»
S
I
D
E
B
A
R
«
கனாக்காணும் கண்கள் மெல்ல உறங்காதோ
August 25th, 2005 by பத்மா அர்விந்த்

நினைத்துப் பார்க்கவே பயமாய் இருக்கிறது. இன்னும் சில மணி நேரம்தான் அதன்பின் விரைவாக வீடு திரும்பி விடலாம் என்று தெரிந்தாலும்கூட அந்த சில மணி நேரம்கூட ஒரு நாளே கடப்பது போல தெரியும். ஆனால் எப்போது எங்கு போவோம் என்பதும் நாளையே ஒரு கேள்விக்குறியாகும் என்றால் எவ்வளவு வருத்தம் இருக்கும்? காலையில் எழுந்த உடன் என்ன செய்ய போகிறோம் என்பது நமக்கெல்லாம் நன்றாக தெரிந்ததால்தான் கவலை இன்றி நிம்மதியாக தூங்க, கலைகளை ரசிக்க நம்மால் முடிகிறது.

நன்றாக வாழ்ந்தவர்கள் குழந்தைகளுடன் மனம் நிறைய கனவுகளுடனும் இருந்தவர்கள், வன்முறை காரணமாக கவலைகளை சுமந்து ஊர்விட்டு ஊர், உடமைகளை மறந்து உயிருக்கு பயந்து குழந்தைகளுடன் ஓடிவருவது கொடுமை.
இதுபோன்ற வன்முறையில் வந்தவர்கள் இருக்கும் இல்ல த்திற்கு சென்றேன் நேற்று பிள்ளையுடன் அவன் விரும்பியதால். கோடை முகாம்கள் முடிந்து பள்ளி திறக்க இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கிறது. தனியே பிள்ளையை விட இயலாமல் நான் இரண்டு நாட்கள் வீட்டில் விடுப்பில் இருந்தேன்.இந்த இரண்டு நாட்களும் அவனுக்கே அவனுக்காய், என்ன விருப்பமோ அதை செய்ய இசைந்திருந்தேன். எனவே கடைகளுக்கும் உணவகங்களுக்கும் சென்று வருவதைவிட முதலில் விடுதிக்கு சென்றோம்.
அங்கே உள்ள குழந்தைகளுக்கு உடைகளும் புத்தகங்களும் தந்துவிட்டு சிறிது நேரம் அவர்களுடன் கழிக்க.

தவறெதுவும் செய்யாதவர்கள், வன்முறைக்கு இலக்காணவர்கள் இப்போது பாதுகாப்பு நிறைந்த இடத்தில் இருந்தாலும் இன்னும் என்ன நடக்குமோ, வெளியே சென்றால் கணவனோ நண்பனோ வந்து கடத்திகொண்டு போவார்களோ என்று ஒரு சிறைக்குள் இருப்பது போல இருக்கிறார்கள்.

இலவசமாக உணவும் உடையும் தரும் இடத்தில் எத்தனை பதவிசும் மரியாதையும் கிடைக்கும் என்பதும் தெரிந்ததே. அது போல பிள்ளைகளும் எதுவும் தெரியாமல், தங்கள் வீட்டைவிட்டு அம்மா ஓடிவந்தது ஏன் என்று புரிந்தும் புரியாமலும், பள்ளி பற்றிய கவலையுடன், விரும்பிய இடத்திற்கு சென்று விளையாட முடியாமல் அமைதியாய் இருப்பது பார்க்க கஷ்டமாய் இருந்தது.ஓடி விளையாடும் வயதில் பெரியவர்கள் போல இயல்புக்கு மீறிய அமைதியுடன் இருந்தது பொருந்தாமல் இருந்தது.அந்த குழந்தைகள் தவறெதுவும் செய்யாதவர்கள் என்றாலும் அவர்களுடன் என் மகனை தனித்து விட எனக்கேன் ஒருவித தயக்கம் இருந்தது என்று புரியவில்லை.இத்தனைக்கும் எனக்கோ அவனுக்கோ இது புதிதும் இல்லை. நான் பெண்களுடன் பேசிக்கொண்டிருந்தாலும், ஒரு கண் அவன் மீதும் குழந்தைகள் மீதும் இருந்தது. தங்கள் கோபத்தை என் மகன் மீது காட்டிவிடுவார்கள் என்ற அச்சமா, அல்லது ஒரு வித பாதுகாப்பு தரும் உணர்வா என்று புரியவில்லை. நான் சகஜமாக சற்று நேரம் ஆனது உண்மை, எனக்கே புரியாத கவலையை நினைத்தால் இப்போது வெட்கமாக இருக்கிறது.

சிறிது நேரம் விளையாடி, கதை புத்தகங்கள் படித்து திரும்பியபோது, என் மகன் திரும்பி திரும்பி பார்த்து கொண்டே வர, அந்த குழந்தைகளும் நட்போடு கை அசைத்து விடை தந்து கொண்டிருந்தார்கள் பார்வையிலிருந்து மறையும் வரை.

சினத்தை அடக்க கற்று கொள்வது முக்கியம் அதுவும் குழந்தைகள் உள்ளவர்களுக்கு இன்னும் அதி முக்கியம்.எப்போது தனக்கொரு வீடு கிடைக்கும், யார் வந்து அழைத்து செல்வார்கள் என்று புரியாமல் காத்திருக்கிறார்கள் இன்னும் எத்தனை நாள் என்பதே என்று புரியாமல் இருக்கும் குழந்தைகளை பார்த்தால் இது புரியும்.

என் பிள்ளையிடம் இருந்த சகஜ நிலைக்கு காரணம் இந்த விடுதி சிறிது நேரம் என்று முற்ரிலும் தெரிந்ததும், வீட்டிற்கு சென்று விடுவோம் என்று புரிந்ததாலும் என்று நினைக்கிறேன்.அந்த குழந்தைகள் அவ்வளவு குதூகுலம் காட்டாதது அவர்களுக்கும் இந்த விளையாட்டும் புத்தகம் படித்தலும் நிரந்தரம் இல்லை என்று புலப்பட்டிருக்க வேண்டும்.ஆனாலும் புது துணிகள் விளையாட்டு பொருட்கள் பார்த்து அவர்களுக்கு குழந்தைகளுக்கே உரிய மகிழ்ச்சி வந்தது கண்டு நிம்மதியாய்த்தான் இருந்தது இன்னும் இவர்கள் குழந்தைத்தனத்தை முற்றிலுமாக இழக்கவில்லை என்று. அமைதி இவர்களுக்கு கிடைக்க மனமார விரும்புவதை விட நான் செய்வதொன்றும் இல்லை.

இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்
Comments madeThangamani wrote:
//அமைதி இவர்களுக்கு கிடைக்க மனமார விரும்புவதை விட நான் செய்வதொன்றும் இல்லை.//

reply to this comment
25/08 15:32:27
சுரேஷ் wrote:
//சினத்தை அடக்க கற்று கொள்வது முக்கியம் அதுவும் குழந்தைகள் உள்ளவர்களுக்கு இன்னும் அதி முக்கியம்//

மிக முக்கியமானதை போகிறபோக்கில் கூறியிருக்கிறீர்கள் பத்மா. சினம் கொண்டு அதை வெளிப்படுத்திய பின் இனி இப்படி நடக்கக்கூடாதென்று பல முறை எனக்கு நானே உறுதி செய்துகொண்ட போதும் மீண்டும் இது நடக்கத்தான் செய்கிரது. வாழ்க்கை முழுவதும் கற்றுக்கொண்டேதான் இருக்க வேண்டும் போலுள்ளது.

reply to this comment
25/08 23:58:54
ராம்கி wrote:
//அந்த குழந்தைகள் தவறெதுவும் செய்யாதவர்கள் என்றாலும் அவர்களுடன் என் மகனை தனித்து விட எனக்கேன் ஒருவித தயக்கம் இருந்தது என்று புரியவில்லை//

இந்தத் திசையில் ஓரடி கூட எடுத்து வைக்காத எங்களைப் போன்றவர்கள் தான் வெட்கப்பட வேண்டும் பத்மா! நீங்கள் இதற்காக வெட்கப்பட வேண்டியதில்லை.

உங்கள் பையனுக்கு எனது வாழ்த்துக்கள்


Leave a Reply

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions