நமது எண்ணங்களை நாம் பேசுவது வேறு அதையே இன்னொருவர் பேச அவருடைய தொனிக்கேற்றமாதிரி எழுதித்தருவது வேறு. நம்முடைய ஊரில் இப்படி உரை எழுதுபவர்கள் இருக்கக்கூடும். சிறிய வயதில் தேர்தலுக்கு தேர்தல் கருணாநிதி, அண்ணா மறைந்த போது எழுதிய உரையை அடிக்கடி ஒலிபரப்புவார்கள். அதில் இருந்த அழகுக்காக கேட்க தொடங்கி இன்னமும் சில வரிகள் அதிலிருந்து என்னால் சொல்ல முடியும். இப்போதெல்லாம் உரையை பற்றி பத்திரிக்கைகளில் படிக்கும் போது சிலருடைய உரைகளில் ஆபாசம் தலைவிரித்தாடுவதையும், மாற்றுக்கருத்து கொண்டவரை மரியாதை சிறிதும் இன்றி கடிந்தும் குற்றம் கூறியும் பேசுவதாக அறிகிறேன்.
தமிழ்நாட்டில் இருந்தவரை ஊர் ஊராக பேச்சுப்போட்டிகளில் கலந்து கொள்ள சென்றிருக்கிறேன். எப்போதும் எழுதி வைத்துக்கொள்வதோ மனப்பாடம் செய்து பேசியோ எனக்கு பழக்கம் இல்லை. அமெரிக்கா வந்தபின் பேசியதெல்லாம் அறிவியல் கூட்டங்களில் மட்டுமே. நமது துறையில் பேசுவதை நிறுத்து என்று சொல்லும் வரை பேச விஷய்ம் இருக்கும் எனவே கவலையும் தேவையில்லை. எப்போதாவது துறைத்தலவர் பேச சில குறிப்புகள் தருவதோடு முடிந்துவிடும்.
மேலாண்மை படித்தபோது ஒரு விவாதத்தில் கலந்துகொள்ள, strategic திட்டமிடல் செய்து அதை ஆதரித்து பேசி பரிசு பெற்றபோது, சற்றே பெருமையாக இருந்தது. ஏனெனில் நடுவராக இருந்த அமெரிக்கர்கள், மற்ற அமெரிக்க மாணவர்களை மீறி எனக்கு பரிசு தந்தது ஆச்சரியத்தில் ஆழ்த்தியதால். பேசுகிறபோது அதுவும் ஒரு கருத்தை வலியுறுத்தி பேசும்போது திகட்டமாலும், புரிகிற மாதிரியும் இருப்பது அவசியம் என்று எப்போதும் கருத்தாக இருப்பேன்.
மாநில அளவில் பல கூட்டங்களில் விவாதங்களில் கலந்துகொள்ளும் போதும், அதுவும் நிறவேறி, ஆணாதிக்கம் நிறைந்த ஆண்கள் மத்தியில் பேசும்போதும் தவறிக்கூட தடுமாறாமல் இருப்பதில் கவனம் தேவை. சமீபத்தில் ஒரு கூட்டத்தில் உரை நிகழ்த்தியவர், CDc தலை பொறுப்பில் உள்ளவர், சொன்னது அரங்கில் இருந்தவர்கள் ஆர்வம் இழக்க, நான் மட்டும் கலந்துரையாடல் போல பேச, எளிமையாக பேசியது அரங்கில் உள்ளவர்களின் பயத்தை போக்கி இருக்க வேண்டும். அதன்பின் நான் அந்த உரையை நிகழ்த்த, மெல்ல எல்லார் பார்வையும் என்பக்கம் திரும்பியது. இந்த பெண்ணிடம் ஏதோ விஷயம் இருக்கிரது, என்பதைவிட என் தீவிரம் புரிந்திருக்க வேண்டும். நமக்கு தெரிந்த விஷயத்தை நாம் புரிந்து கொள்வது போல் இல்லாமல் எல்லோரும் புரிந்து கொள்லுமாறும், நம் அறிவு அடுத்தவர்களை பயமுறுத்தாமலும், தாழ்த்தாமலும்(intimidate) இருக்க வேண்டியது அவசியம்.
நேற்று மீண்டும் ஒரு கூட்டம் நிர்வகித்து நடத்தினேன். இதில் பேசப்பட்ட முக்கிய விஷயம் புலம் பெயர்ந்தவர்கள், கண்பார்வை மங்கியவர்கள், வாகன வசதியோ, பெட்ரோல் செலவு கொடுக்க முடியாதவர்கள் எப்படி உடல்நல குறைகள் ஏற்பட்டால் மருத்துவரை நாட முடியும் என்பதே(access to health care). இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? இந்த கூட்டத்திற்கு 100 நிறுவனங்கள், பொதுமக்கள், காவலர்கள், கோவில் மதகுருக்கள், சமூக தொண்டர்களெல்லோரையும் அழைத்திருந்தேன். கூட்டத்திற்கு வர என்ன தகுதி வேண்டும் என்றவர்களிடம், பொதுநலத்தை பற்ரிய சில எண்ணங்கள் இருந்தாலோ போதும் பேச வாருங்கள், அரசாங்கம் உங்கள் குறைகளை கேட்க விரும்புகிறது என்று சொல்லி அழைத்தேன். நியுஜெர்ஸி பேருந்து, வாடகை வாகனங்கள் (CAB), புகைவண்டி நிலைய அதிகாரிகளும் வந்திருந்தனர். இந்த பிரச்சினையை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கL என்பதையும் எனக்கு சொல்லுங்கள்.
இந்த கூட்டதில் பல விஷயங்கள் அலசப்பட்டாலும், இதன் முதன்மை பேச்சாளராக வந்திருந்த அரசியல்வாதியின் உரையை நான் எழுதினேன். எழுதியதில் அடித்தலும் திருந்த்தலும் இன்றி அவர் பேச, கூட்டம் மெய்மறந்திருந்தது. என்ன சக்தியான மக்களை கவர்ந்திழுக்கும் உரை என்று பாராட்ட, அவர் திடீரென்று எழுதியவர் நான் என்று சொல்லி என்னை எழுந்திருக்க செய்து எனக்கான அங்கீகாரம் தர எல்லோரும் கரவொலி எழுப்பி ஆராவாரம் செய்ய, என்னுடன் வந்திருந்த என் மகனுக்கு ஏக பெருமை. எந்த திட்டத்தை தந்தாலும் நிறைவாக செய்பவர் , எல்லா முறையும் நிறைவாக செய்ய முடியும் என்று காட்டியவர் என்று எங்கள் வட்ட (county) தலவர் சொன்னதும் நிறைவாக இருந்தது.
இரண்டு வாரம் முன் என் புகழ் (?) வெள்ளை மாளிகை வரை சென்றிருக்க வேண்டும். தலைவருக்கு உடல் நல குழுவில்ஆதன் கொள்கைகள் பற்றி உரை எழுத, அவ்வப்போது மக்களவையில் பேச குறிப்புகள் தர சம்மதமா என்று கேட்டு வந்த தொலைபேசியும், அதன் ஊடாக நடந்த நேர்முக தேர்வும், கடைசியில் எனக்கு குடியுரிமை இல்லை என்பதால் போய்விட்டது. இதன் அடிப்படை தகுதி முனைவர் பட்டம், ஆனால் அதையும் தவிர என்னிடம் மேலாண்மை தகுதியும், சிறந்த பாராட்டுரைகளும் இருப்பதால் இரண்டு முறை அவர்கள் தொலை பேசி அழைப்பை தவறவிட்டும் மீண்டும் கூப்பிட்டு பேசினார்கள். தொலைபேசியில் கிட்டதட்ட இரண்டு மணி உரையாடினேன்.
இதுவும் நல்லதற்குத்தான்.இல்லை என்றால் புஷ்ஷின் எல்லா செயல்களுக்கும் நானும் வசை மொழி கேட்க வேண்டியிருந்திருக்கும்:) குடியுரிமை கிடைத்ததும் மீண்டும் சொல்லுங்கள் என்று சொல்லி தொலை பேசி எண் , மின்மடல் முகவரி எல்லாம் தந்திருக்கிறார்கள். இரட்டை குடியுரிமைக்காக காத்திருந்தோம், இப்போது ஒரு ஆசை வந்திருக்கிறது. பணியின் முக்கியத்துவத்தைவிட அதிகாரம் உள்ளவர்களிடம் நேரிடையாக பேச செயலாற்ற முடியும் என்ற ஒரு நேர்மறை அனுகூலம் உண்டு.
நாளை பற்றி இன்றென்ன கவலை.