தீண்டாமை, மதங்கள் இன்னபிற
சமீபத்தில் தங்கமணியின் பதிவும், சசியின் பதிவில் வந்த பின்னூட்டங்களும் ஜெயஸ்ரீயின் கோர்வையான விவாதமும் என்னில் எழுப்பிய சில சிந்தனைகளே இவை. நான் வாழுகின்ற அமெரிக்காவை அடிப்படியாக கொண்டு நான் பார்த்த பார்க்கும் சில நிகழ்வுகளையும் இந்தியா வரும்போது நானநேரடியாக பார்க்கும் அனுபவங்கள், நான் சிறுமியாக இருந்த போது பார்த்த அனுபவங்கள் இவற்றை அடிப்படையாக கொண்டு வந்த சிந்தனைகள் தொகுத்து எழுத முயன்றிருக்கிறேன். தங்கமணி போலவோ ஜெயஸ்ரீயை போலவோ கோர்வையாக எழுத எனக்கு தெரியாது என்பதும் , என் அனுபவங்கள் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பை சார்ந்தே என் எண்ணங்கள் இருக்கும் என்பதும் வெளிப்படை. என் சிந்தனைகள் என் அனுபவங்கள் சார்ந்தவைதானே தவிர எந்த குழுவையும் சார்ந்தது அல்ல என்பதையும் சொல்ல தோன்றுகிறது. இது இன்னும் பல பாகமாக தொடர்ந்து வரும். இதில் என் அனுபவங்கள் என்பது நான் சந்தித்த பல்வேறு மதங்களை(இந்து, கிறித்துவம், யூதர், முகமதியர்) சார்ந்த பொருளாதாரத்தில் நடுத்தரவர்க்கமாக உள்ளவர்களின் அனுபவங்களையும் குறிக்கும்.
21ஆம் நூற்றாண்டை எட்ட விட்ட நிலையிலும் அறிவியலில் எத்தனையோ சாதனைகளை கண்டுவிட்ட போதிலும் இன்னும் தீண்டாமை உலகெங்கும் வியாபித்திருக்கிறது. ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொருவகையில். அமெரிக்காவில் நிற வெறி என்றால் ஐரோப்பாவில் பொருளாதார வகையில், இந்தியாவில் சாதீய அடிப்படையில் என்று மனிதனை மனிதன் தாழ்த்தி நடத்துவது நடந்துகொண்டே இருக்கிறது. ஆப்பிரிகாவிலும் அண்டையில் உள்ள ஹைட்டியிலும் கூட.
தீண்டாமை ஒழிக்க பல சட்டங்கள் இருக்கும் அமெரிக்காவில் கூட சட்டத்தின் காவலர்களாக இருக்கும் வழக்கறிஞர்கள், நீதிபதிகள் இன்ன பிற அதிகாரிகளும் அவ்வப்போது இதைக்காட்ட தயங்குவதில்லை.
ஒரு வன்புணர்வு அல்லது கொலை போன்ற இடத்தில் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கன் எப்படியாவது தொடர்பு கொண்டுவிட்டால், இறந்தவனின் நண்பன் அல்லது அண்டைவீட்டுக்காரன் அல்லது எப்போதோ சண்டை போட்டவன் என்று ) உடனடியாக அவன் மீது சந்தேகம் வரும். கைரேகை முதல் நேரில் பார்த்த சாட்சிகள் அவனுடன் ஒத்து போகிறதா என்று பார்ப்பதுமுதல், அவனுடைய பழைய சரித்திரத்தை தேடுவது வரை நடக்கும்.
சமீபத்தில் ரிக்கி என்ற ஒருவனின் நண்பன் இறந்துவிட அங்கே இருந்த ஒரு கைரேகையுடன் ரிக்கியினுடையதை பொறுத்தி 3 ஆண்டாண்டுகள் சிரையில் இருந்தார். அவருடைய வழக்கறிஞர் விடாமல் போராடி FBI அரசு வழக்கறிஞருடைய சிறப்பு கைரேகை நிபுணர்கள் ரிக்கியின் கைரேகைக்கு இதில் என்ன பொறுத்தம் என்று ஆராய்ந்திருக்கிறார்களே அல்லாமல் இந்த கைரேகைக்கு ரிக்கியினுடையது பொறுந்துமா என்று பார்க்கவில்லை. முன்பே மனதில் தீர்மானித்த ஒன்றை நிரூபிக்க முயற்சிசெய்ததால் மேடும் பள்ளங்களும் இருப்பதாக சொல்ல முடிந்தது. 100 சதவிகித ஒப்புமை என்று சொன்னவர்கள் ரிக்கி விடுதலையானவுடன் மறு மொழி சொல்லவே மறுத்து அறிவியல் மீது குறைகூறிவிட்டனர்.
இதைப்போல பல நிகழ்ச்சிகள் உண்டு. சாதாரணமாக காவல் நிலையத்தில் பல முன்னே பிடிக்க பட்டு குற்றம் சுமத்தப்பட்ட (குற்றம் நிரூபிக்கப்பட்ட அல்ல) புத்தகம் உண்டு, அதில் ஏற்கெனவே பிடிபட்ட பல குற்றவாளிகளின் புகைப்படங்கள் (mug shot) உண்டு. அதை முதலில் காட்டி பாதிக்கப்பட்டவரிடம் இவரில் யாரையாவது உங்களால் அடையாளம் காட்ட முடியுமா என்று கேட்பார்கள். அதில் யாரையாவது கைகாட்டிவிட்டால், உடனே கைது, அடி என்று பாடாய் படுத்துவது அமெரிக்காவிலும் உண்டு.
இந்தியர்களுக்கெதிராக அமெரிக்காவில் வெறுப்பு அதிகமாக இருந்த ஒரு காலத்தில், தன்னுடைய காரில் எரிபொருள் நிறப்பிவிட்டு , அர்விந்த் பணிக்கு சென்றுவிட்டார். இது நடந்தது ஒரு சனிக்கிழமை, 1993 ஆண்டில். அப்போது நாங்கள் வசித்தது நியுயார்க்கில், சனிக்கிழமை என் சகோதரிவிட்டில் நான் இருக்க அர்விந்த் வேலைக்கு செல்வது வழக்கம். ஞாயிறன்று நாங்கள் மீண்டும் நியுயார்க் செல்வோம். அப்போது அந்த gas station வந்த ஒரு காகேசியன் பெண், அர்விந்தின் கார் ரெகிஸ்ட்ரேஷன் எண்ணை எழுதிக்கொண்டவர், அன்று மாலை மெட்டாசன் காவல் நிலையத்தில் hit and run என்று பதிவு செய்து எங்கள் எண்ணை தந்திருக்கிறார்.
அதன்பின் நியுயார்க், நியுஜெர்ஸி என்று தினமும் அர்விந்த் வேலைக்காக சென்ற போதும் காவலர்கள் நிறுத்தவில்லை. வழக்குக்கான விவரங்கள் ,கடிதங்கள் அர்விந்த் முதலில் நியுஜெர்ஸியில் மானவனாக இருந்த முகவரிக்கு சென்றிருந்திருக்கிறது. வேலை கிடைத்ததும் பணி நிமித்தம் கலிபோர்னியா சென்றதும் அதன் பின் திருமணமானபின் நியுயார்க் வந்த விவரங்கள் நியுஜெர்ஸியில் பதிந்திருக்கவில்லை. கலிபோர்னியாவில் புதிய ஓட்டுனர் உரிமை வாங்கியதாலும், நியுயார்க் வந்தவுடன் கலிபொர்னியாவிற்கு மட்டுமே விவரம் தர வேண்டி இருந்ததாலும் நியுஜெர்ஸி முகவரி மாற்றங்களை அறிந்திருக்கவில்லை. இங்கே பயண விதி மீறல்களுக்காக நிறைய வழக்குகள் உண்டு எனவே காவலர்கள் அதை கண்டுபிடிக்க 6 மாதமாவது ஆகும். நாங்கள் நியுஜெர்ஸி குடிவந்தபிறகு, தன்னுடைய கார் ரெஜிஸ்ட்ரேஷனை மாற்ற சென்ற போது அர்விந்த் மீதான கைதுக்கான வாரண்ட்டும், வழக்காடுமன்ற அழைப்பை அவமதித்த குற்றத்திற்கான வழக்கென்று சரமாரியாக வழக்குகள். ஆராய்ச்சி மாணவியாக இருந்த எனக்கு அப்போது அரசாங்க பணியில் யாரையும் தெரியாது என்பது ஒருபுறம், அர்விந்த்திற்கு இது போன்ற விவகாரங்கள் அதிக பயத்தை தந்தது ஒருபுறம். பிறகு நாங்கள் நீதிமன்றம் சென்று அர்விந்தை கைது செய்ய சொல்லி உடனடியாக கையோடு கொண்டு சென்ற ஜாமீன் கட்டி, அதன்பின் வழக்காடி வழக்கு தள்ளுபடி செய்ய 1 வருடம் ஆனது. இரவு நேரம் நாங்களாகவே காவல் நிலையம் சென்றது, இருவரும் பொறுப்பான பணிகளை செய்வது போன்ற காரணங்களால் எந்த வரைமீறல்களும் இல்லை, கைவிலங்கெல்லாம் இல்லை, போட்டோக்களும் இல்லை. எல்லாமே காதிங்களில் மட்டுமே என்ற போதும், வழக்கு தள்ளுபடியாகிவிட்ட போதும், இதனால் கிடைத்த மன உளைச்சலும், பிறகு நிரந்தர குடியுரிமை போது விளக்கம் சொல்ல வேண்டிய அவசியத்தையும் காட்டின. இதனால் எல்லா காகேசிய அமெரிக்கர்களும் அப்படி இல்லை, ஆனால் இதே ஒரு ஆபிரிக்க அமெரிக்கர், சாதாரண தின கூலிக்கு வேலை செய்பவர் சென்றிருந்தால் நிலைமை வேறாக இருந்திருக்கலாம்.
இதேபோல ஆப்பிரிக்க குழந்தைகள் கூட ஆசிரியைகளால் வார்த்தைகளால் குற்றம் சாட்டப்படுவதும் சாதாரண குழந்தைகள் கால்பந்து போட்டியில் ஒதுக்கிவைப்பதும் நடக்கிறது. என் மகன் குழந்தைகள் காப்பகம் சென்றபோது அவனுடைய நெருங்கிய நண்பனின் 3 வது பிறந்த நாளுக்கு அழைப்பு தரவில்லை. வகுப்பில் இருந்த 13 குழந்தைகளில் விடுபட்டவர்கள் என் மகன், ஒரு சீன பெற்றோருக்கு பிறந்த பெண், ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க குழந்தை மூன்றே பேர். நான் காப்பக நிர்வாகியிடம் எழுதித்தந்தேன். அப்போது ஆடம் என்ற மாணவனின் தந்தை என்னிடம் இது நிஜம், என்றோ தெரியப்போவதை இப்போதே தெரிந்து கொள்ளட்டுமே என்று சொல்ல, நான் அவரிடம் சொன்னது உன் பெற்றோரும் ஒருகாலத்தில் குடியேற வந்தவர்கள்தான் என்பதையும் நீ உணர்ந்துகொள் என்பதுதான். அதன்பின் அந்த பிறந்த நாள் பள்ளியிலேயே கொண்டாடப்பட்டது. பிறந்த நாள் இங்கே முக்கியம் இல்லை, அதன் ஊடாக தெரிந்த இன வேறுபாடு. .அதிகாரம், பொருளாதாரம் என்று எல்லா நிலையிலும் நல்ல நிலையில் இருக்கும் எனக்கு இதை தள்ளிவிட்டு போவதொன்றும் பெரிதில்லை. ஆனாலும் சில சமயங்களில் இதை ஒரு கருத்துக்காக விடுவதும் இல்லை. அந்த சம்பவம் பின் அந்த காப்பகத்தில் எல்லா குழந்தைகளுக்கும் அழைப்பு விடுக்க வில்லை என்றால் பள்ளி மூலம் அழைப்பு தர அனுமதி இல்லை என்ற ஒரு சட்டம் வர வழிவிட்டது. அவர் வீட்டுக்கு அவர் யாரை அழைக்கவும் யாரையும் ஒதுக்குவதும் அவருடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால் அதையே பொது இடத்தில் செய்யும் போது ஒதுக்கீடாக தெரிகிறது.
ஒரு இந்திய பெண் அவர்களுக்கு மேலைதிகாரியாக இருப்பதில் நிறைய ஆண்களுக்கு இங்கே சிறு நெருடல், ஆத்திரம் இருக்கிறது. ஆனாலும் நான் என் போரை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். இன்னமும் நியுஜெர்ஸியில் சில இடங்களில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் செல்வதும் இல்லை, சென்றாலும் ஒருவித அசொகரியத்தை உணர்த்தபடுவார்கள். ஆனால் அமெரிக்காவில் யாரும் எதையும் எதிர்த்து போராடுவது எளிதாக்கப்பட்டிருக்கிறது. சட்டங்கள் கடுமையானவை அதே போல தீண்டாமை குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் தண்டனையும் அதிகம். இங்கேயும் reverse discrimination என்று பேசும் கேகேசியன்கள் உண்டு. அதேபோல எந்த அரசாங்க வேலையும் குறிப்பிட்ட சதவிகிதம் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், பெண்கள் இன்னபிர சிறுபான்மையினருக்கு ஒதுக்கீடு உண்டு. அதேபோல அரசாங்க ஒப்பந்தகளும் சிறு ஒதுக்கீடு உண்டு. அதை மீறுவது கடும் குற்றம். சமீபத்தில் ஒரு பிரபல மருந்து நிறுவனம் வேலைக்குறைப்பு செய்தபோது எந்த நாட்டு பின்னனி கொண்டவர்கள் எத்தனை பேர், மொத்தம் எத்தனை பேர் வேலையை விட்டு நீக்க வேண்டும் என்று உணர்ந்து அதை சரியாக கணக்கிட்டு வேலை நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் ஆராய்ச்சி செய்ய நிதி இருந்தும் , ஒரு கொரிய விஞ்ஞானி நீக்கப்பட்டார். சிறிதுகாலம் கழித்து (3 மாதம்) மீண்டும் பணிக்கு வந்தார் என்றாலும் வழிமுறைகள் இங்கே கடைபிடிக்க படுகின்றன.
அதேபோல சில ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இந்த சட்டத்தை ஒரு துruப்பு சீட்டாக பயன்படுத்தவும் தவறுவதில்லை. வேலையில் குறை கண்டு இரண்டுமுறை எச்சரிக்கை விடுத்து பின் பணிநீக்கம் செய்தால் கூட நான் ஆப்பிரிக்க அமெரிக்கன் என்பதால்தான் இது நடந்தது என்று வழக்காடுமன்றம் போய்விடுவார்கள். இதனால் ATT, BMS, MERCK, Govt நிறுவனங்கள் நிறைய யோசித்து பல எச்சரிக்கை விடுத்த அத்தனை ஆதாரங்களையும் வைத்துக்கொள்ள வேண்டியதிருக்கிறது. ஆனால் இந்த இட ஒதுக்கீடும் சட்டங்களும் வாழ்க்கைத்தரத்தை, கல்வியறிவை மாற்றி இருக்கிறதா என்றால் சிறிதளவே என்பதுதான் உண்மை. மக்கள் மனமாற்றம் இன்னும் வெகுதூரம் போக வேண்டியதிருக்கிறது. இன்னும் வரும்