுகளுக்கு சென்று அவர்கள் வீட்டு பெண்களுக்கு குடிசை தொழில்கள் செய்ய, தொழில் நுட்பங்களை கற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்வது, அரசாங்கத்திடம் இருந்து இதற்கான நிதியை பெறும் வழிவகைகள் சொல்லி கொடுப்பது என்று பல செய்கிறார்.என் பெற்றோரும் ஆதரவற்ற சிறுவர்கள் இல்லம் சென்று உதவுவது என்பன போன்றவற்றை செய்து வருகிறார்கள்.இதை எழுத காரணம், சமீபத்தில் பின்னூட்டங்களில் பலரும் இப்படி பேசுபவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேட்பதாலேயே. இப்படி ஆரவாரம் செய்யாமல் உதவுபவர்கள் பலர் இருக்கிறார்கள்.
உதவுவது ஒருபுறம் இருந்தாலும், ஆணிவேரை கண்டறிந்து பிரச்சினையை எப்படி தீர்க்க முடியும், அறிவியல் துணையுடனா, மனிதாபிமானத்துடனா இல்லை மறுமலர்ச்சியினாலா என்று விவாதிப்பது முதல்படி. தீர்வு ஒன்றினால் மட்டுமோ இல்லை எல்லா வழிகளிலுமோ இருக்கலாம். ஆனால் சமநிலைகொண்ட சமுதாயம் வந்தால் அது நல்லதுதானே.எந்த ஒரு பிரச்சினைக்கும் முடிவு காண முதலில் அதை பற்றிய பலவழிப்பட்ட (Multi prong stratehy)சிந்தனை வேண்டும்