»
S
I
D
E
B
A
R
«
கல்வி பொருளாதாரம் இவற்றில் பெண்களின் நிலை-3
August 30th, 2005 by பத்மா அர்விந்த்

அளவிற்குமேல் உயர முடியாமல் தடுப்பதாகும். நிர்வாகத்தில் பதவி உயர்வு பெற்று முன்னேறுபவர்கள் ஒரு அளவு வந்ததும் இடித்துக்கொண்டு அங்கேயே இருக்கும் நிலை. பெண்கள் சட்டம், அரசியல், அறிவியல் போன்ற துறைகளில் ஒரு அளவுக்கு மேல் உயர்வு பெற தடுக்க படுகிறார்கள்.1995இல் எடுத்த கருத்து கணிப்பின்படி நிறுவனங்களில் 97% ஆண்களே உயர்திட்ட குழுவில் இருக்கிறார்கள். 1000 மிக பெரிய நிறுவனங்கள், Fortune 500 என்ற அதிக இலாபம் ஈட்டும் நிறுவபங்கள் இவற்றில் 97% உயர்திட்டகுழு அங்கத்தினர்கள் ஆண்களே. கனடாவில் 100 ஆண்களுக்கு 68 பெண்களும், இந்தியாவில் 2 பெண்களும், அமெரிக்காவில் 67 பெண்களும், நியுசிலாந்தில் 48 பெண்களும் நிர்வாக துறையில் இருக்கிறார்கள்.

கடலிஸ்ட் என்ற நிறுவனம் செய்த கருத்து கணிப்பில் இந்த குறைந்த பெண்களிலும் இன வேறுபாடு அதிகம் என்று கூறுகிறது. அமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்கர், ஐரோப்பிய பெண்கள், ஹிஸ்பானியர்கள், ஆசிய கண்டத்தை சேர்ந்த பெண்கள் 5.6% குறைவான அளவிலேயே நிர்வாகதுறையில் உள்ளனர்.இதிலும் 60% நிறத்தினால் தாழ்ந்த நிலையை சேர்ந்தவர்கல் மிக குறைந்த ஊதியத்தையே பெறுகின்றனர்.

10.6% அளவில் பெண்கள் நிர்வாக துறையில் இருந்தாலும் அமெரிக்காவில் 2 பெண்கள் தான் நிறுவன நிர்வாகிகளாக (CEO) fortune 500 நிறுவனங்களில் உள்ளனர்.

இதையும் தாண்டி முன்னேறும் பெண் நிர்வாகிகள் அதே ஊதியம் ஊக்க போனஸ் போன்றவை பெற்றாலும் அவர்களின் கீழ் நிறைய பேர் வேலைக்கு அமர்த்த படுவதில்லை. முக்கிய திட்டங்கள் அவர்களிடம் கொடுக்க படுவதில்லை.வேலையை பொறுத்தவரை ஒரே நிலையில் இருந்தாலும், அவர்கள் ஒரே மாதிரி நடத்த படுவதில்லை. இது இரண்டாம் நிலை கண்ணாடிகூறையாகும்.

மூன்றாவதாக அனைவருக்கும் தெரிந்த வீடு சூழல், அலுவலக பணி இவை இரண்டையும் பெண்கள் சரிசமமாக நிரணயிக்க வேண்டும். குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை என்றால், விடுமுறை எடுக்கும் பெண்கள் அலுவலக வேலையை திறம்படவும் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். பெரும்பாலான நாடுகளில் பெண்களே அதிகம் வீட்டு வேலைகளையும் கவனித்துக்கொள்ள வேண்டியதிருக்கிறது. நீர் கொண்டு வருவது, சமைப்பது, குழந்தைகளை, வயதானவர்களை பராமரிப்பது போன்ற வேலகளை செய்து முடித்து அலுவலகம் வந்துஅ ந்த வேலைகளையும் செய்யும் போது உடலாலும் மனத்தாலும் தளர்வடைந்தாலும் அதை காட்டுவது பணியின் முன்னேற்றததை பாதிக்கும் என்பதால் வாய்மூடி இருக்க வேண்டி இருக்கிறது.இந்த மன அழுத்தம் ஆண் பெண் இருவரும் வேலைகளை பகிர்ந்து கொள்வதாலும், நல்ல குழந்தை காப்பகங்கள் வருவதாலும் மாற்ற கூடியதே.

கடலிஸ்ட்(Catalyst) என்ற கருத்து கணிப்பு நிறுவனம் செய்த கருத்து கணிப்பின் படி ஆண் பெண் இ ருவருமே ஒரே மாதிரியான வேலை பார்த்தாலும் ஆணின் வேலையே முதன்மையானதாக கருதுவது இன்னும் குறையவில்லை என்று தெரிகிறது.

மேலும் பெண்கள் குழந்தை பேறு அதன் தொடர்பான விடுமுறைகள் இவையும் பணியில் மிக உயர்ந்த நிலைக்கு வருவதை தடைசெய்ய ஒரு காரணமாகி விடுகிறது.

பெண்மையும் ஏழ்மையும்: உலகின் ஏழ்மையில் தவிக்கும் மக்களில் 70% பெண்கள் என்று உலக சுகாதார மையம் கருத்து தெரிவிக்கின்றது. நியுசிலாந்தில் 96இல நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் 10,000$ வருமானத்திற்கு கீழே உள்ளவரில் 63% பெண்கள் என்று சொல்ல படுகிறது.

எலிசபெத் என்ற பெண்மணி 6 பேருந்துகள் மாறி குழந்தைகளை காப்பகத்தில் விட்டு விட்டு , 2மைல் தூரம் நடந்து வேலைக்கு செல்கிறாள்.எல்லா செலவுகளும் போக அவளுக்கும் அவள் குழந்தைகளுக்கும் சாப்பிட என்று இருப்பதே மாதம் 200$தான். இதில் குழந்தைகளுக்கு குளிர்கால உடை வாங்க அவளிடம் பணம் இருப்பதில்லை.இரண்டு வேலைகள் செய்ய தொடங்கி, அதன் பின் குழந்தைகளை சரிவர கவனிக்க முடியாமல் போனது. நல்ல பாதுகாப்பான சூழ்நிலை இல்லை. இந்த நிலையிலும் தன் வயிற்றுப்பாட்டை கவனித்து குழந்தைகளையும் வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் அவள் வாழ்கிறாள்.

தனித்து விடப்பட்ட பெண்கள் குழந்தைகளையும் கவனித்து, பணியும் செய்ய படுகின்ற கஷ்டம், நல்ல உணவு இன்றி உடல் நலகெடு வருவது போன்றவை சாதாரணம். இந்தியாவில் உள்ள பல கிராமங்களில் பெண்களுக்கு போதிய சுகாதார திட்டம், சத்துணவு இல்லை. வளரும் நிலையில் உள்ள பெண்கள் நல்ல சுகாதாரத்துடன் இன்றி, பிள்ளை பெரும் போது அந்த குழந்தைகள் ஊனத்துடன் பிறக்கின்றன. இது ஒரு சுழற்சியாக சென்று கொண்டிருக்கிறது. இதை மாற்ற பெண்களுக்கு சமூக கலாச்சாரத்தின் அடிப்படையில் உதவிகள் தர வேண்டும். அவர்களை ஊக்குவிக்கவும் அடிப்படை உடல் நலத்தை காக்கவும் திட்டங்கள் தீட்டுவதும் அவற்றை செயலாற்றுவதும் வேண்டும்.

பெண்கள் கல்வி நிலை: பல்கலை கழகங்களில் பெண்கள் அதிகம் படித்தாலும் அனேகம் பேர் பெண்மைத்தன்மை நிறந்ததாக உள்ள துறைகளில்தான் காணப்படுகிறார்கள். பெண்கள் படிப்பதும் திருமணம் ஆகிவிடும் போது அதை நிறுத்த தயங்குவதில்லை. நியுசிலாந்து, சுவீடன், க்யுபா, எதியோபியா போன்ற நாடுகளில் 50% குறைவான பெண்களே கல்லூரிகளில் படிக்கின்றனர். ஹாங்காங்கில் பெண்கள் 43% மட்டுமே கல்லூரிக்கு செல்கின்றனர்.

உலகம் முழுதும் பெண்கள் இன்னமும் பொறியியல் மற்றும் அறிவியல் துறையில் அதிகம் படிப்பதில்லை.

கீழே உள்ள அட்டவணை பாலியியல் விகிதங்களை அறிவியல் மற்றும் பொறியியல் (Engineering) தொழில் நுட்ப துறைகளில்(Technology) உள்ள வேறுபாட்டை காட்டும்.

நாடு பெண் ஆ ண்
வளர்ந்த நாடுகள் 69 36 31 60
தென் அ மெரிக்கா
72 42 28 56
தென் கிழக்கு ஆசியா 62 42 38 58
மேற்கு ஆசியா 70 30 47 53
தென் ஆசியா 38 30 62 70
வட ஆப்பிரிக்கா 47 28 53 72
கீழ் சஹாரா ஆப்பிரிக்க (sub Saharan( 32 28 69 72

ஆரஞ்சு வண்ணத்தில் உள்ளவை பொறியியல் மற்றும் தொழில் நுட்பதுறையை யும், கருப்பு கலைகளையும் குறிக்கிறது. படிப்பது பெண்களை பொருத்தவரை இன்னும் நிறைய கிராமங்களில் எட்டாக்கனியாகவே இருக்கின்றது. பெண்கள் கல்வி அறிவு இல்லாமல் இருந்தால் குழந்தைகளை வளார்க்க, அவர்களுக்கு தேவையான தடுப்பூசிகல் தர, தங்களது உடல்நலத்தை பேண் அதெரியாமல் இது பிரச்சினைகளை இன்னும் வளர்க்கிறது.

சிஸ்கோ (CiSCO) போன்ற நிறுவனங்கள் பள்ளியிலேயே பெண்களின் ஆர்வத்தை வளார்க்க ஊக்க உதவிகள் தந்து உற்சாகப்படுத்துகிறது. இருப்பினும் குடும்பம், பாலியல் பிரச்சினைகள் இன்ன பிறவற்றால் பெண்கள் படிப்பது இன்னும் அதிக அளாவில் வளரவில்லை. இதனால் நிறைய ஊதியம் வருகின்ற துறைக்கு அவர்களால் வர முடிவதும் இல்லை என்பதும் அவ்வாறாக இருக்க திட்டங்கள் தீட்டும் பணியில் உள்ளா மேலானா ஆண்மக்கள் விரும்புகிறார்கள் எனப்தும் தெளிவாகதெரிந்த உண்மை.

கலைகள் பல கற்று ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை என்று சொல்வது கனவாகவே இன்னும் பெரும்பாலோருக்கு இருக்கின்றது.
இந்த கட்டுடரையில் உள்ள பல தகவல்கள் கடலிஸ்ட் (catalyst) என்ற நிறுவனம் செய்த கருத்து கணிப்பு, உலக சுகாதார மையம் இணைய தளம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டது


கல்வி பொருளாதாரம் இவற்றில் பெண்களின் நிலை -1
August 28th, 2005 by பத்மா அர்விந்த்

தலைவாரி பூச்சூட்டி உன்னை
பாடசாலைக்கு போவென்று சொன்னாள் உன் அன்னை
சிலை போல ஏன் அங்கு நின்றாய்
நீ சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்
என்று வெகு நாட்களுக்கு முன்னேயே பாடல்கள் வந்தும் இன்னமும் பல கிராமங்களில் பெண்கள் பள்ளிக்கு செல்வதோ படிப்பதோ ஒரு வகை வீண்செலவாகக் கருதப்படுகிறது.
குழந்தைகளை கவனித்துக்கொள்ள, சமையல் செய்ய, தன்னைவிட வயதான அண்ணன்களை தந்தையைப் பேண, பெண்களுக்கு அதிக பயிற்சி தரப்படுகிறது. ஒரு குடும்பத்தில் அன்னையும் தந்தையும் வயலில் வேலை செய்ய வேண்டுமானால், மற்ற குழந்தைகளை கவனித்துக்கொள்வதும், வெகுதொலைவில் இருந்து குடிநீர் எடுத்து வருவதும் பெண்களின் வேலை ஆகிறது.

வளர்ந்த நாடுகளில் பெண்கள் வெறும் காரியதரிசிகளாக சித்தரிக்கப் படுகின்றனர். அழகாய் இருப்பதும், அழகுணர்ச்சியுடன் இருப்பதும் பெண்மையாக சித்தரிக்கப்பட்டு அதை செய்வதும் முக்கியமாக சிறு பருவத்திலிருந்தே சொல்லிக் கொடுக்கப் படுகிறது.

பிரித்து படிக்கும் அறிவியல் புத்தகங்கள் ஆண்குழந்தைகளுக்கும் அழகான பார்பி பொம்மைகள் பெண்களுக்குமாய், பணம் சேர்க்க வேண்டும் இவனுடைய கல்லூரிக்கும், அவளுடைய கல்யாணத்திற்கும் என்று பேசும் நடுத்தரவர்க்க பெற்றோர்கள் தங்களையும் அறியாமல் திருமணமே ஒரு பெண்ணின் கடைசி கட்ட சாதனை என்று மரத்தில் அடித்த ஆணிபோல பதிய வைக்கிறார்கள். அமெரிக்கா வந்த பின்னும் தங்கள் பிள்ளையை தனியார் பள்ளியிலும் பெண்ணை அரசின் பள்ளியிலும் விடும் பெற்றோர்களும், பெண்ணுக்கு பாட்டு, நடனம் போன்றவையும் அதே சமயம் பிள்ளைக்கு அவன் விரும்பும் விளையாட்டு எனவும் பாகுபடுத்தும் பெற்றோர் உண்டு.

இன்னும் சில இடங்களில் கல்லூரிக்கு செல்லும் பெண்கள் விருப்பத்துடன் பாடங்களை எடுத்துப் படிக்கவும் முடிவதில்லை. முன்னாளில் தட்டச்சு செய்வதும் ஆசிரியையாக இருப்பதும் மட்டுமே பரவலாக இருந்தது. அதுவும் திருமணமாகும் வரைதான். பிறகு வேலைக்கு செல்வதும் செல்லாததும் ஊதியம் பெறுவதும் அதை செலவளிக்க கணவனின் அவருடைய அன்னையின் அனுமதியை எதிர்பார்ப்பதாகவும் வாழ்க்கை நடந்தது. இப்போதும் அப்படித்தான் ஒரு வித்தியாசம், இப்போது பெண்கள் கணிணி துறையில் படித்தால் சீக்கிரம் விலை போகிறார்கள்.
ஹிலரி லிப்ஸ் என்ற பெண்களின் சமுதாய பிரச்சினைகளை ஆராய்பவர், பலரிடம், ~~சாதித்த சில மனிதர்களின் பெயர்களை சொல்ல முடியுமா|| என்றபோது, பல ஆண்கள் ஆண்களின் பெயரைத்தான் சொன்னார்களே தவிர பெண்களின் பெயரை அல்ல. இப்போதும் ஏதேனும் ஒரு துறையில் பெண்கள் சாதனை புரிந்தால் அது அதிசயமாக இருக்கிறது. ஊடகங்களில் அது செய்தியாகிறது. புள்ளியியல் கணக்கின்படி ் உலகின் அனைத்து வேலைகளிலும் 2இல்3பங்கு வேலைகளை இப்போது பெண்களும்செய்கிறார்கள். ஆனால் அதற்கேற்ற பாராட்டோ, ஊதியமோ அவர்களுக்கு கிடைப்பதில்லை.

வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் படிக்கும் பெண்களிடம் இதே கேள்வியை கேட்டாலும், அவர்களும் தயங்காமல், ஆண்களின் பெயர்களையே சாதனையாளர்களாய்ச் சொன்னார்கள். பொது சமுதாயம் இன்னமும் ஆண்களுக்கான ஒரு உலகமாகவே இருந்து வருகிறது. பல வருட சவால்கள், முரட்டுப் பிடிவாதங்கள், எதிர்ப்புகள் இவை இருந்துகூட பெண்கள் சாதிப்பதும் சாதனை புரிவதும் வெகு குறைவே.
இன்று நம்முன் இருக்கும் மிகப் பெரிய சவால், இது போல பெண்களின் முன்னேற்றத்தை தடுப்பது எது என்று கண்டறிந்து, அதைக் களை எடுப்பதும், பெண்களுக்கு ஊக்கமும் தன்னம்பிக்கையும் தருவதுமே ஆகும்

தொடர்வேன்

இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்
Comments madeராம்கி wrote:
//பெண்கள் உலகின் அனைத்து வேலைகளிலும் 2இல்3பங்கு வேலைகளை //
திருத்தம் தேவை என்று கருதுகிறேன்.

reply to this comment
28/08 22:25:49
ராம்கி wrote:
நேற்று சன் நியூஸ் தொலைக்காட்சியில் மகளிர் இட ஒதுக்கீடு குறித்து மாலனுடன் அருள்மொழி கலந்துரையாடினார். “இவர் அமைச்சர், இவர் பெண் அமைச்சர்” என்று அதிகாரத்தை ஆணிடம் பொதுவாக அளித்துவிடுவதையும் அதே இடத்திற்குப் பெண் போகும்போது பெண் என்றே பார்க்கப்படுவது குறித்தும் நன்றாக விளக்கினார் அருள்மொழி.

reply to this comment
28/08 22:35:48
kajazvizi wrote:
ஆரோக்கியமான பதிவு. தங்களது ஆளுமையை பெண்கள் புரிந்து கொள்ளவேணும். மாற்றங்கள் நிறையவே வேண்டும்.

reply to this comment
29/08 05:03:35
padma wrote:
நன்றி ராம்கி, கயல்விழி
எல்லாவிதமான வேலைகளையும் எடுத்து கொண்டால் 66% வேலைகள் பெண்களும் இப்போது செய்கிறார்கள் என்பதை குறிப்பிடுகிறேன். சுட்டியமைக்கு நன்றி

reply to this comment
29/08 07:40:02
துளசி கோபால் wrote:
நல்ல பதிவு பத்மா.

நியாயமாப் பார்த்தா 50% இட ஒதுக்கீடு கேக்கணும்.

இப்ப என்னன்னா 33கே நாமம்!


One Response  
  • திரு writes:
    January 22nd, 2007 at 2:28 pm

    //பிரித்து படிக்கும் அறிவியல் புத்தகங்கள் ஆண்குழந்தைகளுக்கும் அழகான பார்பி பொம்மைகள் பெண்களுக்குமாய், //
    பொம்மைக்கடையில் எனக்கும் வந்த கேள்வி இது தான்.

    //பணம் சேர்க்க வேண்டும் இவனுடைய கல்லூரிக்கும், அவளுடைய கல்யாணத்திற்கும் என்று பேசும் நடுத்தரவர்க்க பெற்றோர்கள் தங்களையும் அறியாமல் திருமணமே ஒரு பெண்ணின் கடைசி கட்ட சாதனை என்று மரத்தில் அடித்த ஆணிபோல பதிய வைக்கிறார்கள். //

    உண்மை.

    நல்ல பதிவு!


Leave a Reply

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions